2017 சனி பெயர்ச்சி எப்படி இருக்கும் | SANI PEYARCHI 26.01.2017

0
10668
Click Image Below And Get Our App For Free

26.01.2017 சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்?

சனிபெயர்ச்சி பலன்களும் பரிகாரங்களும்! திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள். 

மேஷ இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி விட்டீர்கள். இப்பொழுது சனி பகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பிரமாதமாக வாரி வழங்க போகிறார். இதுநாள்வரைபட்ட கஷ்டங்கள் பறந்து ஓடி விடும். 10,11-க்குரிய சனி பகவான், 9-ல் இருப்பதால் உத்தியோகம், தொழில் சிறப்பாக அமையும். பொருளாதாரம் வளர்ச்சி பெறும். பெற்றோர் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டும், உதவியும் கிடைக்கும். வழக்கில் வெற்றி தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இத்தனை நாள் இருந்த அலைச்சல் தீரும். இனி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை உயர்ந்து நிற்க்கும். 11-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி தொழில் அமோகமாக இருக்கும். 6-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்னேற்றம் நன்றாக தரும். ஓரளவு கடன் தொல்லை அகலும். அதேநேரம் புதிய கடன் வாங்கச் செய்யும். ஆகவே கடன் விஷயத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கிய சனி பதவி, அந்தஸ்து வாரி வழங்கும். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு செந்தூரம் வழங்கி வணங்குங்கள். செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்குங்கள். ஸ்ரீ சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

ரிஷப இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு இது அஷ்டம சனி.அய்யோ சனி 8-ம் இடத்திற்கு வந்து விட்டதே? என்று பயப்பட வேண்டாம். ரிஷப இராசிக்கு சனி யோககாரகன். அஷ்டம சனியாக வந்தாலும் நிச்சயம் கெடுக்க மாட்டான். ரிஷப இராசிக்கு சனி தர்ம-கர்மாதிபதி. அவன் 2-ம் இடத்தை பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், குழப்பங்கள் தீரும். திருமணம் தடைபட்டு இருந்தால் இனி வீட்டில் மேள சத்தம்தான். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால், தெய்வ தரிசனம் அதிகரிக்கும். தெய்வஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். இழுத்துக்கொண்டு இருந்த வழக்கு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சொத்து-சுகங்கள் தேடி வரும். பல நாட்களாக பிடித்து வந்த நோய், நொடிகள் நீங்கி நலம் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழில் ஸ்தானத்திற்கு 8-ம் இடத்தை சனி நோக்குவதால், புதிய தொழில் துவங்குவீர்கள். தொழிலில் நண்பர்களையும் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் உஷாராக இருங்கள். காரணம், 7-ம் இடத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் உள்ளார். ஆனாலும் பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாக்கும். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் சனிபகவான் சந்நதியில் எள் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறமோ, அல்லது கருப்பு நிறத்திலோ ஆடை அணியுங்கள். காக்கைக்கு எள் கலந்த சாதத்தை சனி ஓரையில் வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 

மிதுன இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரையில் 6-ம் இடத்தில் இருந்த சனி பகவான், இப்போது 7-ம் இடத்திற்கு வந்திருக்கிறார். உங்கள் இராசிக்கு 9-க்குரிய சனி, 7-ல் வந்திருப்பது நன்மையே தரும். பொதுவாக பாக்கியாதிபதி, சப்தமஸ்தானத்திற்கு வந்தால் எப்பேர்பட்ட பிரச்னையாக இருந்தாலும் தீர்ந்து விடும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். கல்வியால் நல்ல யோகம் உண்டு. உயர்கல்வி அமையும். அடமானத்தில் இருந்த பொருட்கள் கைக்கு வந்து விடும். புதிய வாகனம் வாங்கக்கூடிய சாதகமான நேரம் இது. ஆனாலும், ஜென்ம இராசியை சனி நோக்குவதால் அலைச்சல் அதிகரிக்கும். காரணம், தொழில், வேலை என்று புதிதாக அமைத்து தந்துவிடுவார் சனிபகவான். அதனால் அப்படிதான் இருக்கும். அதோடு சற்று டென்ஷனும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாட்களாக குடும்பத்தினர் கேட்டு வந்ததை வாங்கி தரும் யோகம் வந்து விட்டதால் அதை பூர்த்தி செய்வீர்கள். திருமணம் ஆனவர்கள் மனைவியால் நன்மை அடைவார்கள். பொதுவாக, சப்தம சனி சாதகம் செய்யும். சாகசமும் செய்ய வைக்கும். சோதனைகள் நீங்கி சாதனை படைப்பீர்கள். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சோமவாரத்தில் (திங்கள்கிழமை) சோமேஷ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழை முதியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

Click Image Below And Get Our App For Free

கடக இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்கள் இராசிக்கு 6-ம் இடத்திற்கு சனி பகவான் வந்துவிட்டார். நினைத்ததை நடத்தி வைப்பான் சனி பகவான். நீங்கள் போடும் திட்டங்கள் அத்தனையும் வெற்றிதான். 6-ம் இடத்தில் அமர்ந்த சனி 9-ம் இடத்தையும், 12-ம் இடத்தையும் பார்வை செய்வதால் விரோதிகள், விரோதங்கள் பஞ்சு போல் பறந்து விடும். இதுநாள்வரை இருந்த வீண் விரயங்கள் இனி இருக்காது. பணவரவு தாராளமாக இருக்கும். 3-ம் இடத்தை பார்வை செய்வதால் தைரியலஷ்மியே உங்கள் வசம்தான். புதிய தொழில் பெரிய அளவில் அமையும். வெளிநாட்டு பயணமும், வெளிநாட்டவர்களால் லாபமும் உண்டு. தூங்கி  கொண்டு இருந்தவர்களை இனி 6-ம் இடத்து சனி பகவான் தட்டி எழுப்புவான். புதிய நண்பர்களால் மிகுந்த ஆதாயம் உண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெறும். சுபநிகழ்ச்சிக்காக கடன் வாங்க வைக்கும். ஆகவே திட்டமிட்டு செலவு செய்யுங்கள். வேலைக்கு அலைந்துக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். பொதுவாக, 8-க்குரிய சனி 6-ம் இடத்தில் அமர்ந்ததால், கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம்என்பதற்கேற்ப இனி உங்களுக்கு இராஜயோக வாழ்க்கைதான். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! ஸ்ரீரங்கநாதரை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் புளியோதரை சாதத்தை 8 பேருக்கு தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 

சிம்ம இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. அர்தாஷ்டம சனி விலகி விட்டது. அப்பாடா விட்டது தொல்லை என்று நிமிர்ந்து உட்காருங்கள். இப்பொழுது பஞ்சமஸ்தானமான 5-ம் இடத்திற்கு சனி பகவான் வந்து விட்டார். கேந்திராதிபதி திரிகோணத்தில் அமர்ந்து விட்டான். வாட்டி வதைத்த பிரச்னைகள் தீர்ந்து விடும். வதங்கிய பயிறும் வளர ஆரம்பிக்கும். இனி எப்படி போவது? எல்லாம் முட்டு சந்தாக இருக்கிறதே? என்ற கவலை இல்லை. HIGHWAY வந்துவிட்டது. பிறகென்ன? உங்களுக்கு உதவி செய்ய நல்ல மனம் படைத்தவர்கள் தாமே முன்வந்து உதவி செய்வார்கள். உங்கள் திட்டம் கச்சிதமாக முடியும். குடும்பத்தில் சச்சரவுகள், குழப்பம் இருந்தாலும் தீர்ந்து விடும். பஞ்சை எடுத்தாலே கையில் நூலாக மாறி விடும். போன சனிப்பெயர்ச்சியில் பட்ட கஷ்டங்கள் அடேங்கப்பா கொஞ்சமா நஞ்சமா? இனி அதுபோல் கஷ்டங்கள் வராது. இனி என்னென்ன செய்ய வேண்டும் என்று கனவு கண்டு நிறைவேற்ற நினைத்தீர்களோ அத்தனையும் அருமையாக செய்து முடிப்பீர்கள். பஞ்சம சனி, வேலை, தொழில், திருமண விஷேசங்கள் அத்தனையும் தருவதோடு, சிலருக்கு குழந்தை பாக்கியமும் கொடுக்கும். வாழ்க்கையே பாதகம் என்று வெறுத்து இருந்த உங்களுக்கு இனி வாழ்க்கையே சாதகம்தான். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் நீல நிறம் கலந்த வஸ்திரத்தை தானம் செய்யுங்கள். வியாழக்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குங்கள். உங்கள் நட்சத்திரம் வரும் நாட்களில் தயிர் சாதத்தை 9 பேருக்கு தானம் செய்யுங்கள். சனி பகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

கன்னி இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு சனி பகவான் உங்கள் இராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்து, அர்தாஷ்டம சனியாகிவிட்டான். சிலர் பயமுறுத்துவார்கள் ஆனாலும் பயப்பட வேண்டாம். பஞ்சமாதிபதி 4-ம் இடத்தில் அமர்ந்துவிட்டதால் கெடுதல் செய்ய மாட்டான். 6-ம் இடத்தையும், 10-ம் இடத்தையும், உங்கள் ஜென்மத்தையும் சனி பார்வை செய்வதால், ரோக நிவர்த்தி ஆகும். இதுவரை வட்டிக்கு வட்டி கட்டிக்கொண்டே இருந்த நீங்கள், இனி அசலையும் கொடுத்து கடனை அடைத்து விடுவீர்கள். பலநாட்களாக வேலைக்கு அலைந்தவர்கள் அக்கடா என்று புதிய வேலையில் அமர்ந்து விடுவார்கள். நசிந்த தொழிலை புதுப்பிப்பீர்கள். தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உட்கார நேரம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வேலைகள் வந்த வண்ணம் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் அத்தனையும் வாங்கி கொடுத்து அவர்களை திருப்திப்படுத்துவீர்கள். வழக்கில் இருந்த சொத்து கைக்கு வந்துவிடும். கண்ணில் காசையே பார்க்க முடியவில்லை என்று ஏங்கியவர்கள், கை நிறைய காசு என்று சந்தோஷப்படுவீர்கள். இதை நான் சொல்லவில்லை சனி பகவான் செய்து காட்டபோகிறார். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள். சனிக்கிழமையில் நீல நிறத்திலோ அல்லது கருப்பு நீலத்திலோ ஆடை அணியுங்கள். பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும். 

துலா இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இத்தனை நாள் பாத சனியில் இருந்து படாதபாடுபட்ட நீங்கள் இனி நிம்மதியாக இருக்கலாம். சனிபகவான் 3-ம் இடத்திற்கு வந்துவிட்டார். பஞ்சமஸ்தானம், பாக்கியஸ்தானம், விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், எதிர்பார்த்த காரியங்கள் கைக்கூடும். வாடகை வீட்டில் வசதியில்லாமல் இருந்த நீங்கள், இனி சொந்த வீட்டில் குடிபோக போகிறீர்கள். சிலருக்கு பதவி உயர்வு வர வாய்ப்புள்ளது. குழந்தை பேறு உண்டாக, சனிபகவான் அருள் செய்வார். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். வங்கி உதவிகளும் தாராளமாக கிடைக்கும். நிதான பேச்சே வெற்றி தரும். பெற்றோருக்கு இருந்த மனக்குறை நீங்கும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். 12-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், தேவை இல்லாமல் செலவுகள் வரத்தான் செய்யும். வெளிநாட்டில் வேலை செய்து வருபவர்கள் சற்று சிரமமாகத்தான் இருப்பார்கள். சரி, சிரமம் இல்லாமல் சிகரம் ஏற முடியுமா? பஞ்சமஸ்தானத்தை அதாவது சனி, தன் சொந்த வீட்டை பார்வை செய்வதால், திக்கு தெரியாத காட்டில் இருந்து ஊருக்குள் வந்துவிட்டீர்கள். இனி யோக வாழ்க்கைதான். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! ஆனைமுகனை வணங்கி, உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சூரத்தேங்காயை உடையுங்கள். விநாயகப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 

விருச்சிக இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரை ஜென்மத்தில் இருந்த சனி உங்களை விட்டு விலகி விட்டான். அதாவது, தலையில் சுமந்து வந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டீர்கள். தற்காலம் சனி 2-ம் இடத்திற்கு வந்திருப்பதால் கைக்கு கை பணம் கிடைத்து பையை நிரப்பும். சுகஸ்தானத்தை சனிபகவான் பார்வை செய்வதால், தீராத வியாதியும் தீர்ந்து விடும். இனி டாக்டர் வீட்டுக்கு அலையவேண்டியதில்லை.  தடைபட்ட கல்வி தொடர வாய்ப்பு வரும். பழைய வீட்டை புதுபிக்கும் நேரம் வந்து விட்டது. புதிய வாகனம் வாங்கும் உண்டு. சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். மேலதிகாரியிடம் கவனமாக இருக்க வேண்டும். புண்ணியஸ்தலங்களுக்கு போகும் பாக்கியம் கிடைக்கும். 9-ம் இடத்திற்கு 12-ல் சனி பார்வைபடுவதால், பெற்றோர் உடல்நலனில் சிறு, சிறு உபாதைகள் காட்டும். பிரமோஷன் வரவில்லை என்று ஏங்கியவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். பாத சனி கெடுதல் செய்யும் என்பார்களே என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. சனி பகவான், சுக்கிரன் சாரத்தில் வந்ததால் கெடுக்காது – நல்லவற்றை வாரி கொடுக்கும். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை வையுங்கள். சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவாலயத்திற்கு சென்று இறைவனை வணங்குங்கள். சனிபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 8 முறை உச்சரித்து வாருங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கியும் வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 
தனுசு இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. சனிபகவான் உங்கள் ஜென்மத்தில் வந்தமர்ந்து விட்டான். அய்யோ சாமி… ஏற்கனவே ஏழரை சனி. தீராத குறைக்கு ஜென்ம சனியுமா? என்று பயப்பட வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வந்துள்ளதால், கெடுதல் செய்ய மாட்டார். கீர்த்திஸ்தானம், சப்தமஸ்தானம், ஜீவனஸ்தானத்தை சனிபார்வை செய்வதால், சகோதர-சகோதரிகளுக்கு யோக காலம்தான். உங்களுக்கு திருமணம் தடைப்பட்டு வந்திருந்தால் இனி கவலையில்லை. திருமணம் பிரமாதமாக நடந்து விடும். போட்டி-பந்தயங்களில் வெற்றி கொடுக்கும். ஷேர் மார்கெட்டில் சிறிய லாபம் கிடைக்கும். திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் ஸ்தானத்திற்கு 6-ம் இடத்தை பார்வை செய்வதால் பெரிய முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். அவசரம் பர,பரப்பு அடைய வைக்கும். பலநாட்களாக வாகனத்தை மாற்ற வேண்டும் என்கிற விருப்பம் நிறைவேறும். பழைய கடன் வசூலாகும். திருமணம் ஆனவர்கள் மனைவியின் உடல்நலனில் சற்று கவனம் தேவை. துணைவருக்கு சிறு,சிறு பிரச்னைகள் வரலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் நன்றாக அமையும். பொதுவாக ஜென்ம சனியாக இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று பலமாக வீசும். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! அஞ்சனை மைந்தனை வணங்குங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனுக்கு வெண்ணை படைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் விநாயகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி, சனிபகவானையும் சனிக்கிழமையில்  வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 

மகர இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. வந்துவிட்டது ஏழரை சனி என்று பயந்துவிடாதீர்கள். பயமுறுத்த பலர் இருப்பார்கள். உங்களுக்கு வந்தது ஏழரைதான் ஆனால் சுக்கிரன் சாரத்தில் வந்திருப்பதால் நன்மைகளை அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது சனிபகவான் கொடுப்பான். ஆனால் கெடுக்க மாட்டான். ருண-ரோகஸ்தானம், தனஸ்தானம், பாக்கியஸ்தானத்தை சனி பார்வை செய்வதால் கடன் சுமை நீங்கும். இதுநாள்வரை ஜவ்வு போல் இழுத்துக் கொண்டு இருந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும்.  குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்கி விடுவீர்கள். உங்கள் வாக்கு மேன்மை பெறும். உடல்நலனில் மட்டும் கண்டிப்பாக கவனம் தேவை. தலை சம்மந்தப்பட்ட, வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்னைகள் சில நேரங்களில் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். பயணங்கள் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும். மனைவியால் லாபம் உண்டு. மனைவியின் ஆலோசனை சரியாக இருக்கும். வாகனம் ஓட்டுவதில் கவனமும் பொறுமையும் தேவை. 12-ம் இடத்திற்கு சனிபகவான் வந்திருந்தாலும் கவலையில்லை. இந்த ஏழரை உங்களுக்கு வளமையும், பெருமையும் தரும். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை வணங்குங்கள். வீட்டில் ஸ்ரீபார்த்தசாரதி படம் வைத்து அந்த படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி கல்கண்டு வைத்து வணங்குங்கள். சாதத்தில் எள் கலந்து காக்கைக்கு வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 

கும்ப இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இந்த சனி பெயர்ச்சி
உங்களுக்கு லாப சனியாக வந்துவிட்டது. அதாவது, சனிபகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடத்திற்கு வந்துவிட்டார். இனியெல்லாம் யோகமே. தொட்டது துலங்கும். ஜென்ம இராசியையும், பஞ்சமத்தையும், அஷ்டமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், ஆண்டி போல் அலைந்தவர்கள் அரசனை போல் வாழப்போகிறீர்கள். ஆம், ஜென்மாதிபதி ஜென்மத்தை பார்வை செய்வதால் கஷ்டங்கள், நஷ்டங்கள் அத்தனையும் நடா புயல் போல் ஓடி விடும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். உத்தியோகத்தில் சிரமம், பளு குறையும். சிலருக்கு தொழில் துவங்கவும் வசதி ஏற்படும். கடன் பிரச்னை தீரும். பொதுவாக, மனக்குழப்பங்கள் அத்தனையும் தீர்ந்து விடும். தூரத்து உறவினரின் உதவி கிடைக்கும். தெய்வ பணிகள் அதிகரிக்கும். பேச்சில் மட்டும் நிதானம், பொறுமை தேவை. சகோதர உறவில் மகிழ்ச்சி ஏற்படும். வில்லங்கமான சொத்துக்கள் விஷயத்தில் சுமுகமாக பேசி முடிக்கும் சூழ்நிலை உருவாகும். கணக்கு-வழக்கில் கவனம் தேவை. லாப சனி யோக சனிதான். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சர்வலோக நாயகனை வணங்குங்கள். சோமவாரத்தில் (திங்கள்கிழமை) வில்வ இலை சமர்பியுங்கள். உங்களால் முடிந்த ஏழை பிள்ளைகளுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

மீன இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. சனி பகவான் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்களுக்கு சனி லாபாதிபதி. லாபாதிபதி 10-ல் இருப்பது வெகு விஷேசம். விரயஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், சப்தமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், இதுநாள்வரை பீடித்த நோய் உங்களை விட்டு விலகி விடும். மனகுழப்பம் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வாகனம், வீடு அமையும்.எப்பொழுது சொந்த வீடு அமையும்?என்று ஏங்கியவர்களுக்கு சொந்த வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்யும் யோகம் வந்துவிட்டது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் பிரமாதமாக நடக்கும். திருமணமான உங்கள் பிள்ளைகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். போகாத கோயில் இல்லை என்று திருமண வரனுக்காக சுற்றி வந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை அமையும். பொன், பொருள் சேரும். ஆனால், சனி பகவான் விரயஸ்தானத்தை பார்ப்பதால் வீண் விவகாரம் செய்ய வேண்டாம். மனதில்பட்டதை பேசுவதை தவிர்க்கவும். 10-ம் இட சனி பிரமாதமான வாழ்க்கை கொடுக்க போகிறான். கையில் இருக்கும் வைரத்தை வைத்துக் கொண்டு கண்ணாடி கல்லை தேட வேண்டாம். அதாவது, தேவையற்ற சிந்தனைகளால் மனதை சிதறடிக்க வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வந்த சனிபகவான், உங்களை பாக்கியசாலி, யோகசாலியாக்கும். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயர் பாடல்களை பாடுங்கள். ஸ்ரீஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.  சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வையுங்கள். விநாயகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

Click Image Below And Get Our App For Free

Previous articleஇந்த வார ராசிபலன் 08-12-2016 முதல் 14-12-2016 வரை | Weekly astrology forecast
Next articleTamil General Knowledge Questions And Answers 147

Leave a Reply