அத்தியாயம் 15 – வானதியின் ஜாலம்
இளையபிராட்டி குந்தவைதேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும் ரதத்தில் ஏறிக் குடந்தை நகரை நோக்கிச் சென்றார்கள் அல்லவா? அதன் பிறகு படகில் இருந்த பெண்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பதை நாம் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும்.
“அடியே, தாரகை!, இந்தக் கொடும்பாளூர்க்காரிக்கு வந்த யோகத்தைப் பாரடி! அவள் பேரில் நம் இளையபிராட்டிக்கு என்னடி இவ்வளவு ஆசை?” என்றாள் ஒருத்தி.
“ஆசையுமில்லை, ஒன்றுமில்லையடி, வாரிணி! நாலு மாதமாக அந்தப் பெண் ஒரு மாதிரி கிறுக்குப் பிடித்தவள் போல் இருக்கிறாள். அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து தொலைக்கிறாள். தாய் தகப்பனார் இல்லாத பெண்ணை நம்மை நம்பி ஒப்புவித்திருக்கிறார்களே என்று இளையபிராட்டிக்குக் கவலை. அதனால்தான், வானதிக்கு என்ன வந்துவிட்டது என்று கேட்கச் சோதிடரிடம் அழைத்துப் போயிருக்கிறார்! ஏதாவது பேய் பிசாசுகளின் சேஷ்டையாயிருக்கலாம் அல்லவா? அப்படியிருந்தால் ஏதாவது மந்திரம் கிந்திரம் போட்டு ஓட்ட வேண்டும் அல்லவா?” என்றாள் தாரகை.
“பேயுமில்லை, பிசாசுமில்லையடி! இவளை வந்து எந்தப் பிசாசு பிடிக்கப் போகிறது? இவளே நூறு பிசாசை அடித்து ஓட்டி விடுவாளே?” என்றாள் வாரிணி.
“வானதி மயக்கம் போட்டு விழுவது கூடப் பாசாங்குதானடி! இப்படியெல்லாம் செய்தால் மெதுவாக இளவரசரைத் தன் வலையில் போட்டுக் கொண்டு விடலாம் என்று அவளுடைய எண்ணம்!” என்றாள் இன்னொருத்தி.
“நிரவதி சொல்லுவதுதான் சரி! அது மட்டுமா! அன்றைக்கு தீபத் தட்டைக் கீழே போட்டாளே? அதுகூடத் தன்னை அவர் கவனிக்க வேண்டுமென்பதற்காகச் செய்த காரியந்தான்! இரண்டு கையாலும் ஏந்திக் கொண்டிருந்த தட்டு அப்படித் தவறி விழுந்து விடுமா? அல்லது நம் இளவரசர் என்ன புலியா, கரடியா, அவரைப் பார்த்து இவள் பயப்படுவதற்கு?” என்றாள் வாரிணி.
“உடனே மூர்ச்சை போட்டு விழுந்து விட்டதாகப் பாசாங்கு செய்தாளே? அதற்கு எவ்வளவு கெட்டிக்காரத்தனம் வேண்டும்?” என்றாள் நிரவதி.
“அவள் செய்த ஜாலத்தைக் காட்டிலும் அந்த ஜாலத்தில் குந்தவைதேவியும் இளவரசரும் ஏமாந்து போனார்களே, அதுதான் பெரிய வேடிக்கை!” என்றாள் செந்திரு என்பவள்.
“பொய்யும் புனைசுருட்டும் ஜாலமும் மாய்மாலமும் செய்கிறவர்களுக்குத்தான் இது காலம்!” என்றாள் மந்தாகினி என்பவள்.
“யுத்தத்துக்குப் புறப்பட்டான பிறகு இளவரசர், திரும்பி வந்து இந்த வானதியைப் பார்த்துவிட்டுப் போனாரே, இதைவிட என்னடி வேண்டும்? அவளுடைய மாயாஜாலம் எவ்வளவு தூரம் பலித்து விட்டது பார்த்தாயா?” என்றாள் வாரிணி.
“அதெல்லாம் ஒன்றுமில்லை; இளவரசர் அவ்வளவு மேன்மையான குணமுள்ளவர். ஒரு பெண் மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் என்றால், அவளைப் பார்த்து விசாரியாமல் போவாராடி? அதிலிருந்து நீ ஒன்றும் அர்த்தம் கற்பிக்க வேண்டாம்!” என்றாள் தாரகை.
“இளவரசரைப் பற்றி நீ சொல்வது உண்மைதான். அவரைப் போன்ற குணசாலி இந்த ஈரேழு பதினாலு உலகத்திலும் வேறு யார் இருக்க முடியும்? கதைகளிலும் காவியங்களிலும் கூடக் கிடையாது; ஆனால் நான் சொல்கிறது வேறு. இவள் – இந்த வானதி – மயக்கம் போட்டு விழுந்தாளே, அது என்ன மயக்கம் தெரியுமா? அதைக் கேட்கக் ஜோதிடரிடமே போயிருக்க வேண்டியதில்லை. என்னைக் கேட்டிருந்தால் நானே சொல்லியிருப்பேன்!” என்றாள் வாரிணி.
“அது என்ன மயக்கமடி? எங்களுக்குத்தான் சொல்லேன்!” என்றாள் செந்திரு.
வாரிணி செந்திருவின் காதோடு ஏதோ சொன்னாள். “என்னடி இரகசியம் சொன்னாள்? எங்களுக்குத் தெரியக் கூடாதா?” என்று நிரவதி கேட்டாள்.
“அது சாதாரண மயக்கமில்லையாம்! மையல் மயக்கமாம்!” என்றாள் செந்திரு.
உடனே எல்லோரும் கலகலவென்று சிரித்தார்கள். அதைக் கேட்டு விட்டு நதிக் கரை மரங்களில் இருந்த பறவைகள் சடசடவென்று இறக்கையை அடித்துக் கொண்டு பறந்து சென்றன.
“நம் இளவரசர் இலங்கையிலிருந்து திரும்பி வந்தால் மறுபடியும் இவள் மாயப்பொடி போடப் பார்ப்பாள். அதற்கு நாம் இடங்கொடுத்துவிடாமல் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்!” என்று சொன்னாள் நிரவதி.
“இளவரசர் திரும்பி வருவதற்குள் இந்த வானதி பைத்தியம் பிடித்துப் பிதற்ற ஆரம்பிக்காவிட்டால் என் பெயர் தாரகை இல்லை; பெயரைத் தாடகை என்று மாற்றி வைத்துக் கொள்ளுகிறேன்!” என்றாள் தாரகை.
“அது கிடக்கட்டுமடி! இளையபிராட்டி சொல்லிவிட்டுப் போன காரியத்தை அவர் வருவதற்குள் செய்து வைக்க வேண்டாமா? வாங்களடி” என்றாள் மந்தாகினி.
பிறகு அப்பெண்களில் இருவர் படகின் அடியில் ஏற்கெனவே சிறிது பெயர்ந்திருந்த ஒரு பலகையைப் பெயர்த்து எடுத்தார்கள். பெயர்க்கப்பட்ட இடத்தில் நீளமான பெட்டி போல் அமைந்த பள்ளத்தில் ஒரு முதலை கிடந்தது! அதாவது செத்துப்போன முதலையின் உடலைப் பதப்படுத்தி உள்ளே பஞ்சும் நாரும் திணித்து வைத்திருந்த பொம்மை முதலை. அதை எடுத்து வெளியில் வைத்துக் கொண்டார்கள். படகைச் சிறிது தூரம் செலுத்திக் கொண்டு சென்று, நதிக்கரை ஓரத்தில் பெரிய பெரிய வேர்கள் விட்டு வளர்ந்திருந்த ஒரு பெருமரத்தின் அருகில் வந்தார்கள். அம்மரத்தின் ஓரத்தில் அத்தோல் முதலையை எடுத்து விட்டார்கள்.அது மர வேர்களிலே பாதியும் நதி வெள்ளத்தில் பாதியுமாகக் கிடந்தது. பார்ப்பதற்கு நிஜ முதலையைப் போலவே பயங்கரமான தோற்றம் அளித்தது. வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடாமல் ஒரு சிறிய மணிக் கயிற்றை அதன் கால் ஒன்றில் கட்டி வேரோடு சேர்த்துப் பிணைத்தார்கள். கயிறு வெளியில் தெரியாதபடி நீருக்குள்ளேயே அமுங்கியிருக்கும்படி கட்டினார்கள்.
“ஏனடி, மந்தாகினி! எதற்காக இந்தப் பொம்மை முதலையை இப்படி மரத்தடியில் கட்டி வைக்கச் சொல்லியிருக்கிறார் இளையபிராட்டி?” என்று தாரகை கேட்டாள்.
“உனக்குத் தெரியாதா? வானதி மிக்க பயந்தாங்கொள்ளியாயிருக்கிறாள் அல்லவா? அவளுடைய பயத்தைப் போக்கித் தைரியசாலி ஆக்குவதற்குத்தான்!” என்றாள் மந்தாகினி.
“எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், வானதியை இளவரசருக்குக் கலியாணம் பண்ணி வைத்துவிட வேண்டும் என்றே குந்தவைதேவி உத்தேசித்திருக்கிறார் போலிருக்கிறது!” என்றாள் நிரவதி.
“அப்படி ஏதாவது பேச்சு வந்தால் நான் இந்த வானதிக்கு விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடுகிறேன். பார்த்துக் கொண்டிரு!” என்றாள் பொறாமைக்காரியான வாரிணி.
“நீ இப்படியெல்லாம் எரிச்சல் அடைவதற்குக் காரணமே இல்லை. மானிய கேடத்து இரட்டை மண்டலச் சக்கரவர்த்தியும் வேங்கி நாட்டின் மன்னரும் கலிங்க தேசத்து ராஜாவும் வடக்கே வெகு தூரத்தில் உள்ள கன்னோசி சக்கரவர்த்தியும் கூட நம் இளவரசருக்குப் பெண் கொடுக்கக் காத்திருக்கிறார்களாம்! அப்படியிருக்க இந்தக் கொடும்பாளூர் வானதியை யாரடி இலட்சியம் செய்யப் போகிறார்கள்!” என்றாள் மந்தாகினி.
“நீ சொல்லுகிறபடி அந்த அரசர்கள் காத்திருக்கலாமடி! ஆனால் நம் இளவரசருடைய விருப்பம் அல்லவா முக்கியம்? இளவரசர் ‘நான் எப்போதாவது கலியாணம் செய்து கொண்டால் தமிழகத்துப் பெண்ணைத்தான் மணந்து கொள்வேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம்! உங்களுக்கெல்லாம் இது தெரியாதா?” என்றாள் செந்திரு.
“அப்படியானால் மிகவும் நல்லதாய்ப் போயிற்று. நாம் எல்லோரும் சேர்ந்து தனித்தனியே நம் கைவரிசையைக் காட்ட வேண்டியதுதானே? இந்த வானதியினால் முடிகிற காரியம் நம்மால் முடியாது போய்விடுமா? அவளிடம் உள்ள மாயப் பொடி நம்மிடமும் இல்லையா, என்ன?” என்றாள் தாரகை.
இப்படியெல்லாம் இந்தப் பெண்கள் பேசியதற்கு ஆதாரமான நிகழ்ச்சி என்னவென்பதை நேயர்களுக்கு இப்போது தெரிவிக்க விரும்புகிறோம்.