விசாகம் 4-ம் பாதம் அனுஷம், கேட்டை
உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜித புத்தியாலும் பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்னையில் ஒரு பகுதி தீரும். வீட்டுக்குத் தேவை யான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவுக் குப் பணவரவு உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து இனி செயல்படத் தொடங்குவீர்கள்.
3.10.2018 வரையிலும் குரு தரும் பலனால், திடீர்ப் பயணங்கள் மற்றும் திடீர்ச் செலவுகளால் கொஞ்சம் திணறுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும்.
4.10.2018 முதல் 12.3.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வந்து அமர்வதால் வீண் அலைச்சல், அலைக்கழிப்பு குறையும். பல நாள்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு, யூரினரி இன்ஃபெக்ஷன், காய்ச்சல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்து போகும் வாய்ப்புள்ளது. கவனமாக இருக்கவும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப்பாருங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலும் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து போகும். கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையைத் தவிர்ப்பது நல்லது.
13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் அமர்வதால், அதுமுதல் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவும் உண்டு. ஆனால், செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். வாரிசுகள் இல்லாமல் வருந்திய தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேது வுடன் சேர்ந்து 3-ம் வீட்டில் நிற்பதால் திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும்.
வருடம் பிறக்கும் முதல் 12.2.2019 வரை ராகு 9-ல் நிற்பதால் தந்தையாரின் உடல்நலம் பாதிக்கும். கேது 3-ல் நிற்பதால், சவால்களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். 13.2.2019 லிருந்து வருடம் முடியும்வரை ராகு 8-ல் நுழைவதால் பயணங்களில் கவனம் தேவை. அலர்ஜி வந்து நீங்கும். கேது 2-ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். இந்தாண்டு முழுக்க சனி 2-ல் அமர்ந்து பாதச்சனியாக இருப்பதால், குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்த் திடுங்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சித்திரை மற்றும் தை மாதத்தில் பற்று வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். ஆவணி மாதம் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும். ஏற்றுமதி, இறக்குமதி, மருந்து, பிளாஸ்டிக், ஊதுபத்தி, உணவு, லாட்ஜிங் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்கு தாரர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசவும்.
உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். ஏழரைச் சனி தொடர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் புதிய வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, பெரிய மனிதர் களின் நட்பையும், வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்
சங்கடஹர சதுர்த்தி திருநாளில் திருச்சி உச்சிப் பிள்ளையாரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சங்கடங்கள் தீரும்; சந்தோஷம் பெருகும்.