அத்தியாயம் 51 – மாமல்லபுரம்

0
134
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM
Click Image Below And Get Our App For Free

அத்தியாயம் 51 – மாமல்லபுரம்

நேயர்கள் ஏற்கெனவே நன்கு அறிந்துள்ள மாமல்லபுரத்துக்கு இப்போது அவர்களை அழைத்துச் செல்ல விரும்புகிறோம்.

மகேந்திர பல்லவரும் மாமல்ல நரசிம்மரும் இத்துறைமுகப்பட்டினத்தை அற்புதச் சிற்பவேலைகளின் மூலம் ஒரு சொப்பனபுரியாகச் செய்த காலத்திற்குப் பிறகு இப்போது முந்நூறு ஆண்டுகளுக்கு மேலேயே ஆகி விட்டன.

நகரத்தின் தோற்றம் ஓரளவு மங்கியிருக்கிறது. மாறுதல் நம் மனத்துக்கு மகிழ்ச்சி தரவில்லை.

மாடமாளிகைகள் இடிந்து விழுந்து பாழடைந்து கிடக்கின்றன. வீதிகளிலும் துறைமுகத்திலும் முன்போல் அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை. வர்த்தகப் பெருக்கமும் அவ்வளவாக இல்லை. பெரிய பெரிய பண்டக சாலைகள் இல்லை. வீதிகளிலெல்லாம் ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் மலை மலையாகக் குவிந்திருக்கவில்லை.

Click Image Below And Get Our App For Free

கடல் பூமிக்குள் புகுந்து ஆழம் மிகுந்த கால்வாயாக அமைந்து கப்பல்கள் வந்து பத்திரமாய் நிற்பதற்குரிய இயற்கைத் துறைமுகமாக இருந்ததை முன்னர் பார்த்தோம். இப்போது அந்தக் கால்வாயில் மணல் அடித்து அடித்துத் தூர்ந்து போய் ஆழம் வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது. ஆழமற்ற அக்கடற்கழியில் சிறிய படகுகளும் ஓடங்களும்தான் வரக்கூடும். நாவாய்களும் மரக்கலங்களும் சற்றுத் தூரத்தில் கடலிலே தான் நிற்க வேண்டும். படகுகளில் வர்த்தகப் பொருள்களை ஏற்றிச் சென்று அந்த மரக்கலங்களில் சேர்ப்பிக்க வேண்டும்.

மேலே கூறிய இடைக் காலத்தில் மாமல்லபுரம் சில புதிய சிறப்புக்களையும் அடைந்திருந்ததைக் குறிப்பிட வேண்டும்.முக்கியமாக கடற்கரையோரத்தில் விளங்கிய அழகிய கற்கோயில் நம் கண்களையும் கருத்தையும் கவர்கின்றது. அது மகேந்திரன் – மாமல்லன் காலத்தில் அமைக்கப்பட்ட குன்றுகளைக் குடைந்தெடுத்த கோவில்களைப் போன்றதல்ல. குன்றுகளிலிருந்து கற்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து கட்டப்பட்ட கோயில். சமுத்திர ராஜனுடைய தலையில் சூட்டப்பட்ட அழகிய மணிமகுடத்தைப் போல் விளங்குகிறது. அடடா! அந்தக் கோயில் அமைப்பின் அழகை என்னவென்று சொல்வது?

இதைத் தவிர நகரத்தின் நடுவே மூவுலகும் அளந்த பெருமாள் சயனித்திருக்கும் விண்ணகரக் கோயில் ஒன்றும் காட்சி அளிக்கிறது. சைவத்தையும் வைஷ்ணவத்தையும் இரு கண்களைப் போல எண்ணிப் போற்றி வளர்த்த பரமேசுவர பல்லவன் திருப்பணி செய்த விண்ணகரம் அது. திருமங்கையாழ்வார் இந்தக் கோயிலுக்கு வந்து தலசயன பெருமாளைத் தரிசித்துப் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அவருடைய காலத்திலேகூடப் பல்லவ சாம்ராஜ்யம் பெருகி வளர்ந்த சிறப்புடன் விளங்கியது என்பதையும் மாமல்லபுரம் செல்வம் கொழிக்கும் துறைமுகமாக விளங்கியது என்பதையும் பின்வரும் பாசுரத்தின் மூலம் நன்கு அறியலாம்:

     “புலன்கொள் நிதிக்குவை யொடு
புழைக்கை மா களிற்றினமும்
நலங்கொள் நவமணிக் குவையும்
சுமந்தெங்கும் நான் றொசிந்து
கலங்கள் இயங்கும் மல்லைக்
கடல் மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தா ரவரை
வலங்கொள் என் மட நெஞ்சே!”

திருமங்கையாழ்வாரின் காலத்துக்குப் பிற்பட்ட நூறாண்டுக் காலத்தில் பல்லவ சாம்ராஜ்ய சூரியன் அஸ்தமித்துவிட்டது. ‘கல்வியில் இணையில்லாத காஞ்சி’ மாநகரின் சிறப்பும் குறைந்து விட்டது. ‘கலங்கள் இயங்கும் கடல் மல்லை’யின் வர்த்தக வளமும் குன்றி வந்தது.

ஆனால் தமிழகத்துக்கு அழியாப் புகழ் அளிப்பதற்கென்று அமைந்த அந்த அமர நகரத்தின் அற்புதச் சிற்பக் கலைகளுக்கு மட்டும் எந்தவிதக் குறைவும் நேரவில்லை. பாறைச் சுவர்களில் செதுக்கப்பட்ட சித்திர விசித்திரமான சிற்பங்களும் குன்றுகளைக் குடைந்து எடுத்து அமைத்த விமான ரதங்களும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவற்றை அமைத்த காலத்தில் விளங்கியது போலவே இன்றைக்கும் புத்தம் புதியனவாக விளங்கின. பண்டங்களை ஏற்றுமதி செய்வதற்காக வந்த வர்த்தகர்களின் கூட்டத்தைக் காட்டிலும் சிற்பச் செல்வங்களைக் கண்டு களித்துப் போவதற்காக வந்த ஜனக் கூட்டம் அதிகமாயிருந்தது.

மாமல்லபுரத்து வீதிகளின் வழியாக இரட்டைக் குதிரைகள் பூட்டிய அழகிய விமான ரதம் ஒன்று சென்றது. குதிரைகளின் அலங்காரங்களும், ரதத்தின் வேலைப்பாடுகளும், பொன் தகடு வேய்ந்து மாலை வெயிலில் மற்றொரு சூரியனைப் போல் பிரகாசித்த ரதத்தின் மேல் விதானமும் அதில் இருந்தவர்கள் அரச குலத்தினராயிருக்க வேண்டும் என்பதை உணர்த்தின.

ஆம்; அந்தப் பொன் ரதத்தின் விசாலமான உட்புறத்தில் அரசகுலத்தினர் மூவர் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் தான், வீராதி வீரனும் சுந்தர சோழரின் மூத்த குமாரனுமான ஆதித்த கரிகாலன். மிக இளம்பிராயத்திலேயே இவன் போர்க்களத்துக்குச் சென்று செயற்கரும் வீரச் செயல்கள் புரிந்தான். மதுரை வீரபாண்டியனை இறுதிப் போரில் கொன்று, “வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி” என்று பட்டப் பெயர் பெற்றான். வீரபாண்டியன் வீர சொர்க்கம் அடைந்து பாண்டிய நாடு சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் வந்த உடனடியாகத்தான் சுந்தரசோழர் நோய்வாய்ப்பட்டார். ஆதித்த கரிகாலனே அடுத்த பட்டத்துக்கு உரியவன் என்பதை ஐயமற நிலைநாட்ட அவனுக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம் செய்வித்தார். அது முதலாவது கல்வெட்டுக்களில் தன் பெயரைப் பொறித்துச் சாஸனம் அளிக்கும் உரிமையும் ஆதித்த கரிகாலன் பெற்றான்.

பின்னர், தொண்டை மண்டலத்தை இரட்டை மண்டலத்துக் கன்னர தேவனுடைய ஆதிக்கத்திலிருந்து முழுதும் விடுவிக்கும் பொருட்டு ஆதித்த கரிகாலன் வடநாட்டுக்குப் பிரயாணமானான். அங்கேயும் பல போர்க்களங்களில் செயற்கரும் வீரச் செயல்களைப் புரிந்தான். இரட்டை மண்டலத்துப் படைகளை வட பெண்ணைக்கு வடக்கே துரத்தியடித்தான். மேலும் வடதிசையில் படையெடுத்துச் செல்வதற்குப் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ளுதல் அவசியமாயிற்று. ஆதலின் காஞ்சியில் வந்து தங்கிப் படை திரட்டவும் மற்றும் படையெடுப்புக்கு அவசியமான ஆயுத தளவாட சாமக்ரியைகளைத் திரட்டவும் தொடங்கினான். இந்த நிலையில் பழுவேட்டரையர்கள் அவனுடைய முயற்சிக்குத் தடங்கல் செய்யத் தொடங்கினார்கள். இலங்கைப் போர் முடிந்த பிறகுதான் வடநாட்டுப் படையெடுப்புத் தொடங்கலாம் என்று சொன்னார்கள். இன்னும் பலவிதமான வதந்திகளும் காற்றிலே மிதந்து வரத் தொடங்கின. இலங்கையில் போர் செய்யச் சென்றுள்ள படைக்குச் சோழ நாட்டிலிருந்து வேண்டிய உணவுப் பொருள் போகவில்லையென்று தெரிந்தது. இதனாலெல்லாம் ஆதித்த கரிகாலனுடைய வீர உள்ளம் துடித்துக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

நமது கதை நடந்த காலத்துக்கு முன்னும் பின்னும் சுமார் முந்நூறு ஆண்டு காலத்தில் தமிழ் அன்னையின் திருவயிற்றில் இதிகாச காவியங்களில் நாம் படிக்கும் மகா வீரர்களையொத்த வீரப் புதல்வர்கள் தோன்றிக் கொண்டிருந்தார்கள். வீமனையும் அர்ச்சுனனையும் பீஷ்மரையும் துரோணரையும் கடோத்கஜனையும் அபிமன்யுவையும் ஒத்த வீரர்கள் தமிழகத்தில் அவதரித்தார்கள். உலகம் வியக்கும்படியான தீரச் செயல்களைப் புரிந்தார்கள். போரில் அடைந்த ஒவ்வொரு வெற்றியும் இவர்களுடைய தோள்களுக்கு மேலும் வலி அளித்தன. வயது முதிர்ந்த கிழவர்கள் மலையைப் பெயர்த்தெடுக்கும் வலிமை பெற்றிருந்தார்கள். பிராயம் ஆகாத இளம் வாலிபர்கள் காற்றில் ஏறிச் சென்று வான முகட்டை அடைந்து விண்மீன்களை உதிர்க்கும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.

இப்படிப்பட்ட வீரர்கள் இருவர் அச்சமயம் ஆதித்த கரிகாலன் ஏறிச் சென்ற ரதத்தில் அவனுடன் சம ஆசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.

இவர்களில் ஒருவர் திருக்கோவலூர் மலையமான். இவர் ஆண்ட மலையமானாடு வழக்கத்தில் பெயர் சுருங்கி ‘மலாடு’ என்றும் ‘மிலாடு’ என்றும் வழங்கியது. ஆகையால் இவருக்கு ‘மிலாடுடையார்’ என்ற பட்டப் பெயர் ஏற்பட்டிருந்தது.

சுந்தர சோழ சக்கரவர்த்தியின் இரண்டாவது பத்தினியாகிய வானமாதேவி இவருடைய செல்வத் திருமகள்தான். எனவே, ஆதித்த கரிகாலனுடைய பாட்டனார் இவர். முதிர்ந்த பிராயத்திலும் நிறைந்த அறிவிலும் இவர் கௌரவர்களின் பாட்டனாரான பீஷ்மரை ஒத்திருந்தார். ஆதித்த கரிகாலன் இவரிடம் பெரும் பக்தி வைத்திருந்த போதிலும் இவருடைய புத்திமதி சில சமயம் அந்த வீர இளவரசனின் பொறுமையைச் சோதித்தது.

ரதத்தில் இருந்தவர்களில் இன்னொருவன் பார்த்திபேந்திரன். இவன் பழைய பல்லவர் குலத்திலிருந்து கிளை வழி ஒன்றில் தோன்றியவன். ஆதித்த கரிகாலனை விட வயதில் சிறிது மூத்தவன். அரசுரிமை அற்றவனாதலால் போர்க்களத்தில் தன் ஆற்றலைக் காட்டி வீரப் புகழை நிலை நாட்ட விரும்பினான். ஆதித்த கரிகாலனைச் சென்றடைந்தான். வீரபாண்டியனோடு நடத்திய போரில் ஆதித்த கரிகாலனுக்கு வலது கையைப் போல இருந்து உதவி புரிந்தான். இதனால் ஆதித்த கரிகாலனுடைய அந்தரங்க நட்புக்கு உரியவனானான். வீரபாண்டியன் விழுந்த நாளிலிருந்து இருவரும் இணை பிரியாத் தோழர்கள் ஆனார்கள்.

இந்த மூவரும் ரதத்தில் சென்றபோது தஞ்சாவூரிலிருந்து பராபரியாக வந்த செய்திகளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இந்தப் பழுவேட்டரையர்களின் அகம்பாவத்தை இனிமேல் என்னால் ஒரு கணமும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. நாளுக்கு நாள் அவர்கள் வரம்பு கடந்து போகிறார்கள். நான் அனுப்பிய தூதன் பேரில் ‘ஒற்றன்’ என்ற குற்றம் சுமத்துவதற்கு இவர்களுக்கு எத்தனை அகந்தை இருக்க வேண்டும்? அவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொன் வெகுமதி கொடுப்பதாகப் பறையறைவித்தார்களாமே? இதையெல்லாம் நான் எப்படிப் பொறுக்க முடியும்? என் உறையிலுள்ள வாள் அவமானத்தில் குன்றிப் போயிருக்கிறது. நீங்களோ பொறுமை உபதேசம் செய்கிறீர்கள்!” என்றான் ஆதித்த கரிகாலன்.

“பொறுமை உபதேசம் நான் செய்யவில்லை. ஆனால் இந்த மாதிரி முக்கியமான காரியத்துக்கு வந்தியத்தேவனை அனுப்ப வேண்டாம் என்று மட்டும் அப்போதே சொன்னேன். அந்தப் பதற்றக்காரன் காரியத்தைக் கெடுத்து விடுவான் என்று எனக்குத் தெரியும்! வாளை வீசவும் வேலை எறியவும் மட்டும் தெரிந்திருந்தால் போதுமா? இராஜ காரியமாகத் தூது செல்கிறவனுக்குப் புத்திக் கூர்மை இருக்க வேண்டும்…” என்று கூறினான் பார்த்திபேந்திரன்.

இளவரசன் கரிகாலன் வந்தியதேவனிடம் காட்டிய அபிமானம் பார்த்திபேந்திரனுக்குப் பிடிப்பதில்லை. எப்போதும் அவனைப் பற்றி ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருப்பான். அவன் செய்யும் எந்தக் காரியத்திலும் குற்றம் கண்டுபிடிப்பான். ஆகையால் இந்தச் சந்தர்ப்பத்திலும் அவ்வாறு குற்றம் சொன்னான்.

“ஆரம்பித்து விட்டாயா, உன் கதையை? வந்தியத்தேவன் பேரில் ஏதாவது சொல்லிக் கொண்டிராவிட்டால் உனக்குப் பொழுது போகாது. அவனுக்குப் புத்திக் கூர்மையில்லாவிட்டால் வேறு யாருக்கு இருக்கிறது? எந்த விதத்திலாவது, எப்படியாவது, சக்கரவர்த்தியிடம் நேரில் ஓலையைக் கொடுத்து விடவேண்டும் என்று நான் இட்ட கட்டளையை அவன் நிறைவேற்றி விட்டான். அதனால் பழுவேட்டரையர்கள் கோபங்கொண்டிருக்கிறார்கள். இதில் வந்தியத்தேவனின் தவறு என்ன?” என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.

“தாங்கள் சொல்லி அனுப்பிய காரியத்தோடு அவன் நின்றிருக்க மாட்டான். வேறு வேண்டாத காரியங்களிலும் தலையிட்டிருப்பான்!” என்றான் பார்த்திபேந்திரன்.

“நீ சற்றுச் சும்மாயிரு! தாத்தா! ஏன் இப்படி மௌனமாயிருக்கிறீர்கள்? தங்களுடைய கருத்து என்ன? ஒரு பெரும் படை திரட்டிக் கொண்டு சென்று தஞ்சாவூரிலிருந்து சக்கரவர்த்தியை மீட்டு காஞ்சிக்கு அழைத்து வந்துவிட்டால் என்ன? எத்தனை நாள் சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்கள் சிறையில் வைத்திருப்பது போல வைத்திருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருப்பது? எத்தனை நாள் பழுவேட்டரையர்களுக்குப் பயந்து காலம் கழிப்பது?” என்று பொங்கினான் ஆதித்த கரிகாலன்.

தம் வாழ் நாளில் அறுபத்தாறு போர்க்களங்களைக் கண்டு அனுபவம் பெற்றவரான திருக்கோவலூர் மலையமான் – மிலாடுடையார் – மறுமொழி சொல்லுவதற்காகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். இதற்குள் எதிரே கடல் அலைகள் தெரியவும், “முதலில் இந்த ரதத்திலிருந்து இறங்குவோம், தம்பி! வழக்கமான இடத்தில் போய் உட்கார்ந்து பேசுவோம். எனக்கு வயது ஆகி விட்டதல்லவா? ஓடுகிற ரதத்தில் பேசுவது எளிதாக இல்லை” என்றார்.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply