அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்
ராசிக்கு 12-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், திடீர்ப் பயணங்களும், செலவு களும் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். புதிய நபர்களிடம், குடும்ப விஷயங்களைப் பேசவேண்டாம்.
3.10.18 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே இருப்பதால் திருமணம், வளைகாப்பு என்று அடுத்தடுத்து நடைபெறும் சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். கணவன் – மனைவிக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், இருவருமே அதைப் பெரிதுபடுத்தவேண்டாம்.
சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கும் நல்லதொரு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற் றும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள்.
4.10.18 முதல் 12.3.19 வரை குரு ராசிக்கு 8-ல் மறைவதால், வீண் அலைச்சல், இனம் புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். 13.3.19 முதல் பல வகைகளிலும் வளர்ச்சிப் போக்கைக் காணலாம். மகனுக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் வெளிநாடு சென்று வருவீர்கள்.
30.4.18 முதல் 27.10.18 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 10-ம் வீட்டில் அமர்வதால், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொத்துப் பிரச்னை களை பேசித் தீர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும்.
ஆண்டின் தொடக்கம் முதல் 12.2.19 வரை கேது 10-லும், ராகு 4-லும் இருப்பதால், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் மகனுக்கு வெளிநாட்டில் வேலை அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தாயின் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்களில் அவசரம் வேண்டாம்.
13.2.19 முதல் கேது 9-ல் அமர்வதால், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டு நீங்கும்.
3-ல் ராகு அமர்வதால், தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புது வீடு மாறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். 2.8.18 முதல் 30.8.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், பயணத்தின்போது கவனம் தேவை. விலையுயர்ந்த ஆபரணங்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.
வருடம் முழுவதும் சனிபகவான் 9-ல் நிற்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் சுமைகளிலிருந்து ஓரளவு விடுபடுவீர்கள். வேற்றுமொழி பேசும் அன்பர்களால் எதிர்பாராதவகையில் சில உதவிகள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டு விட்டதாக அடிக்கடி நினைத்து வருத்தப்படுவீர்கள்.
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஆனாலும், பெரிய அளவில் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். கடையை வசதியான வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். ஆனி, ஆவணி, தை, மாசி ஆகிய மாதங் களில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங் களும் கையெழுத்தாகும். ஸ்டேஷனரி, உணவு, ஏற்றுமதி – இறக்குமதி, கெமிக்கல், மருந்து வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில், வேலை அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுடைய பொறுப்புகளை மற்றவர் களிடம் ஒப்படைக்க வேண்டாம். அவற்றை நீங்களே முன்னின்று நடத்துவது நலம் பயக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன், அதுபற்றி சட்ட நிபுணரின் ஆலோசனையைக் கேட்பது மிக அவசியம். தை, மாசி மாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த விளம்பி வருடம், உங்கள் திறமையையும் செல்வாக்கையும் அதிகரிக்க வைப்ப தாக அமையும்.
பரிகாரம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி புத்தூர் எனும் ஊரில் அருளும் சுப்ரமணியரை, சஷ்டி திதி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; சுபிட்சம் உண்டாகும்.