அத்தியாயம் 28 – இரும்புப் பிடி

0
131
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM
Click Image Below And Get Our App For Free

அத்தியாயம் 28 – இரும்புப் பிடி

திடீரென்று பொங்கிய புது வெள்ளம் போன்ற ஆச்சரியத்தின் வேகம் சிறிது குறைந்ததும், புலவர் தலைவரான நல்லன் சாத்தனார், “பிரபு! அப்படியானால், இந்தப் பாடலை இயற்றிய கவி…” என்று தயங்கினார்.

“உங்கள் முன்னால், கால்களின் சுவாதீனத்தை இழந்து, நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் புவிச் சக்கரவர்த்திதான்!” என்றார் சுந்தர சோழர்.

புலவர்களிடையே பலவித வியப்பொலிகளும் ஆஹாகாரமும் எழுந்தன. சிலர் தங்களுடைய மனோநிலையை எவ்விதம் வெளியிடுவது என்று தெரியாமல் தலையையும் உடம்பையும் அசைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் தங்களுடைய மனோநிலை இன்னதென்று தங்களுக்கே தெரியாமல் கல்லாய்ச் சமைந்திருந்தார்கள்!

சுந்தர சோழர் கூறினார்: “புலவர் பெருமக்களே! ஒரு சமயம் பழையாறையில் புலவர்களும் கவிஞர்களும் என்னைப் பார்க்க வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் உங்களில் சிலரும் இருந்திருக்கலாம். ஒவ்வொருவரும் சோழ குலத்தின் வள்ளல் தன்மையைக் குறித்து ஒவ்வொரு பாடல் சொன்னார்கள்; என்னைப் பற்றியும் பாடினார்கள். நான் ‘இவருக்கு அதைக் கொடுத்தேன்’, ‘அவருக்கு இதை அளித்தேன்’ என்றெல்லாம் பாடினார்கள். அச்சமயம் இளையபிராட்டி குந்தவையும் என் அருகில் இருந்தாள். புலவர்கள் பரிசில்கள் பெற்றுச் சென்ற பிறகு அவர்கள் பாடிய பாடல்களை அரசிளங்குமரி புகழ்ந்து பாராட்டினாள்.குந்தவையிடம் நான் ‘புலவர்களையெல்லாம் விட என்னால் நன்றாகப் பாட முடியும்’ என்று சபதம் கூறினேன். பிறகு தான் வேடிக்கையாக இந்தப் பாடலைப் பாடினேன். ‘எனக்குப் பரிசு கொடு!’ என்று கேட்டேன். குழந்தை என் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, ‘இந்தாருங்கள் பரிசு’ என்று கன்னத்துக்கு இரண்டு அறை கொடுத்தாள்! அது நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கிறது; ஆனால் ஆண்டு எட்டுக்கு மேல் ஆகிறது!…” என்றார்.

Click Image Below And Get Our App For Free

“விந்தை! விந்தை!” என்றும், “அற்புதம்! அற்புதம்!” என்றும் புலவர்கள் கூறி மகிழ்ந்தார்கள்.

குந்தவை என்ற பெயரைக் கேட்டதுமே வந்தியதேவனுக்கு மெய்சிலிர்த்தது. சோழ குலத்தில் பிறந்த அந்த இணையில்லாப் பெண்ணரசியின் எழிலையும் புலமையையும் அறிவுத்திறனையும் பற்றி அவன் எவ்வளவோ கேள்விப்பட்டதுண்டு. அத்தகைய அதிசய அரசகுமாரியைப் பெற்றெடுத்த பாக்கியசாலியான தந்தை இவர்; தாய் அதோ பக்கத்தில் அமர்ந்திருக்கும் மூதாட்டி. சுந்தர சோழர் தம் செல்வப் புதல்வியைக் குறித்துப் பேசும் போது எவ்வளவு பெருமிதத்துடன் பேசுகிறார்? அவர் குரல் எப்படித் தழுதழுத்து உருக்கம் பெறுகிறது?…

வந்தியத்தேவனுடைய வலக்கரம் அவனுடைய இடையைச் சுற்றிக் கட்டியிருந்த பட்டுத் துணிச் சுருளைத் தடவிப் பார்த்தது. ஏனெனில் குந்தவைப்பிராட்டிக்கு அவன் கொண்டு வந்திருந்த ஓலை அச்சுருளுக்குள் இருந்தது. தடவிப் பார்த்த கை திகைப்படைந்து செயலிழந்து நின்றது; அவனுடைய உள்ளம் திக்பிரமை கொண்டது. ‘ஐயோ! இது என்ன? ஓலையைக் காணோமே? எங்கே போயிற்று? எங்கேயாவது விழுந்து விட்டதோ? சக்கரவர்த்தியின் ஓலையை எடுத்தபோது அதுவும் தவறி விழுந்திருக்குமோ? எங்கே விழுந்திருக்கும்? ஒருவேளை ஆஸ்தான மண்டபத்தில் விழுந்திருக்குமோ? அப்படியானால் சின்னப் பழுவேட்டரையரின் கையில் சிக்கி விடுமோ? சிக்கிவிட்டால் அதிலிருந்து ஏதேனும் அபாயம் முளைக்குமோ? அடடா? என்ன பிசகு! எத்தனை பெரிய தவறுதல்! இதிலிருந்து எப்படிச் சமாளிப்பது?…’

குந்தவை தேவிக்கு கொணர்ந்த ஓலை தவறிவிட்டது என்று அறிந்த பிறகு வந்தியத்தேவனுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை. மேலே நடந்த பேச்சுவார்த்தைகளும் அவன் காதில் சரியாக விழவில்லை; விழுந்ததும் மனத்தில் நன்கு பதியவில்லை.

சுந்தர சோழர் வியப்புக் கடலில் மூழ்கியிருந்த புலவர் கூட்டத்தைப் பார்த்து மேலும் கூறினார்:–

“நான் விளையாட்டாகச் செய்த பாடலைக் குந்தவை யாரிடமாவது சொல்லியிருக்க வேண்டும். ஒருவேளை பழையாறை திருமேற்றளி ஆலயத்தின் ஈசான்ய பட்டாச்சாரியாரிடம் சொல்லியிருக்கலாம். அவர் இப்பாடலை நாடெங்கும் பரவும்படி செய்து என்னை உலகம் பரிகசிப்பதற்கு வழி செய்து விட்டார்!…”

“பிரபு! தாங்களே பாடியிருந்தால் என்ன? பாடல் அற்புதமான பாடல்தான்! சந்தேகமே இல்லை. தாங்கள் ‘புவிச் சக்கரவர்த்தி’யாயிருப்பதோடு ‘கவிச் சக்கரவர்த்தி’யும் ஆவீர்கள்!” என்றார் நல்லன் சாத்தனார்.

“ஆயினும், இச்சமயம் அதே பாடலை நான் பாடியிருந்தால் இன்னொரு கொடையையும் சேர்த்திருப்பேன். இந்திரனுக்கு யானையும், சூரியனுக்குக் குதிரையும், சிவனாருக்குப் பல்லக்கும் கொடுத்ததோடு நிறுத்தியிருக்க மாட்டேன்.மார்க்கண்டனுக்காக மறலியைச் சிவபெருமான் உதைத்தார் அல்லவா? அந்த உதைக்கு யமன் தப்பித்துக் கொண்டான். ஆனால் அவனுடைய எருமைக்கடா வாகனம் சிவபெருமான் கோபத்தைத் தாங்காமல் அங்கேயே விழுந்து செத்து விட்டது. வாகனமில்லாமல் யமன் திண்டாடிக் கொண்டிருந்ததையறிந்து பழையாறைச் சுந்தர சோழர் யமனுக்கு எருமைக்கடா வாகனம் ஒன்றை அனுப்பினார்!…இப்படி ஒரு கற்பனையும் சேர்த்திருப்பேன். அந்த எருமைக்கடாவின் பேரில் ஏறிக் கொண்டுதான் யமன் இப்போது ஜாம்ஜாம் என்று என்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறான். நமது தஞ்சைக் கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரால் கூட யமதர்ம ராஜனையும், அவனுடைய எருமைக்கடா வாகனத்தையும் தடுத்து நிறுத்திவிட முடியாது அல்லவா?”

இப்படிச் சுந்தர சோழர் சொன்ன போது அவர் அருகில் வீற்றிருந்த உடைய பிராட்டி வானவன்மாதேவியின் கண்களில் நீர் அருவி பெருகிற்று. அங்கிருந்த புலவர்கள் பலர் விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள்.

சின்னப் பழுவேட்டரையர் மட்டுமே மனோதிடத்துடன் இருந்தார்.

“பிரபு! தங்களுடைய சேவையில் யமனுடன் போர் தொடுக்கவும் நான் சித்தமாயிருப்பேன்!” என்றார்.

“அதற்கு ஐயமில்லை, தளபதி! ஆயினும் யமனுடன் போர் தொடுக்கும் சக்தி மானிடர் யாருக்கும் இல்லை. யமனைக் கண்டு அஞ்சாமலிருக்கத்தான் நாம் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். புலவர்களே! ‘நமனை அஞ்சோம்’ என்று தமிழகத்தில் தவப்புதல்வர் ஒருவர் பாடினார் அல்லவா?” என்றார் சக்கரவர்த்தி.

ஒரு புலவர் எழுந்து அப்பாடலைப் பாடினார்:

“நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம்
நடலையல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்…”

சக்கரவர்த்தி இந்த இடத்தில் குறுக்கிட்டு, “ஆகா! இறைவனைப் பிரத்யட்சமாகத் தரிசித்த மகானைத் தவிர வேறு யாரால் இவ்வளவு துணிச்சலாகப் பாட முடியும்? அப்பர் சுவாமிகளுக்குக் கொடிய சூலை நோய் இருந்தது; இறைவன் அருளால் நோய் நீங்கிற்று எனவே,’பிணியறியோம்’ என்று பாடியிருக்கிறார். புலவர்களே! என்னைப் பற்றியும் என் கொடைகளைப் பற்றியும் பாடுவதை நிறுத்திவிட்டு, இனி இத்தகைய அருள் வாக்கைப் பாடுங்கள்! அப்பரும், சம்பந்தரும், சுந்தரமூர்த்தியும் இதுபோல் ஆயிரக்கணக்கான பக்திமயமான தீந்தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அப்பாடல்கள் எல்லாவற்றையும் ஒருங்கு சேர்த்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? படித்தும் பாடியும் பரவசம் அடைவதற்கு ஓர் ஆயுட் காலம் போதாது அல்லவா?” என்றார்.

“அரசர்க்கரசே! தாங்கள் அனுமதித்தால் அந்தத் திருப்பணியை இப்போதே தொடங்குகிறோம்!”

“இல்லை; என்னுடைய காலத்தில் நடக்கக்கூடிய திருப்பணி அல்ல அது. எனக்குப் பின்னால்…” இவ்விதம் கூறித் தயங்கி நின்ற சுந்தர சோழர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

அரண்மனை மருத்துவர், சின்னப் பழுவேட்டரையரின் அருகில் வந்து அவர் காதில் ஏதோ சொன்னார்.

அதைக் கவனித்த சுந்தர சோழர் தூக்கிவாரிப் போட்டவரைப் போல் கண்ணை நன்கு விழித்துச் சபையோரைப் பார்த்தார். வேறொரு உலகத்திலிருந்து, மரணத்தின் வாசலிலிருந்து, யமனுலகக் காட்சியிலிருந்து, திடீரென்று திரும்பி வந்தவரைப் போல் சக்கரவர்த்தி தோன்றினார்.

“பிரபு! சங்கப் பாடல் ஒன்றைக் கேட்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தீர்கள். அதை மட்டும் சொல்லி விட்டு இவர்கள் போகலாமல்லவா?” என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

“ஆம், ஆம்; மறந்து விட்டேன் என்னுடைய உடல் மட்டும் அல்ல; உள்ளமும் சுவாதீனத்தை இழந்து வருகிறது. எங்கே? சங்கப் பாடலைச் சொல்லட்டும்!” என்றார் மன்னர்.

சின்னப் பழுவேட்டரையர் நல்லன் சாத்தனாருக்குச் சமிக்ஞை செய்தார். புலவர் தலைவர் எழுந்து கூறினார்; “அரசே! தங்களுடைய முன்னோர்களில் மிகப் பிரபலமானவர் கரிகால் பெருவளத்தார். இமயமலையில் புலிக் கொடியைப் பொறித்த மாவீரர்.அவருடைய ஆட்சிக் காலத்தில் பூம்புகார் – காவேரிப்பட்டினம் – சோழ மகாராஜ்யத்தின் தலைநகரமாயிருந்தது. பற்பல வெளிநாடுகளிலிருந்தும் பற்பல பொருள்கள் மரக்கலங்களில் வந்து இறங்கியவண்ணமிருந்தன. பூம்புகாரின் செல்வப் பெருக்கையும் வளத்தையும் வர்ணிக்கும் சங்கப் புலவர் ஒருவர் இன்னின்ன நாட்டிலிருந்து இன்னின்ன பொருள்கள் வந்தன என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அந்தப் பாடல் பகுதி இது:

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த வாரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத் தாக்கமும்…”

பாடலில் இந்த இடம் வந்தபோது சுந்தர சோழர் கையினால் சமிக்ஞை செய்யவே, புலவர் நிறுத்தினார்.

“தளபதி! கரிகால் வளவர் காலத்தில் ஈழநாட்டிலிருந்து தமிழகத்துக்கு உணவுப் பொருள் வந்து கொண்டிருந்தது என்று இப்பாடல் சொல்கிறது. அதை நான் அறிவதற்காகத்தானே இப்புலவர்களை அழைத்து வந்தீர்?”

“ஆம், அரசே!” என்று கோட்டைத் தளபதி கூறியது சிறிது ஈனஸ்வரத்தில் கேட்டது. “அறிந்து கொண்டேன்; இனி இப்புலவர்களைப் பரிசில்கள் கொடுத்து அனுப்பி விடலாம்!” என்றார் மன்னர்.

“புலவர்களே! நீங்கள் இப்போது விடைபெற்றுக் கொள்ளலாம்!” என்றார் கோட்டைத் தளபதி.

புலவர்கள், மன்னருக்கு “வாழி!” கூறிக் கோஷித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

குந்தவை தேவிக்குக் கொண்டு வந்த ஓலையைக் காணாததால் மனக்கலக்கம் அடைந்திருந்த வல்லவரையன், அப்புலவர்களுடனே தானும் நழுவி விடலாம் என்று எண்ணி எழுந்து கூட்டத்தின் நடுவில் நடந்து சென்றான்.

ஆனால், அவன் எண்ணம் நிறைவேறவில்லை. வாசற்படியை நெருங்கியபோது ஒரு வலிய இரும்புக் கை அவனுடைய கையின் மணிக்கட்டை இறுகப் பிடித்தது. வல்லவரையன் நல்ல பலசாலிதான்! ஆயினும் அந்த வஜ்ரப் பிடியின் வேகம் அவன் உச்சந்தலை முதலாவது உள்ளங்கால் வரையில் ஒரு குலுக்குக் குலுக்கி அவனைச் செயலிழந்து நிற்கும்படி செய்துவிட்டது.

அவ்விதம் பிடித்த இரும்புக்கரம் சின்னப் பழுவேட்டரையரின் கரந்தான் என்பதை நிமிர்ந்து பார்த்துத் தெரிந்து கொண்டான்.

புலவர்கள் தரிசன மண்டபத்திலிருந்து வெளியேறினார்கள்.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply