அத்தியாயம் 42 – நட்புக்கு அழகா?
வந்தியத்தேவனுடைய முதலாவது எண்ணம், எப்படியாவது கந்தமாறனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அவனைக் காப்பாற்றும் பிரயத்தனம் முதலில் செய்தால், அவனுடைய கதிதான் நமக்கும் ஏற்படும். ஆகையால் இந்தக் கொடூரக் காவலனை முதலில் சரிப்படுத்த வேண்டும். எனவே, பாய்ந்து சென்றவன் காவலனுடைய கழுத்தில் தன்னுடைய ஒரு கையைச் சுற்றி வளைத்துக் கொண்டான். இன்னொரு கையால் தீவர்த்தியைத் தட்டிவிட்டான். தீவர்த்தி தரையில் விழுந்தது. அதன் ஒளிப் பிழம்பு சுருங்கிப் புகை அதிகமாயிற்று. காவலனுடைய கழுத்தை ஒரு இறுக்கு இறுக்கி வந்தியத்தேவன் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து அவனைக் கீழே தள்ளினான். காவலனுடைய தலை சுரங்கப் பாதையின் சுவரில் மோதியது அவன் கீழே விழுந்தான். வந்தியத்தேவன் தீவர்த்தியை எடுத்துக் கொண்டு அவன் அருகில் சென்று பார்த்தான். செத்தவனைப் போல் அவன் கிடந்தான். ஆயினும் முன் ஜாக்கிரதையுடன் அவன் அங்கவஸ்திரத்தை எடுத்து இரண்டு கையையும் சேர்த்து இறுக்கிக் கட்டினான். இவ்வளவையும் சில வினாடி நேரத்தில் செய்து விட்டுக் கந்தமாறனிடம் ஓடினான். அவன் முதுகில் குத்திய கத்தியுடன் பாதி உடம்பு சுரங்கப் பாதையிலும் பாதி உடல் வெளியிலுமாகக் கிடப்பதைக் கண்டான். அவனுடைய வேலும் பக்கத்தில் விழுந்து கிடந்தது. வந்தியத்தேவன் வெளியில் சென்று கந்தமாறனைப் பிடித்து இழுத்து வெளியேற்றினான்; வேலையும் எடுத்துக் கொண்டான். உடனே கதவு தானாகவே மூடிக் கொண்டது.சுவர் அந்தப் பெரும் இரகசியத்தை மறைத்துக் கொண்டு இருள் வடிவமாக ஓங்கி நின்றது. ஓங்கி அடித்த காற்றிலிருந்து கோட்டைக்கு வெளியே வந்தாகிவிட்டது என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான்.
அடர்ந்த மரங்களும் கோட்டைச் சுவர் கொத்தளங்களும் சந்திரனை மறைத்துக் கொண்டிருந்தபடியால் நிலா வெளிச்சம் மிக மிக மங்கலாகத் தெரிந்தது. கந்தமாறனைத் தூக்கி வந்தியத்தேவன் தோளில் போட்டுக் கொண்டான். ஒரு கையில் கந்தமாறனின் வேலையும் எடுத்துக் கொண்டான். ஓர் அடி எடுத்து வைத்தான். சடசடவென்று மண் சரிந்து செங்குத்தாகக் கீழே விழும் உணர்ச்சி ஏற்பட்டது. சட்டென்று வேலை ஊன்றிக் கொண்டு பெரு முயற்சி செய்து நின்றான். கீழே பார்த்தான். மரங்களும் கோட்டைச் சுவரும் அளித்த நிழலில் நீர்ப் பிரவாகம் தெரிந்தது. அதிவேகமாகப் பிரவாகம் சுழல்கள் சுழிகளுடன் சென்று கொண்டிருந்ததும் ஒருவாறு தெரிந்தது. நல்ல வேளை! கரணம் தப்பினால் மரணம் என்ற கதி நேரிட்டிருக்கலாம். கடவுள் காப்பாற்றினார்! அந்தக் கொடும் பாதகக் காவலன் – ஆனால் அவனை நொந்து என்ன பயன்? எஜமான் கட்டளையைத் தானே அவன் நிறைவேற்றியிருக்க வேண்டும்! வாசற்படியில் முதுகில் குத்தி அப்படியே இந்தப் பள்ளப் புனல் வெள்ளத்தில் தள்ளிவிட உத்தேசித்திருக்க வேண்டும். நம்முடைய கால் இன்னும் சிறிது சறுக்கி விட்டிருந்தால் இரண்டு பேரும் இந்த ஆற்று மடுவில் விழுந்திருக்க நேர்ந்திருக்கும். நாம் ஒருவேளை தப்பிப் பிழைத்தாலும் கந்தமாறன் கதி அதோகதிதான்!
தஞ்சைக் கோட்டைச் சுவரை ஓரிடத்தில் வடவாறு நெருங்கிச் செல்வதாக வந்தியத்தேவன் அறிந்திருந்தான். இது வடவாறாகத்தான் இருக்க வேண்டும். வடவாற்றில் அதிக வெள்ளம் அப்போது இல்லையென்றாலும் இந்தக் கோட்டை ஓரத்தில் ஆழமான மடுவாக இருக்கலாம். யார் கண்டது? வேலைத் தண்ணீரில் விட்டு ஆழம் பார்த்தான் வந்தியத்தேவன். வேல் முழுவதும் தண்ணீருக்குள் சென்று முழுகியும் தரை தட்டுப்படவில்லை! ஆகா! என்ன கொடூரமான பாதகர்கள் இவர்கள்!… அதைப் பற்றி யோசிக்க இது சமயமில்லை. நாமும் தப்பிக் கந்தமாறனையும் தப்புவிக்கும் வழியைத் தேட வேண்டும். வெள்ளப் பிரவாகத்தின் ஓரமாகவே கால்கள் சறுக்கி விடாமல் கெட்டியாக அழுத்திப் பாதங்களை வைத்து வந்தியத்தேவன் நடந்தான். தோளில் கந்தமாறனுடனும் கையில் அவனுடைய வேலுடனும் நடந்தான். கந்தமாறன் இரண்டு மூன்று தடவை முக்கி முனகியது அவனுடைய நண்பனுக்குத் தைரியத்தையும் மன உறுதியையும் அளித்தது. கொஞ்ச தூரம் இப்படியே சென்ற பிறகு கோட்டைச் சுவர் விலகி அப்பால் சென்றது. கரையோரத்தில் காடு தென்பட்டது. கீழே முட்கள் நிறையக் கிடந்தபடியால் கால் அடி வைப்பதும் கஷ்டமாயிருந்தது.
ஆகா! இது என்ன? ஒரு மரம் ஆற்றில் விழுந்து கிடக்கிறதே! நல்ல உயரமான மரமாயிருந்திருக்க வேண்டும். வெள்ளம் அதனுடைய வேரைப் பறித்துவிட்டது போலும்! பாதி ஆறு வரையில் விழுந்து கிடக்கிறது. அதில் ஏறித் தட்டுத் தடுமாறி நடந்தான். வெள்ளத்தின் வேகத்தில் மரம் அசைந்து கொண்டிருந்தது. மரத்தின் கிளைகளும் இலைகளும் தண்ணீரில் அலைப்புண்டு தவித்தன. காற்றோ அசாத்தியமாக அடித்துக் கொண்டிருந்தது. மரத்தின் நுனிக்கு வந்ததும் வேலை விட்டு ஆழம் பார்த்தான். நல்லவேளை! முருகன் காப்பாற்றினார். இங்கே அவ்வளவு பள்ளமில்லை! வந்தியத்தேவன் மரத்திலிருந்து நதியில் இறங்கிக் கடந்து சென்றான். அங்கங்கே பள்ளம் மேடுகளைச் சமாளித்துக் கொண்டு சென்றான். வெள்ளத்தின் வேகத்தையும் காற்றின் தீவிரத்தையும் தன் மன உறுதியினால் எதிர்த்துப் போராடிக் கொண்டு சென்றான். அவன் உடம்பு வெடவெடவென்று சில சமயம் நடுங்கியது.
தோளில் கிடந்த கந்தமாறன் சில சமயம் நழுவி விழுந்துவிடப் பார்த்தான். இந்த அபாயங்களையெல்லாம் தப்பி வந்தியத்தேவன் அக்கரையை அடைந்தான். கொஞ்ச தூரம் இடுப்பு வரை நனைந்த ஈரத் துணியுடன் ஆஜானுபாகுவான கந்தமாறனுடைய கனமான உடலைத் தூக்கிக் கொண்டு தள்ளாடிச் சென்ற பிறகு மரநிழலில் சிறிது இடைவௌி ஏற்பட்ட ஓரிடத்தில் கந்தமாறனைக் கீழே மெதுவாக வைத்தான். முதலில் சிறிது சிரமபரிகாரம் செய்து கொள்ள விரும்பினான். அத்துடன் கந்தமாறனுடைய உடம்பில் இன்னும் உயிர் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்பினான். உயிரற்ற உடலைச் சுமந்து சென்று என்ன உபயோகம்? அதைக் காட்டிலும் அக்காவலன் உத்தேசித்தது போல் வெள்ளத்திலேயே விட்டுவிட்டுச் செல்லலாம். இல்லை! இல்லை! உயிர் இருக்கிறது; பெருமூச்சு வருகிறது. நாடி வேகமாக அடித்துக் கொள்ளுகிறது; நெஞ்சு விம்முகிறது. இப்போது என்ன செய்யலாம்? முதுகிலிருந்து கத்தியை எடுக்கலாமா? எடுத்தால் இரத்தம் பீறிட்டு அடிக்கும். அதனால் உயிர் போனாலும் போய்விடும். காயத்துக்கு உடனே சிகிச்சை செய்து கட்டுக் கட்ட வேண்டும். ஒருவனாகச் செய்யக் கூடிய காரியமல்லவே? வேறு யாரை உதவிக்குத் தேடுவது?….சேந்தன் அமுதனுடைய நினைவு வந்தது. அவனுடைய தோட்டமும் வீடும் வடவாற்றின் கரையிலேதான் இருக்கிறது. இங்கே சமீபத்திலேயே இருக்கக் கூடும். எப்படியாவது சேந்தன் அமுதனுடைய வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போய்ச் சேர்த்தால் கந்தமாறன் பிழைக்க வழியுண்டு. ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்.
கந்தமாறனை மறுபடியும் தூக்க முயன்ற போது அவனுடைய கண்கள் திறந்திருப்பதைக் கண்டு வந்தியத்தேவன் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டான்.
“கந்தமாறா! நான் யார் தெரிகிறதா?” என்று கேட்டான்.
“தெரிகிறது, நன்றாய்த் தெரிகிறது. வல்லவரையவன் நீ! உன்னைப் போல் அருமையான நண்பனைத் தெரியாமலிருக்குமா? மறக்கத்தான் முடியுமா? பின்னால் நின்று முதுகிலே குத்தும் ஆப்தசினேகிதன் அல்லவா நீ?” என்றான் கந்தமாறன்.
வல்லவரையனை இந்தக் கடைசி வார்த்தைகள் சவுக்கினால் அடிப்பது போலிருந்தது.
“ஐயோ! நானா உன்னைப் பின்னாலிருந்து குத்தினேன்…?” என்று ஆரம்பித்தவன் ஏதோ ஞாபகம் வந்து சட்டென்று நிறுத்தினான்.
“நீ குத்தவில்லை… உன் கத்தி என் முதுகைத் தடவிக் கொடுத்தது….. அடபாவி! உனக்காகவல்லவா இந்தச் சுரங்க வழியில் அவசரமாகக் கிளம்பினேன். பழுவேட்டரையருடைய ஆட்கள் உன்னைப் பிடிப்பதற்குள் நான் பிடிப்பதற்காக விரைந்தேன். உன்னை யாரும் எந்தவித உபத்திரவமும் செய்யாமல் தடுப்பதற்காக ஓடி வந்தேன். உன்னைத் தேடிப் பிடித்து வந்து சின்னப் பழுவேட்டரையரின் கோட்டைக் காவல் படையில் சேர்த்து விடுவதாகச் சபதம் கூறிவிட்டு வந்தேன். இப்படி உனக்கு நன்மை செய்ய நினைத்த நண்பனுக்கு நீ இவ்வாறு துரோகம் செய்துவிட்டாய்? இதுதானா நட்புக்கு அழகு? நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டுமென்று எத்தனை தடவை கையடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறோம்! அவ்வளவையும் காற்றில் பறக்கும்படி விட்டு விட்டாயே! இந்தச் சோழ நாட்டு இராஜாங்கத்தில் நடக்கப் போகும் ஒரு பெரிய மாறுதலைப் பற்றியும் உனக்குச் சொல்லி எச்சரிக்க எண்ணியிருந்தேனே! அடாடா! இனி இந்த உலகத்தில் யாரைத்தான் நம்புவது?” என்று சொல்லிக் கந்தமாறன் மறுபடியும் கண்களை மூடினான். இவ்வளவு அதிகமாகவும் ஆத்திரமாகவும் பேசியது அவனை மீண்டும் மூர்ச்சையடையும்படி செய்திருக்க வேண்டும்.
“நம்புவதற்கு மனிதர்களா இல்லை? பழுவேட்டரையர்களை நம்புவது?” என்று வந்தியத்தேவன் முணுமுணுத்தான். ஆயினும் அவனுடைய கண்களில் கண்ணீர் துளித்தது. தான் சொல்ல எண்ணியதைச் சொல்லாமல் விட்டதே நல்லது என்று எண்ணிக் கொண்டான். கந்தமாறனுடைய உடலை மறுபடி தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடக்கலுற்றான்.
இரவில் மலரும் பூக்களின் நறுமணம் குபீரென்று வந்தது. சேந்தன் அமுதனுடைய வீடு சமீபத்தில்தான் இருக்க வேண்டும் என்று அவன் எண்ணியது வீண் போகவில்லை. விரைவில் தோட்டம் வந்தது ஆனால் அந்தத் தோட்டம்! முதலாவது நாள் பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கு எவ்வளவு வித்தியாசம்? அனுமார் அழித்த அசோகவனத்தையும் வானரங்கள் அழித்த மதுவனத்தையும் அத்தோட்டம் அப்போது ஒத்திருந்தது. ஆகா! தன்னைத் தேடிக் கொண்டு பழுவேட்டரையரின் ஆட்கள் இங்கே வந்திருந்தார்கள் போலிருக்கிறது. வந்தவர்கள் இத்தகைய அக்கிரமங்களைச் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்! அடடா! சேந்தன் அமுதனும் அவனுடைய அருமை அன்னையும் எவ்வளவு அரும்பாடுபட்டு இந்த நந்தவனத்தை வளர்த்திருக்க வேண்டும்? அவ்வளவும் பாழாய்ப் போய்விட்டதே!
நந்தவனம் அழிந்ததில் அனுதாபம் சட்டென்று விலகியது. தன்னுடைய அபாயகரமான நிலைமை நினைவு வந்தது. ஒற்றர்களும் கோட்டைக் காவல் வீரர்களும் இங்கே சமீபத்தில் எங்கேயாவது காத்திருந்தால் என்ன செய்வது?… அவர்களை ஒரு கை பார்த்துச் சமாளிக்க வேண்டியதுதான். நல்லவேளையாக, அதோ நமது குதிரை, கட்டிய மரத்திலேயே இன்னும் இருக்கிறது!…ஒருவேளை தன்னைப் பிடிப்பதற்காகவே அதைவிட்டு வைத்திருகிறார்களோ? எப்படியிருந்தாலும் என்ன செய்ய முடியும்? இவனை இக்குடிசையில் உள்ள நல்ல மனிதர்களிடம் ஒப்புவித்து விட்டுக் குதிரையில் ஏறித் தட்டிவிட வேண்டியதுதான். இங்கே புறப்படும் குதிரை பழையாறை போய்த்தான் நிற்க வேண்டும்.
மெள்ள மெள்ள அடிமேல் அடி வைத்து நடந்து குடிசை வாசலை அடைந்தான் வாசல் திண்ணையில் படுத்திருந்த சேந்தன் அமுதனைத் தட்டி எழுப்பினான். தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்த அமுதனுடைய வாயைப் பொத்தினான். பிறகு மெல்லிய குரலில் சொன்னான்; “தம்பி! நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும். பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இவன் என் அருமை சிநேகிதன். கடம்பூர் சம்புவரையர் மகன் கந்தமாறன். நான் வரும் வழியில் யாரோ இவனை முதுகிலே குத்திப் போட்டிருந்தார்கள். எடுத்து வந்தேன்” என்றான்.
“படுபாவிகள்! முதுகிலே குத்தியிருக்கிறார்களே! எப்பேர்பட்ட சுத்த வீரர்கள்!” என்றான் அமுதன்.
பிறகு, “இவனை என்னால் முடிந்த வரை பார்த்துக் கொள்கிறேன். இன்று மாலையிலிருந்து கும்பல் கும்பலாகப் பல வீரர்கள் வந்து உன்னைத் தேடிவிட்டுப் போனார்கள். அவர்களால் நந்தவனமே அழிந்து போய் விட்டது. போனாலும் போகட்டும் நீ தப்பிப் பிழைத்தால் சரி. நல்லவேளையாக உன் குதிரையை அவர்கள் விட்டுப் போய் விட்டார்கள். குதிரையில் ஏறி உடனே புறப்படு!”
“அப்படித்தான் என் உத்தேசமும். ஆனால் இவன் உயிரைக் காப்பாற்ற ஏதேனும் செய்ய வேண்டும்!”
“அதைப் பற்றி உனக்குக் கவலை வேண்டாம். என் தாயார் இம்மாதிரி விஷயங்களில் கைதேர்ந்தவள். காயங்களுக்குச் சிகிச்சை செய்ய அவளுக்கு நன்றாய்த் தெரியும்!” என்று சொல்லி, சேந்தன் அமுதன் குடிசையின் கதவை இலேசாக இரண்டு தட்டுத் தட்டினான். உடனே கதவு திறந்தது. சேந்தன் அமுதனுடைய அன்னை வாசற்படியில் நின்றாள்.
கந்தமாறனை இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் உள்ளே கூடத்தில் போட்டார்கள். கைவிளக்கின் வெளிச்சத்தில் சேந்தன் அமுதன் தன் அன்னையுடன் சமிக்ஞையினால் பேசினான். அதை அவள் நன்கு அறிந்து கொண்டதாகத் தோன்றியது. கந்தமாறனை உற்றுப் பார்த்தாள். முதுகில் செருகியிருந்த கத்தியைப் பார்த்து, பிறகு உள்ளே போய்ச் சில பச்சிலைத் தழைகளையும் பழந்துணியையும் எடுத்துக் கொண்டு வந்தாள். இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள்.
கந்தமாறனைச் சேந்தன் அமுதன் இறுக்கிப் பிடித்துக் கொண்டான். முதுகில் இத்தனை நேரமாய் நீட்டிக் கொண்டிருந்த கத்தியை வல்லவரையன் பலங்கொண்டு இழுத்து வெளியேற்றினான்.
இரத்தம் குபீரென்று வெளியிட்டுப் பாய்ந்தது. உணர்ச்சியற்ற நிலையில் கந்தமாறன் ஓ’வென்று கத்தினான்.
வந்தியத்தேவன் அவனது வாயைப் பொத்தினான்.
காயத்தைச் சேந்தன் அமுதன் அமுக்கிப் பிடித்துக் கொண்டான்.
அமுதனுடைய அன்னை பச்சிலைத் தழைகளைக் காயத்தில் வைத்துக் கட்டினாள்.
கந்தமாறன் மறுபடியும் முக்கி முனகினான்.
தூரத்தில் திடுதிடுவென்று மனிதர்கள் ஓடிவரும் சத்தம் கேட்டது.
“போ! போ! சீக்கிரம்!” என்றான் அமுதன்.
இரத்தக் கறை படிந்த கத்தியையும் வேலையும் கையில் எடுத்துக் கொண்டான் வந்தியத்தேவன். புறப்பட்டவன் தயங்கி நின்றான்.
“தம்பி! நீ என்னை நம்புகிறாயா?” என்று கேட்டான்.
“நான் கடவுளை நம்புகிறேன். உன்னிடம் பிரியம் வைத்திருக்கிறேன். எதற்காகக் கேட்டாய்?”
“எனக்கு ஒர் உதவி செய்ய வேணும். இந்தப் பக்கத்தில் எனக்கு அவ்வளவாக வழி தெரியாது. அவசரமாகப் பழையாறைக்குப் போக வேண்டும். குந்தவைப் பிராட்டிக்கு முக்கியமான செய்தி ஒன்று கொண்டு போக வேண்டும். கொஞ்ச தூரம் வழிகாட்டுவதற்கு வருகிறாயா?”
உடனே சேந்தன் அமுதன் தன் அன்னையிடம் இன்னும் ஏதோ ஜாடையாக சொன்னான். இதிலெல்லாம் அவள் அதிக வியப்பு அடைந்ததாகத் தோன்றவில்லை. போய் வரும்படி சமிக்ஞையினால் தெரிவித்தாள். காயம் பட்டவனைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் ஜாடை காட்டினாள்.
சேந்தனும் தேவனும் புறப்பட்டுச் சென்றார்கள். முதலில் தேவனும் பின்னால் சேந்தனும் குதிரை மேல் ஏறிக் கொண்டார்கள்.
குதிரையின் சத்தம் கேளாதபடி மெதுவாகவே செலுத்தினான் வந்தியத்தேவன். சற்றுத் தூரம் போன பிறகு தட்டி விட்டான். குதிரை பாய்ச்சலில் பிய்த்துக் கொண்டு சென்றது.
குதிரை புறப்பட்ட அதே நேரத்தில் ஐந்தாறு வீரர்கள் குடிசைக்கு வந்து சேர்ந்தார்கள். கதவைத் தடதடவென்று தட்டினார்கள்.
அமுதனின் தாய் கதவைத் திறந்தாள். வாசற்படியில் நின்றாள்.
“இங்கே என்னமோ கூச்சல் கேட்டதே? அது என்ன?” என்று இரைந்தான் ஒரு வீரன்.
அமுதனின் அன்னை ஏதோ உளறிக் குளறினாள்.
“இந்தச் செவிட்டு ஊமையிடம் பேசி என்ன பயன்? உள்ளே போய்ப் பார்க்கலாம்!” என்றான் ஒருவன்.
“இவள் வழிமறித்துக் கொண்டு நிற்கிறாளே?”
“அந்தப் பூக்குடலைப் பையன் எங்கே போனான்?”
“ஊமையைத் தள்ளிவிட்டு உள்ளே நுழையுங்களடா!”
சேந்தன் அமுதனுடைய தாயார் மேலும் ஊமைப் பாஷையில் ஏதேதோ கத்தினாள்.
தன்னைத் தள்ள முயன்ற வீரனை அவள் தள்ளிவிட்டுக் கதவைத் தாளிட பார்த்தாள். நாலைந்து பேராகக் கதவைப் பிடித்துத் தள்ளிச் சாத்த முடியாதபடி செய்தார்கள்.
அமுதனுடைய தாய் இன்னும் உரத்த கூச்சல் புலம்பலுடன் திடீரென்று கதவை விட்டாள்.
இரண்டு மூன்று பேர் கீழே உருட்டியடித்துக் கொண்டு விழுந்தார்கள்.
மற்றவர்கள் அவர்களை மிதித்துக் கொண்டு உள்ளே புகுந்தார்கள்.
“ஆள் இங்கே இருக்கிறான்!” என்று ஒருவன் கத்தினான்.
“அகப்பட்டுக் கொண்டானா?” என்றான் இன்னொருவன்.
“ஓடப் போகிறான்! பிடித்துக் கட்டிப் போடுங்கள்!” என்றான் இன்னொருவன்.
ஊமை மேலும் புலம்பினாள்.
“ஒரே இரத்த விளாறாக இருக்கிறதே!” என்று ஒருவன் கூவினான்.
ஊமை கைவிளக்கைத் தூக்கிப் பிடித்துக் கீழே கிடந்தவனைச் சுட்டிக் காட்டி, “பே!பே!பே” என்றாள்.
“அடே! இவன் வேறு ஆள் போலத் தோன்றுகிறதே!”
“பே! பே!”
“நேற்று இங்கு வந்திருந்தவன் தானா இவன்?”
“பே! பே!”
“உன் மகன் எங்கே?”
“பே! பே!”
“ஊமைப் பிணமே! சற்றுச் சும்மா இரு! அடே! இவனை நன்றாய்ப் பாருங்கள்! அடையாளம் யாருக்காவது தெரியுமா?”
“அவன் இல்லை!”
“அவன்தான்!”
“இல்லவே இல்லை!”
“பே! பே!”
“எப்படியிருந்தாலும் இவன் வேற்று ஆள்! தூக்குங்கள் இவனை! கொண்டு போகலாம்!”
“பே! பே! பே! பே!”
“சனியனே! சும்மா இரு!”
நாலுபேர் சேர்ந்து கந்தமாறனைத் தூக்கினார்கள்.
“பே! பே! பே! பே!” என்று அமுதனுடைய அன்னை இடைவிடாமல் அலறினாள்.
“அடே! குதிரைச் சத்தம் கேட்கிறதடா!”
“பாதிப் பேர் இவனைத் தூக்குங்கள்! பாதிப் பேர் ஓடிப் போய்ப் பாருங்கள்!”
“எல்லோரும் ஓடுங்கள்! இவன் எங்கும் போய்விட மாட்டான்.”
தூக்கிய கந்தமாறனைக் கீழே போட்டுவிட்டு எல்லோரும் ஓடினார்கள்.
“பேப்பே! பேப்பே! பேப்பே!” என்ற அமுதன் அன்னையின் ஓலம் அவர்களைத் தொடர்ந்து வந்தது.