

நாகை: கடும் வறட்சியால் நாகை, திருவாரூரில் நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. நாகை மாவட்டத்தில் ஆண்டுதோறும் 36,000 ஹெக்டரில் குறுவை சாகுபடியும், 1.10 லட்சம் ஹெக்டரில் சம்பா சாகுபடியும் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுப்பதாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும் டெல்டாவில் 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. நடப்பாண்டு குறுவையுடன் சம்பா சாகுபடியும் நடைபெறவில்லை. தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால், இதனால் நடப்பாண்டு டெல்டா மாவட்டங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் இறந்துள்ளனர். நாகையை பொறுத்தவரை நிலத்தடி நீர்வளம் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே ஓரளவு நெல் சாகுபடி நடந்து வருகிறது.நாகை மாவட்டத்தில் 201516ம் ஆண்டு 1.98 லட்சம் டன் குறுவை நெல் உற்பத்தியும், 3.08 லட்சம் டன் சம்பா நெல் உற்பத்தியும் நடந்தது. 201617ம் ஆண்டு 1.56 லட்சம் குறுவை நெல் உற்பத்தி, 1.91 லட்சம் சம்பா நெல் உற்பத்தி நடந்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக 201516ம் ஆண்டு 36,906 டன் குறுவை நெல், 2,79,178 டன் சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 201617ம் ஆண்டு 16,226 டன் சம்பா நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. குறுவை நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நெல் சாகுபடியை காப்பாற்ற அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1.11 லட்சம் ெநல் மட்டுமே கொள்முதல் ெசய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 80 சதவீதம் குறைவாகும். திருவாரூர் மாவட்டத்தின் சாகுபடி பரப்பு 3.70 லட்சம் ஏக்கர். மேட்டூர் அணை இரண்டரை மாதம் காலதாமதமாக திறக்கப்பட்டதால் ஆறுகளில் குறைந்த அளவில் 10 நாட்கள் கூட தண்ணீர் வரவில்லை. இருப்பினும் அரசின் சிறப்பு தொகுப்பு திட்டம் உட்பட ஒரு சில அறிவிப்பு, வடகிழக்கு பருவமழையை நம்பி திருவாரூர் மாவட்டத்தில் 2.25 லட்சத்தில் நேரடி நெல் விதைப்பு, 75 ஆயிரம் ஏக்கரில் நடவுப்பணி மற்றும் 75 ஆயிரம் ஏக்கரில் தாளடி என 3.75 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியை விவசாயிகள் ெசய்தனர். இந்நிலையில் பெரும்பாலான பயிர்கள் நீரின்றி கருகின. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் அதிர்ச்சி, தற்கொலையால் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். மொத்தமுள்ள 10 ஒன்றியங்களில் நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் மன்னார்குடியில் ஒரு பகுதி என 5 ஒன்றியங்களில் மட்டுமே போர்வெல் மூலம் சம்பா பயிர்களை காப்பாற்றும் பணி நடந்தது. இருப்பினும் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றது மற்றும் மும்முனை மின்சாரம் சரிவர கிடைக்காததால் அந்த பயிர்களும் கருகின. கடந்தாண்டு மாவட்டத்தில் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் 5.50 லட்சம் டன் நெல் கொள்முதல் நடந்தது. நடப்பாண்டில் இதுவரை 1.11 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இனிமேலும் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வருவதற்கான வாய்ப்புகள் 100 சதவீதம் இருக்காது என்ற நிலையில் கடந்தாண்டைவிட 80 சதவீதம் குறைந்து 20 சதவீத கொள்முதல் மட்டுமே நடந்துள்ளது.
Source: Dinakaran

