

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்
உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்துமுடிப்பீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் ஏற்பட்டாலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கனவாக இருந்த வீடு வாங்கும் விருப்பம் நிறைவேறும். அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குரு பகவான் 4-ல் தொடர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். எதிலும் உணர்வுபூர்வமாக அணுகாமல் யோசித்து முடிவெடுக்கவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்துப் பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.
4.10.18 முதல் 12.3.19 வரை குருபகவான் 5-ல் அமர்வதால், அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைப்பீர்கள். மகனுடைய உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். 13.3.19 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ல் மறைவதால், குடும்பத்தில் அவ்வப்போது வாக்கு வாதங்கள் ஏற்படும். சேமிப்புகள் கரையும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய நிலையும் ஏற்படும். சொத்துப் பிரச்னைக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும்.
வருடம் முழுவதும் சனிபகவான் 6-ல் நீடிப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் இருந்த தடை விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு மறைந்து, சுமுகமான சூழ்நிலை ஏற்படும்.

30.1.19 முதல் 24.2.19 வரை சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6-ல் சென்று மறைவதால், பணிச்சுமை அதிகரிக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையில் வீண் வாக்குவாதம் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
14.4.18 முதல் 12.2.19 வரை ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால், அடிக்கடி மனஇறுக்கம் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு தைராய்டு பிரச்னை போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு 12-லும், கேது 6-லும் அமர்வதால், உடல் ஆரோக்கியம் தொடர்பான வீண் கவலையில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத் துணை யுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். திருமணத் தடை நீங்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும்.
30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 7-ல் அமர்வதால், வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக் கியம் பாதிக்கப்படக்கூடும். உணவில் கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.
வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிக்க கடுமையாக உழைக்கவேண்டும். வெளிநாட்டு நிறுவனம், புகழ்பெற்ற நிறுவனம் என்று வரும் விளம்பரங்களை நம்பி, விசாரிக்காமல் பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யவேண்டாம். வைகாசி, ஆனி, புரட்டாசி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கெமிக்கல், எண்டர்பிரைசஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கார்த்திகை, மார்கழி, மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகத்தில், உங்களது திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கடுமையாக உழைத்தும், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அலைச்சல்களைத் தந்தாலும், அனுபவ அறிவால் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்
ஈரோடு மாவட்டம், பவளமலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துக்குமார சுவாமியை, பூசம் நட்சத்திர நாளன்று வழிபட்டு வாருங்கள்; மகிழ்ச்சி பெருகும்.
