
தர்மபுரி: வானம் பார்த்த பூமியான தர்மபுரி மாவட்டத்தில் ஆற்று பாசன திட்டங்கள் ஏதும் இல்லை. மழை காலத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை வைத்தால் மட்டுமே விவசாய சாகுபடியும் சாத்தியம். ஆனாலும் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி கரும்பு, மஞ்சள் போன்ற பணப்பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் நடப்பு ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் பணப்பயிர்கள் சாகுபடி குறைந்துள்ளது. சிறு விவசாயிகள் பலர் மாற்று பயிருக்கு மாறியுள்ளனர். மாம்பழங்களை போல் தற்போது மாதுளை சாகுபடியிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாதுளை வளர்ப்பில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். தண்ணீர் செலவீனத்தை குறைக்க சொட்டு நீர் பாசன திட்டத்தை சில விவசாயிகள் செயல்படுத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கசியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் திருநீலகண்டன் (42). விவசாயி. இவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 2 ஏக்கரில் சொட்டுநீர் பாசனத்தில் மாதுளை சாகுபடி செய்துள்ளார். ஏக்கருக்கு 400 மாதுளை செடிகள் வைத்துள்ளார். தற்போது, மாதுளை விளைச்சலுக்கு வந்தள்ளது. ஒரு செடிக்கு 7 கிலோ முதல் 10 கிலோ வரை கிடைக்கிறது. தண்ணீர் விரயமும் 70 சதவீதம் குறைகிறது. இதுகுறித்து விவசாயி திருநீலகண்டன் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சியால் விவசாயத்தை விட்டு விவசாயிகள் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள எனது உறவினர் மாதுளை சாகுபடி செய்துள்ளார். அவரிடமிருந்து அதற்கான மாதுளை கன்றுகள் வாங்கி வந்து என்னுடைய விவசாய நிலத்தில் சாகுபடி செய்தேன். 2வது ஆண்டில் தற்போது அறுவடையை தொடங்கியுள்ளேன். சொட்டுநீர் பாசனத்தில் மாதுளை சாகுபடி செய்திருக்கிறேன். சொட்டு நீர் பாசனத்தில் அதிகபட்சமாக கணக்கிட்டால் 40 லிட்டர் முதல் 50 லிட்டர் தான் பயன்படுத்தியிருப்போம். உற்பத்தி செலவும் குறைகிறது. தண்ணீர் வீண் விரயம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது,’’ என்றார். நன்கு விளைச்சல் கிடைத்து வருவதை அறிந்து சுற்றுவட்டார விவசாயிகள் தினசரி தோட்டத்தை வந்து பார்த்துச் செல்கின்றனர்.
Source: Dinakaran