மகரத்திற்கு பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு முன்னேற்றங்களையும், விரயங்களையும் தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும்.
வருடத்தின் ஆரம்பநாளில் இருந்தே உங்களுடைய ராஜயோகாதிபதியான சுக்கிரன் உச்சவலுவுடன் இருப்பதும், இன்னொரு சுபரான குருபகவான் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதும் மகரத்திற்கு நன்மைகளையும், மேன்மைகளையும் தருகின்ற அமைப்பு என்பதால் இந்த வருடம் உங்களுக்கு நல்ல விஷயங்கள் மட்டுமே நடக்கும்.
இன்னுமொரு பலனாக இந்த தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு வீண் செலவுகளையும், விரையங்களையும் தரும் என்பதால் வருகின்ற வருமானத்தை நீங்கள் சேமிக்க முடியாத ஒரு ஆண்டாகவும் இது இருக்கும்.
குறிப்பாக இந்த புத்தாண்டில் மகரராசிக்காரர்களுக்கு திருமணம், வீடு கட்டுதல், குழந்தைகளுக்கான சுபச்செலவுகள் போன்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும். இதுவரை மகன்-மகளுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்த முடியாதவர்கள் இப்போது நல்லவிதமாக அதனை நடத்தி முடிப்பீர்கள்.
ஆகஸ்ட் மாதம் 18-ம்தேதி நடக்க இருக்கின்ற ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் இதுவரை உங்களுடைய பொருளாதார வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த ராகு-கேதுக்கள் தனஸ்தானமான இரண்டு எட்டில், இருந்து மாறுதல் அடைக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்மையை தரும் விஷயமாக இருக்கும்.
இந்த பெயர்ச்சியின் மூலம் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் தகுந்த வருமானம் இன்றியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்றியும் பொருளாதார பின்னடைவு சந்தித்து கொண்டிருந்த மகரத்தினர் அவை நீங்கி திருப்தியான வருமானங்களை பெறுவீர்கள். இந்த வருடம் சம்பாதிக்க இருக்கும் வருமானத்தை சேமிக்கத்தான் முடியாதே தவிர தாராளமாக செலவு செய்வதற்கான வருமானம் இருக்கும்.
ஏழாமிடத்திற்கும், ராசிக்கும் மாற இருக்கும் சுபத்துவ ராகுகேதுக்களாலும், அதனையடுத்து செப்டம்பர் மாதம் 12 ம் தேதி பத்தாமிடத்திற்கு மாற இருக்கும் குருபகவானாலும் உங்களுக்கு வேலை, தொழில் நிலைகளில் நல்ல மாற்றங்கள் இருக்கும்.
தமிழ்ப் புத்தாண்டின் நடுப்பகுதியான அக்டோபர் மாதம் 26-ம்தேதி நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் மகரத்தினர் ஏழரைச்சனி அமைப்பில் நுழைகிறீர்கள். சனிபகவான் உங்களுக்கு நல்ல, கெட்ட வாழ்க்கை அனுபவங்களை கற்றுத் தர இருக்கும் ஏழரைச்சனியாக மாற இருக்கிறார்.
வருடத்தின் ஆரம்ப நாளிலேயே அதிசார அமைப்பில் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் ஏழரைச் சனியாகத்தான் அவர் இருக்கிறார் என்றாலும் இது முறைப்படியான பெயர்ச்சி அல்ல என்ற காரணத்தினால் அவர் அக்டோபர் மாதம் வரை ஏழரைச்சனியின் பலன்களைத் தர மாட்டார்.
எனவே இந்த வருடம் முதல் உங்களுக்கு சனி ஆரம்பிப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கண்ணும், கருத்துமாக அனைத்திலும் அக்கறையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும்.
வருடத்தின் முற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம்.
வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.
தொழில் செய்பவர்கள் அகலக்கால் வைக்க வேண்டாம். புதிதாக எதையும் ஆரம்பிக்காதீர்கள். இருப்பதை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டிய வருடம் இது. தொழில் விஷயங்களில் யாரையும் நம்பாதீர்கள். குறிப்பாக தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். இனிமேல் கற்றுக்கொண்டு செய்ய வேண்டிய தொழில் இப்போது கை கொடுக்காது.
பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச்செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள்.
பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும் நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி மாற்றலாகி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும் வீட்டில் பிரச்னை எதுவும் இருக்காது.
எல்லாவற்றிலும் இப்போது உங்களுக்கு சலிப்பு வரும் என்பதால் யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த காலகட்டத்தில் எவருமே உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அதே நேரத்தில் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள்.
கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த பனிப்போர் விலகி இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க ஆரம்பிப்பீர்கள். வீட்டில் குழந்தையின் கொலுசுச் சப்தம் கேட்கும் காலம் பிறந்து விட்டது.
பள்ளி, கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மக்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வருடம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.
பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப் பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம். நீங்கள் பிறந்த போது தொலைபேசி, டிவி, வீடியோ, இன்டர்நெட் என்று எதுவுமே கிடையாது. ஆனால் இப்போது உங்களின் குழந்தைகள் பிறக்கும்போதே கர்ணனின் கவசகுண்டலம் போல அவற்றோடுதான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். இந்த வருடம் அரியர்ஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது. காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள். காலேஜ் உங்களைக் கட் அடித்து விடலாம். இளையபருவத்தினர் தங்களின் வாழ்க்கைத் துணைவரை இந்தவருடம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும். காதல் வரும் வருடம் இது.
சிலர் வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள்.
மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால் இந்த வருடம் கிடைக்கும் மாற்றங்களைக் கொண்டும், மற்ற அனுபவங்களைக் கொண்டும் உங்கள் எதிர்காலத்தை நீங்கள் முன்னேற்றமானதாக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் எதிர்வரும் தமிழ்ப் புத்தாண்டை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.
அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் நீங்கள் என்பதால் வர இருக்கும் ஏழரைச்சனி பெரிதாக ஒன்றும் உங்களைப் பாதிக்காது. மகரராசிக்கு சனிபகவானே அதிபதி என்பதால் மற்ற ராசிக்காரர்களுக்கு தரும் தொல்லைகளை உங்களுக்கு சனி தர மாட்டார். சனியை நினைத்து கவலைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். கையில் இருக்கும் சேமிப்பை சனி கரைய வைக்கும் அவ்வளவுதான். இந்த ஆண்டு உங்களுக்கு இனிமையான ஆண்டுதான்.