அத்தியாயம் 56 – அந்தப்புரசம்பவம்

0
150
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM
Click Image Below And Get Our App For Free

அத்தியாயம் 56 – அந்தப்புரசம்பவம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் காஞ்சியில் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி அரசு புரிந்த காலத்தில் நாடெங்கும் மகா பாரதக் கதையைப் படிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். பௌத்த சமண மதங்களின் பிரசாரத்தினால் மக்கள் சாதுக்களாகப் போயிருந்த தமிழ்நாட்டில் மீண்டும் வீர உணர்ச்சி தளிர்த்துப் பரவ வேண்டும் என்பதற்காக அந்த ஏற்பாடு செய்தார். பாரதக் கதை படிப்பதற்கென்றே பல ஊர்களில் பாரத மண்டபங்கள் கட்டினார். அவர் தொடங்கிய ஏற்பாடு இன்னமும் தொண்டை மண்டலத்தில் தடைப்படாமல் நடந்து வந்தது. இரவில் மக்கள் மண்டபங்களிலோ திறந்த வெளியிலோ கூடி பாரதக் கதை கேட்டார்கள். பாரதப் பெருங் கதையையும் பாரதத்திலுள்ள கிளைக் கதைகளையும் பாட்டிலும் பண்ணிலும் வசனத்திலும் அமைத்து வீராவேசத்துடன் சொல்லக் கூடிய பாடினிகள் பலர் தோன்றினார்கள்.

அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சென்றிருந்தபோது மணிபுரியை அடுத்த வனத்தில் மணிபுரி ராஜகுமாரியான சித்ராங்கியைக் கண்டான். இருவரும் காதல் கொண்டார்கள். சித்ராங்கிக்கு அரவான் என்னும் அருமைப் புதல்வன் பிறந்தான். மலைநாட்டுக் கோமகளுக்கு அர்ச்சுனனால் பிறந்த மகனாதலால் அரவான் மகா வீரனாயிருந்தான். பாரத யுத்தம் நடக்கப் போகிறது என்று அறிந்து அவனும் பாண்டவர் படையில் சேர வந்து சேர்ந்தான். போர் தொடங்குவதற்கு முன்னால் சகல இலட்சணங்களும் பொருந்திய மகா வீரனான இளைஞன் ஒருவனைக் களபலி கொடுக்க வேண்டும் என்ற பேச்சு வந்த போது, “இதோ நான் இருக்கிறேன்; என்னைக் களபலியாகக் கொடுங்கள்!” என்று அரவான் முன் வந்தான். அவனைக் காட்டிலும் சிறந்த வீரன் யாரும் பாண்டவர் பக்கத்தில் இல்லாதபடியால், தானாக முன் வந்த அரவானையே பலி கொடுக்க வேண்டியதாயிற்று.

தன்னுடைய கட்சியின் வெற்றிக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த வீர அரவானின் கதை தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. துரோபதை அம்மனுக்குக் கோயில் கட்டிய இடங்களிலெல்லாம் பக்கத்தில் அரவானுக்கும் கோயில் கட்டி திருவிழா நடத்தினார்கள்.

மாமல்லபுரத்து ஐந்து ரதங்களின் அருகில் அன்றிரவு நடந்த அரவான் கதை முடிவடைந்து விட்டதாகத் தோன்றியது. “மூன்று உலகமும் உடைய சுந்தர சோழ சக்கரவர்த்தி வாழ்க!” “கோப்பரகேசரி ஆதித்த கரிகாலர் வாழ்க!” என்று பல குரல்களில் எழுந்த கோஷங்கள் காற்றிலே மிதந்து வந்தன. கதை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எழுந்து கலையத் தொடங்கினார்கள்.

Click Image Below And Get Our App For Free

“கதை முடிந்து விட்டது. மலையமான் சிறிது நேரத்தில் திரும்பி வந்து விடுவார்” என்றான் கரிகாலன்.

“அரவான் கதை முடிந்தது; ஆனால் தாங்கள் சொல்லி வந்த கதை இன்னும் முடியவில்லையே?” என்றான் பார்த்திபன்.

“இந்தப் பிராயத்தில் மலையமானின் மனோதிடத்தைப் பார்! இன்னமும் நடுநிசி வரையில் கண் விழித்துக் கதை கேட்கப் போகிறார் பார்!” என்றான் கரிகாலன்.

“தொண்டு கிழமாகிற வரையில் உயிரோடிருப்பது அவ்வளவு அதிசயமான காரியமா! ஊரில் எத்தனையோ கிழவர்கள் இருக்கிறார்கள். இரவில் தூக்கம் பிடியாமல் கதை கேட்கப் போகிறார்கள்….”

“திருக்கோவலூர் மிலாடுடையாரை அப்படிச் சாதாரணக் கிழவர்களோடு சேர்த்து விடுகிறாயா? எத்தனை போர்க்களங்களைப் பார்த்தவர் அவர்? மலையமானின் வயதில் நாம் உயிரோடிருப்போமா என்பதே சந்தேகம். இருந்தாலும், அவரைப் போல் திடமாயிருக்க மாட்டோம்.”

“அரசே! பழைய காலத்து மனிதர்கள் திடமாயிருப்பதற்குக் காரணம் இருக்கிறது…”

“அது என்ன காரணம்?”

“அவர்கள் பெண்களின் மோகவலையில் சிக்குவதில்லை. கேவலம் ஓர் அர்ச்சகரின் மகளிடம் மனத்தைப் பறி கொடுத்துவிட்டு அவளை நினைத்து உருகிக் கொண்டிருப்பதில்லை. அப்படி எந்தப் பெண்ணிடமாவது மனம் சென்றால் அவள் கூந்தலைப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து அந்தப்புரத்தில் சேர்த்து விட்டு, வேறு வேலையைப் பார்ப்பார்கள்!…”

“பார்த்திபா! நந்தினி உண்மையில் அர்ச்சகர் வீட்டுப் பெண் அல்ல; அவளுடைய பிறப்பைக் குறித்து ஏதோ ஓர் இரகசியம் இருக்க வேண்டும்!…”

“நந்தினி யாருடைய மகளாயிருந்தால் என்ன? அர்ச்சகர் மகளாயிருந்தால் என்ன? அரசர் மகளாயிருந்தால் என்ன? அல்லது அனாதைப் பெண்ணாயிருந்தால் தான் என்ன? அந்த இன்னொரு கிழவர் பெரிய பழுவேட்டரையரைப் பாருங்கள்! எங்கேயோ வழியில் அவளைப் பார்த்தார்; உடனே இழுத்துக் கொண்டு வந்து எட்டோடு ஒன்பது என்று அந்தப்புரத்தில் அடைத்தார்…”

“நண்ப! அதை நினைத்தால் எனக்கு அதிசயமாகத்தான் இருக்கிறது!…”

“எதை நினைத்தால்? அந்தக் கிழவர் எப்படி இவளுடைய வலையில் சிக்கினார் என்பதைத்தானே?”

“இல்லை, இல்லை! ஒரு காலத்தில் என்னைக் காதலித்ததாகச் சொன்னவள், பிறகு வீரபாண்டியனைக் காதலித்து அவன் உயிரைக் காப்பாற்ற முயன்றவள், இந்தத் தொண்டு கிழவரை மணந்து கொள்ள எவ்வாறு சம்மதித்தாள்? அதை நினைத்தால்தான் அதிசயமாயிருக்கிறது.”

“எனக்கு அது ஒன்றும் அதிசயமாகத் தோன்றவில்லை, ஐயா! தங்களுடைய செயலை நினைத்தால்தான் அதிசயமாயிருக்கிறது! சோழ குலத்தின் பரம வைரியான பாண்டியன், – தோல்வியடைந்ததும் ஓடி ஒளியும் கோழையினும் கோழையானாலும் ‘வீரபாண்டியன்’ என்று பெயர் சூட்டிக் கொண்டவன், – அவனுக்கு அடைக்கலம் கொடுத்து உயிர்ப்பிச்சை கேட்டவளைத் தாங்கள் சும்மா விட்டுவிட்டு வந்தீர்களே? அதை எண்ணினால்தான் அதிசயத்திலும் அதிசயமாயிருக்கிறது. ஒன்று அவளையும் அங்கேயே கத்தியால் வெட்டிப் போட்டிருக்க வேண்டும்; அதற்கு விருப்பமில்லாவிட்டால் காலையும் கையையும் சேர்த்துக் கட்டிச் சிறைப்படுத்தி வந்திருக்க வேண்டும்! இந்த இரண்டில் ஒன்று செய்யாமல் சும்மா விட்டு விட்டு வந்தீர்களே!… இப்போது எனக்குக் கூட ஞாபகம் வருகிறது, அரசே! அந்தக் குடிசையின் வாசலில் தாங்கள் வீரபாண்டியன் உடலைத் தூக்கிக் கொண்டு வந்து போட்டீர்கள். நாங்கள் அனைவரும் வெறிகொண்டவர்களைப் போல் வெற்றி முழக்கம் செய்தோம். அதற்கு நடுவில் குடிசைக்குள்ளேயிருந்து விம்மல் சத்தம் ஒன்று வந்தது. ‘அது யார்?’ என்று நான் கேட்டேன். ‘யாரோ அர்ச்சகர் குடும்பத்துப் பெண்கள். ஏற்கெனவே அவர்கள் பீதியடைந்து கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். நீங்கள் யாரும் உள்ளே போக வேண்டாம்!” என்றீர்கள். வெற்றி வெறியில் இருந்த நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. உடனே எல்லோருமாக வீரபாண்டியனுடைய தலையை எடுத்துக் கொண்டு கிளம்பினோம், தாங்களும் எங்களுடன் வந்தீர்கள். ஆனால் எங்கள் களிப்பிலும் கொண்டாட்டத்திலும் அவ்வளவாகத் தாங்கள் கலந்து கொள்ளவில்லை. உற்சாகம் குன்றிக் காணப்பட்டீர்கள். நான் காரணம் கேட்டேன். தாங்கள் ஏதோ சமாதானம் சொன்னீர்கள். தங்களுக்கு ஏதேனும் பலமான காயம் பட்டிருக்குமோ என்று நான் சந்தேகித்துக் கேட்டது கூட எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது!” என்றான் பார்த்திபேந்திரன்.

“என் உடம்பில் ஒன்றும் காயம் படவில்லை, பார்த்திபா! உள்ளத்தில் என்றும் ஆறாத காயம் பட்டு விட்டது.வீரபாண்டியன் படுத்துக் கிடந்த கட்டிலுக்கு முன்னால் வந்து அவள் கைகூப்பி என்னிடம் உயிர்ப் பிச்சை கேட்ட காட்சி என் மனத்தை விட்டு அகலவில்லை. ‘ஐயோ! அவள் கேட்டதைக் கொடுக்காமல் போய் விட்டோமே! என்று என் மனம் பதைபதைத்தது. என் உயிரைக் கொடுப்பதின் மூலம் வீரபாண்டியனை உயிர்ப்பித்து அவளிடம் சேர்க்க முடியுமானால் அப்படியே நான் செய்திருப்பேன். இது முடியாதபடியால் என்னை நானே நொந்து கொண்டேன். பார்த்திபா! நம்முடைய வல்லமைகளைப் பற்றி நாம் எவ்வளவோ நினைத்துக் கொள்கிறோம். நம்மால் ஆகாத காரியம் ஒன்றுமேயில்லை என்று கருதி இறுமாப்பு அடைகிறோம். ‘அரசர்களிடம் மகா விஷ்ணுவின் அம்சம் இருக்கிறது’ என்று ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்திருப்பதைக் கேட்டு விட்டு, அதைக் கூட உண்மையென்று நம்பி விடுகிறோம். ஆனால், உடலை விட்டுப் பிரிந்து போன ஆவியைத் திரும்பக் கொண்டு வரும் வல்லமை நமக்கு உண்டா? அரச குலத்தில் பிறந்த யாருக்காவது இருந்திருக்கிறதா? நம்மால் உயிரை வாங்கத்தான் முடியும்; ஆனால் உயிரைக் கொடுக்கும் சக்தி மனிதர்களாய்ப் பிறந்த யாருக்கும் இல்லை!…”

“அப்படி இல்லாமலிருப்பதே மிக நல்லது. அந்த வல்லமை தங்களுக்கு இருந்திருந்தால், எவ்வளவு தவறான காரியம் நடந்து போயிருக்கும்? பாண்டியனுக்கு மறுபடியும் உயிரைக் கொடுத்திருப்பீர்கள். அவன் மீண்டும் எங்கேயாவது மலைப் பொந்தில் போய் ஒளிந்திருப்பான். பாண்டிய நாட்டு யுத்தம் ஒருவேளை இன்னும் நடந்து கொண்டிருக்கும்! இவ்வளவும் ஒரு பெண்ணின் பொய்க் கண்ணீருக்காக!” என்றான் பார்த்திபேந்திரன்.

“பல்லவா! நீ பெண் குலத்தை வெறுக்கும் துர்ப்பாக்கியசாலி! காதல் என்றால் இன்னதென்று நீ அறிய மாட்டாய்! அதனாலேயே இவ்விதம் பேசுகிறாய்!”

“ஆம்; நான் எந்தப் பெண்ணுடைய கண் வலையிலும் சிக்கியதில்லைதான். ஆனால் தங்கள் அந்தரங்கத்துக்குரிய நண்பன் வந்தியத்தேவன் மஞ்சள் பூசிய முகம் எதைக் கண்டாலும் மயங்கிப் பல்லை இளிப்பவன். ஆகையினாலேயே அவனைத் தங்களுக்கு என்னைக் காட்டிலும் பிடித்திருக்கிறது. இல்லையா, அரசே!”

“ஆகா! கடைசியில் வந்தியத்தேவனிடம் வந்து விட்டாய் அல்லவா? ஏது, இத்தனை நேரம் அவனை மறந்து விட்டாயே என்று பார்த்தேன்!”

“ஆம், அவனைப் பற்றி உண்மையைச் சொன்னால் தங்களுக்குக் கசப்பாகவே இருக்கும். அந்தப் பேச்சை விட்டு விடுகிறேன். பிறகு என்ன நடந்தது, அரசே! நந்தினியை மறுபடியும் தாங்கள் சந்திக்கவே இல்லையா? வீரபாண்டியனுக்காக உருகினவள் எப்படிக் கிழவர் பழுவேட்டரையரை மணந்தாள் என்று அவளைக் கேட்கவே இல்லையா?”

“வீரபாண்டியனைக் கொன்ற இரவில் வெற்றிக் கோலாகலங்களுக்குப் பிறகு நீங்கள் எல்லாரும் பாசறைகளில் படுத்துத் தூங்கினீர்கள். எனக்கோ தூக்கம் வரவேயில்லை. அவளை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று என் உடம்பிலுள்ள ஒவ்வொரு நரம்பும் துடித்தது. அவளைப் பார்த்து ஏதேனும் சமாதானம் சொல்ல வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று விரும்பினேன். மற்றொரு சமயம் அவள் பேரில் எனக்குப் பொங்கி எழுந்த கோபத்தைக் கொட்ட வேண்டும் என்று ஆவேசம் உண்டாயிற்று. எப்படியாவது அவளைப் பார்த்தாலொழிய மனநிம்மதி ஏற்படாது, சோழ நாட்டுக்குத் திரும்பிப் போக முடியாது என்று தோன்றியது. ஆகையால், நள்ளிரவில் நீங்கள் யாரும் அறியாமல் பாசறையிலிருந்து புறப்பட்டுக் குதிரை ஏறிச் சென்றேன். வைகை நதியின் நடுவிலிருந்த தீவை அடைந்தேன். மனம் பதைபதைக்க, உடம்பெல்லாம் நடுங்க, கால்கள் தள்ளாட, குதிரையிலிருந்து இறங்கி, மெள்ள மெள்ள நடந்து பெருமாள் கோயிலுக்கு அருகில் சென்றேன். அங்கேயிருந்த குடிசைகள் எல்லாம் எரிந்து சாம்பலாகிக் கிடப்பதைக் கண்டேன். ஒரு வயோதிகரும் வயோதிக ஸ்திரீயும் எரிந்த குடிசைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சென்று பார்த்ததில் அவர்கள்தான் முன்னொரு தடவை நந்தினியைப் பழையாறை அரண்மனைத் தோட்டத்துக்கு அழைத்து வந்தவர்கள் என்று தெரிந்தது. என்னைப் பார்த்ததும் அவர்களுடைய துக்கமும் பீதியும் பன்மடங்கு ஆயின.

முதலில் அவர்களால் எதுவுமே பேச முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைத் தைரியப்படுத்தி விசாரித்தேன். ஆற்றுக்கு அக்கரையில் இருந்த கிராமத்தில் அவர்களுடைய மூத்த குமாரி இருந்தாளாம். அவளுக்குப் பிரசவ காலம் என்று அறிந்து அவளைப் பார்த்து வரப் போயிருந்தார்களாம். நந்தினி அவர்களுடன் வர மறுத்து விட்டாளாம். மனம் போனபடி நடந்து பழக்கமுள்ள அந்தப் பிடிவாதக்காரப் பெண்ணை ஒன்றும் செய்ய முடியாமல் அவர்கள் மட்டும் போய் விட்டுத் திரும்பி வந்தார்களாம். வழியில் யாரோ சில முரடர்கள் ஒரு பெண்ணைக் காலையும் கையையும் கட்டி, எரிந்து கொண்டிருந்த சிதையில் பலவந்தமாகப் போட முயன்றதை அவர்கள் பார்த்தார்களாம். யுத்த காலத்தில் இத்தகைய விபரீதங்கள் நடப்பது இயல்பு என்று எண்ணி அவர்களுக்கு அருகில் போகவும் பயந்து கொண்டு விரைவாக இங்கே வந்து சேர்ந்தார்களாம். வந்து பார்த்தால் குடிசைகள் பற்றி எரிந்து கிடந்தனவாம். நந்தினியையும் காணவில்லையாம். இந்த விவரத்தைச் சொல்லிவிட்டு அர்ச்சகரும் அவர் மனைவியும், ‘இளவரசே! எங்கள் மகள் எங்கே? எங்கள் அருமைக் குமாரி எங்கே?’ என்று கதறினார்கள். அவர்கள் நந்தினியின் உண்மைப் பெற்றோர்கள் அல்லவென்று எனக்கு முன்னமே தெரிந்திருந்தது. இப்போது அது சர்வ நிச்சயமாயிற்று. உண்மையில் பெற்றவர்களாயிருந்தால் இப்படித் தனியாக விட்டு விட்டுப் போயிருப்பார்களா? ஆகையால் அவர்கள் பேரில் எனக்கு இரக்கமோ அனுதாபமோ உண்டாகவில்லை. நந்தினியின் கதியைப் பற்றிச் சொல்ல முடியாத துக்கம் ஏற்பட்டு நெஞ்சை அடைத்தது. ‘உங்கள் மகள் எரிந்த சிதையைத் தேடிப் போய் நீங்களும் எரிந்து செத்துப் போங்கள்!’ என்று வயிற்றெரிச்சல் தீர அவர்களைச் சபித்து விட்டு, திரும்பிப் பொழுது விடிவதற்குள் பாசறைக்கு வந்து சேர்ந்தேன். நீங்கள் எல்லாரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தீர்கள். நான் போனது, திரும்பி வந்தது ஒன்றும் உங்களில் யாருக்கும் தெரியாது…”

“ஆம்; இளவரசே! தெரியாதுதான். அதற்குப் பிறகும் இத்தனை காலமாக இதையெல்லாம் தங்கள் மனத்திலேயே வைத்துக் கொண்டிருந்ததை நினைத்தால் வியப்பாயிருக்கிறது. சிநேக தர்மத்துக்கு இவ்வளவு மாறாகத் தாங்கள் நடந்து கொள்வீர்கள் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களுடைய நிலையில் நான் இருந்திருந்தால் தங்களிடம் சொல்லாமல் இருந்திருக்க மாட்டேன்” என்றான் பார்த்திபன்.

“ஆனால் நீ என்னுடைய நிலையில் இல்லையே, பார்த்திபா! இந்த உலகில் யாருமே என்னுடைய நிலையில் இருந்திருக்க முடியாது. என் நிலையில் இருந்திருந்தால், நீ எப்படி நடந்து கொண்டிருப்பாய் என்று யார் சொல்ல முடியும்?” என்றான் கரிகாலன்.

“அரசே! நடந்து போனதைப் பற்றி இப்போது நமக்குள் விவாதம் வேண்டாம். அப்புறம் என்ன நடந்தது? நந்தினியைப் பிறகு எப்போது பார்த்தீர்கள்? பழுவூர் இளையராணி ஆன பிறகா? அதற்கு முன்னமேயா?”

“அதற்கு முன்னால் நான் பார்த்திருந்தால், அவள் பழுவூர் ராணி ஆகியிருக்கமாட்டாள். பழுவேட்டரையரின் கலியாணம் நடந்தபோது நானும் நீயும் ஊரில் இல்லை. அந்தச் செய்தி வந்தபோது நாம் இருவரும் அருவருப்போடு பேசிக் கொண்டது உனக்கு நினைவில் இருக்குமே? அதற்குச் சில நாளைக்குப் பிறகு எனக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம் நடந்தது. அடுத்த பட்டம் யாருக்கு என்பதைப் பற்றிச் சந்தேகம் எதுவும் இருக்கக் கூடாது என்றுதான் என் தந்தையும் பாட்டியும் மற்ற பெரியோர்களும் சேர்ந்து அந்த ஏற்பாடு செய்தார்கள். மதுராந்தகனுக்கு யாராவது துர்ப்போதனை செய்து தூபம் போட்டு விடப் போகிறார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருந்ததோ என்னமோ? இளவரசுப் பட்டம் கட்டியதோடு, பரகேசரிப் பட்டம் அளித்து என் பெயராலேயே கல்வெட்டு சாஸனம் ஏற்படுத்தும் உரிமையையும் அளித்தார்கள். ‘இனி இச்சோழ சாம்ராஜ்யத்தை ஆளும் பொறுப்பு முழுதும் உனக்கே’ என்று என் அருமைத் தந்தை மனதார, வாயாரக் கூறினார். அதை நாட்டார், நகரத்தார், அமைச்சர்கள், தளபதிகள் அனைவரும் ஒப்புக் கொண்டு ஜயகோஷம் செய்தார்கள். இந்தக் கோலாகலத்தில் நான் நந்தினியை அடியோடு மறந்திருந்தேன். ஆனால் பட்டாபிஷேகச் சடங்கு நடந்து முடிந்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவளை நான் என்றும் மறக்க முடியாத சம்பவம் நேர்ந்தது.

“பழமையான சோழர் குலத்து மணிமகுடத்துடன் என்னைச் சக்கரவர்த்தி அந்தப்புரத்துக்கு அழைத்துப் போனார். என் அன்னையிடமும் பாட்டியிடமும் மற்ற அந்தப்புர மாதரிடமும் ஆசி பெறுவதற்காக அழைத்துப் போனார். என்னைத் தொடர்ந்து என் சகோதரனும் முதன் மந்திரியும் பழுவேட்டரையர்களும் வந்தார்கள். அந்தப்புரத்தில் வயது மிகுந்த தாய்மார்களோடு, என் தங்கையும் அவளுடைய தோழிகளும் மற்றும் பல இளமங்கையரும் கூட்டமாக நின்றார்கள். எல்லாரும் ஆடை ஆபரணங்களினால் ஜொலித்துக் கொண்டு மகிழ்ச்சியினால் மலர்ந்த முகங்களோடு எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆனால் அத்தனை முகங்களிலும் ஒரே ஒரு முகந்தான் என் கண்ணுக்குத் தெரிந்தது, அது நந்தினியின் முகந்தான். எரிந்து சாம்பராய்ப் போனாள் என்று நான் எண்ணியிருந்த என் இதய தேவதை தான் அவள்! அந்த அரண்மனை அந்தப்புரத்துக்குள் அவள் எப்படி வந்தாள்? அவ்வளவு பிரமாதமான ஆடை அலங்காரங்களுடன் ராணிகளுக்குள் நடுநாயகமான மகாராணியாக அங்கே எப்படி நிற்கிறாள்? அவள் முகத்தில்தான் என்ன மந்தகாஸம்? அவளுடைய சௌந்தரியம் முன்னைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாயிருப்பது எப்படி? சில கண நேரத்திற்குள் என் உள்ளம் பற்பல ஆகாசக் கோட்டைகளைக் கட்டிவிட்டது! சோழ சாம்ராஜ்யத்திற்கு உரியவன் என்று நான் முடிசூட்டிக் கொண்ட அன்றைய தினம் உண்மையிலேயே என் வாழ்நாளில் அதிர்ஷ்ட தினம் ஆகப் போகிறதா? என் உள்ளத்தைக் கவர்ந்த ராணியை என் பட்ட மகிஷியாகவும் அடையப் போகிறேனா? ஏதோ, ஓர் அதிசயமான இந்திர ஜாலத்தினால், மந்திர சக்தியினால், அவ்விதம் நடக்கப் போகிறதா?… இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கையில் என் அன்னை வானமாதேவி முன்னால் இரண்டு அடி நடந்து வந்து ‘குழந்தாய்!’ என்று சொல்லி என்னை ஆசீர்வதித்து உச்சி மோந்தாள்! அதே சமயத்தில் யாரும் எதிர்பாராத அச்சம்பவம் நடந்து விட்டது. என் தந்தை ‘ஆ!’ என்று ஒரு கூச்சலிட்டு விட்டுத் திடீரென்று தரையில் சுருண்டு விழுந்து மூர்ச்சை அடைந்தார். உடனே, அவ்விடத்தில் பெருங்குழப்பமாகிவிட்டது. நானும் மற்ற எல்லாரும் சக்கரவர்த்தியைத் தூக்கி உட்கார வைத்து மூர்ச்சை வெளிவிப்பதில் கவனம் செலுத்தினோம். என் அன்னையையும், பாட்டி செம்பியன் மாதேவியையும் தவிர மற்ற மாதர் அனைவரும் உள்ளே சென்று விட்டார்கள். தந்தைக்குச் சீக்கிரத்தில் மூர்ச்சை வெளிந்து விட்டது.

“என் சகோதரி குந்தவையைத் தனி இடத்துக்கு நான் அழைத்துச் சென்று, ‘நந்தினி அங்கே எப்படி வந்தாள்?’ என்று கேட்டேன். நந்தினி பெரிய பழுவேட்டரையரை மணந்து கொண்டு இப்போது பழுவூர் இளையராணியாக விளங்குகிறாள் என்று குந்தவை சொன்னாள். என் நெஞ்சில் கூரிய ஈட்டி பாய்ந்தது. நண்பா! போர்க்களங்களில் எத்தனையோ முறை நான் காயம் பட்டதுண்டு. ஆனால், ‘நந்தினிதான் பழுவூர் இளையராணி’ என்று குந்தவை கூறியதனால் என் நெஞ்சில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை!’ என்று ஆதித்த கரிகாலன் கூறித் தன்னுடைய நெஞ்சை அமுக்கிப் பிடித்துக் கொண்டான். நெஞ்சில் அவனுக்கு இன்னும் வலி இருந்து வந்தது என்பது நன்றாய்த் தெரிந்தது.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply