Home Tamil Astrology Tamil Month Rasipalan Aani Madha Rasipalan | ஆனி மாத ராசி பலன்கள்! 15.6.2017 முதல் 16.7.2017 வரை

Aani Madha Rasipalan | ஆனி மாத ராசி பலன்கள்! 15.6.2017 முதல் 16.7.2017 வரை

0
466
astrology forecast | ராசிபலன்

வீரமும் விவேகமும் ஒருங்கே அமையப்பெற்ற மேஷ ராசி அன்பர்களே!
ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதனுடன் கூடி சஞ்சரிக்கிறார். சகாய ஸ்தானாதிபதி புதனுடனும், பஞ்சம ஸ்தானாதிபதி சூரியனுடனும் செவ்வாய் இணைந்திருப்பதால் இம்மாதம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளி வழங்கும் மாதமாகவே அமையும்.
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பற்றாக்குறை மாறும். வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே, அஷ்டமத்துச் சனியால் அதிகப் பிரயாசை எடுத்தும் காரியங்கள் முடிவடையாமல் இருக்கிறதே என்றெல்லாம் கலங்கியவர்களின், மனக் கவலையைப் போக்கும் விதத்தில் இந்த மாதத்தின் கிரக நிலைகள் சஞ்சரிக்கின்றன.
உங்கள் ராசிக்கு 2,7-க்கு அதிபதியானவர் சுக்ரன். தனாதிபதியாக விளங்கும் சுக்ரன், மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக் குழப்பம் மாறும். மதிப்பும், மரியாதையும் உயரும். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும். உற்சாகத்தோடு பணிபுரிந்து, உறவினர் கள் பாராட்டும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.
அஷ்டமத்துச் சனி வக்ர இயக்கத்தில் தான் இருக்கிறார். சனி வலிமையிழந்து இருப்பதால் ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கு ஏற்ப, எதிர்பாராத சில வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். குறிப்பாக உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. எனவே தொழில் உத்தியோகத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்களோடு ஏற்பட்ட பிரச்சினை அகலும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்ட காலம் இனி மாறப்போகிறது. இந்த மாதத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர். நாலாபுறமும் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பதவி உயர்விற்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். இம்மாதம் ஆனித் திருமஞ்சனத் தன்று நடராஜர் தரிசனம் பார்த்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
ரிஷப சுக்ரன் சஞ்சாரம்
ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அந்த வீடு அவருக்குச் சொந்த வீடாகும். உங்கள் ராசி அடிப்படையில் வாக்கு, தனம், குடும்பம் என்று வர்ணிக்கப்படும் இரண்டாம் இடத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுது, இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களை யும் வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, இனி சுபகாரியப் பேச்சுகள் முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும்.
கடக புதன் சஞ்சாரம்
ஜூலை 1-ந் தேதி கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3,6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தாய்க்குத் தொல்லை ஏற்படலாம். வாங்கிய சொத்துகளில் ஏதேனும் பிரச்சினைகள் உருவாகலாம். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடுவதில் கொஞ்சம் தடை ஏற்படலாம். மாமன், மைத் துனர் வழியில் மனக் குழப்பங்கள் அதிகரிக்கும்.
கடக செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். அங்கு அவர் நீச்சம் பெறுகிறார். செவ்வாய் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீச்சம் பெறுவதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. சில எதிர்பார்ப்பு களில் தாமதம் ஏற்படலாம். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்களா? என்பது சந்தேகம் தான். இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் உருவாகலாம். இதுபோன்ற நேரங்களில் அங்காரகனை வழிபட்டு வருவது நல்லது.
பெண்களுக்கு!
இந்த மாதத்தில் முதல் பாதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிற்பாதியில் விரயங்கள் கூடும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். உற்சாகத் தோடு பணிபுரிந்து உறவினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குரு பார்வை 10-ம் இடத்தில் பதிவதால், உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். கணவன்- மனைவிக்குள் பிரியம் கூடும். பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து, வருமானத்தைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடகத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும் பொழுது, ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நடராஜர் வழிபாடு நன்மையை வழங்கும்.

உறவினர்களை ஆதரிக்கும் ரிஷப ராசி அன்பர்களே!
உங்களின் ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். விரயாதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். எனவே விரயம் ஒரு பக்கம் ஏற்பட்டாலும், அதற்கேற்ற வகையில் தன வரவும் தாராளமாக வந்துகொண்டே இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை உருவாகும். தடம் மாறிச் சென்ற உறவினர்கள் தானாக வந்திணைவர். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும்.
சுக்ர பலத்தால் அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அணிந்து அழகு பார்ப்பீர்கள். இல்லத்திற்குத் தேவையான மின்சாதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயண ஸ்தானம் பலமாகக் காணப்படுவதால், இதுநாள் வரை வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சித்து வந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கைகூடும்.
அதே நேரத்தில் உங்கள் ராசியைச் சனி பார்ப்பது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். பல்வேறு குழப்ப நிலைகளின் காரணமாக வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் திடீரென தாய்நாடு திரும்பும் சூழ்நிலை உருவாகலாம். குடும்ப ஸ்தானத்தில் புதன், சூரியன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை ஒரு சில நன்மைகளை உங்களுக்கு வழங்கும்.
புத -ஆதித்ய யோகம் இருப்பதால் புதிய திருப்பங்கள் ஏற்படும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்து காத்திருந்த சலுகைகள் இப்போது கிடைத்து உங்களை ஆச்சரியப்படுத்தும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் ஆதரவோடு நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள்.
என்ன இருந்தாலும் குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிவதால், இனிமேல் அடுக்கடுக்காக நல்ல பலன்களை குரு பகவான் வழங்கிக் கொண்டே இருப்பார். அதே நேரம் உங்கள் ராசியைப் பார்க்கும் குருவைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து கொண்டக்கடலையைத் தானமாகக் கொடுத்து மஞ்சள் வண்ண வஸ்திரம் சாத்தி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
 
ரிஷப சுக்ரன் சஞ்சாரம்
ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். ராசிநாதன் ராசியிலேயே சஞ்சரிப்பதால் தொட்டது துலங்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தொய்வாக காணப்பட்ட வியாபாரம் சூடு பிடிக்கும். கற்றவரும், மற்றவரும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதால் பலன் பெறுவர். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு வியப்படைவார்கள்.
கடக புதன் சஞ்சாரம்
ஜூலை 1-ந் தேதி கடக ராசிக்குப் புதன் செல்கிறார். தன பஞ்சமாதிபதியாக விளங்கும் புதன், சகாய ஸ்தானத்திற்கு செல்வது மிகுந்த நன்மை தரும். திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடைபெறும். வழக்குகள் சாதகமாக முடியும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். தன் போக்கில் சென்று தடுமாற்றங் களைச் சந்தித்த பிள்ளைகள், இனி உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர்.
கடகச் செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். அது செவ்வாய்க்குரிய நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 7,12 ஆகிய இடங்களுக்குஅதிபதியானவர் செவ்வாய். அவர் நீச்சம் பெறும் பொழுது வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும்.
குடும்பத் தகவல்களை வெளியில் சொல்வதன் மூலம், மூன்றாம் நபரால் பிரச்சினைகள் ஏற்படலாம். தைரியமும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. இந்த காலத்தில் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே நிம்மதி கிடைக்கும். மேலும் நடராஜர் வழிபாடு நன்மைகளை வழங்கும்.
 
பெண்களுக்கு!
இந்த மாதம் விரயத்திற்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம், உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படும் நேரமிது. விரயாதிபதி தன ஸ்தானத்தில் இருப்பதால் பணம்இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். காரியத்தை தொடங்கிவிட்டால் பணம் தானாக வந்து சேரும்.
உத்தியோகத்தில் அதிகாரிகள் எதிர்பார்த்த சலுகைகளை வழங்குவர். பொருளாதாரம் திருப்தி தரும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவது நல்லது. குறிப்பாக சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட்டு வந்தால் அல்லல்கள் தீரும்.

நெளிவு சுளிவுகளைக் கற்று நேர்த்தியாக வாழும் மிதுன ராசி அன்பர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். அவரோடு 3-க்கு அதிபதியான சூரியனும் 6,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாயும் இணைந்திருக்கின்றனர். அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கமும் இருக்கிறது. இதன் விளைவாக இம்மாதத்தில் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து கொண்டேயிருக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும் என்றாலும் கூட, மீண்டும் பழைய நோய் தலைதூக்கலாம்.
செவ்வாய் பலம் உங்கள் ராசியிலேயே இருப்பதால், முன்கோபத்தின் காரணமாக சில காரியங்களில் முட்டுக்கட்டைகள் ஏற்படலாம். எனவே கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் திடீர் மாறுதல்களும் வந்து சேரலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு குறைவாகவே கிடைக்கும். அதே நேரத்தில் அரசு வழி வேலைகளுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தால் அது கிடைக்கும்.
அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கம் இருக்கும் வரை, எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கூடுதல் கவனம் தேவை. பழைய வாகனங்களில் பழுதுச் செலவுகள் அதிகரிக் கிறதே என்று கவலைப்படுவீர்கள். எனவே அதைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி ஏதேனும் ஒரு தொகையை வாங்கிக் கொடுத்திருந்தால், அதனால் சிக்கல்கள் ஏற்படலாம்.
ஒரு சிலருக்கு வாங்கிய இடத்தை விற்கும் சூழ்நிலை உருவாகும். பத்திரப்பதிவில் ஒருசிலருக்குத் தடைகள் ஏற்படலாம். வில்லங்கத்தோடு கூடிய இடத்தை விலைக்கு வாங்கி சிக்கல்களில் சிக்கித் தவிக்கலாம். எனவே இதுபோன்ற காலங்களில் பெரிய தொகை கொடுத்து வாங்கும் பொருட்களின்் மீதும், அசையா சொத்துகள் மீதும் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
கிரகங்கள் சாதகமற்ற நிலையில் சஞ்சரிக்கும் பொழுது, பரிகாரங்கள் ஓரளவிற்கு கைகொடுக்கும். அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது கண்ணன் வழிபாடு உங்களின் கவலைகளைப் போக்கும். வெண்ணெய் உண்ணும் கண்ணன் படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடுவதோடு, ஒவ்வொரு திருவோணத்தன்றும் அவல் நைவேத்தியம் படைத்து வணங்கினால் உங்களின் ஆவல்கள் பூர்த்தியாகும்.
ரிஷப சுக்ரன் சஞ்சாரம்
ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இந்த காலத்தில் கூடுதலாக விரயத்தைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக பஞ்சம விரயாதிபதியான சுக்ரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போவதால், பிள்ளைகள் வழியில் ஒரு பெரும் செலவு வந்து சேரலாம். அவர்களின் கல்வி முன்னேற்றம் கருதியும் செலவிடலாம். கல்யாண காரியத்தை முன்னிட்டும் செலவிடலாம். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
கடக புதன் சஞ்சாரம்
ஜூலை 1-ந் தேதி கடக ராசிக்குப் புதன் செல் கிறார். உங்களுக்கு இது ஒரு பொற்காலமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நாளாபுறமும் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். சீரான வாழ்க்கை அமைய சிலர் உங்களுக்கு கைகொடுத்து உதவுவர். ராசிநாதன் 2-ல் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் புத்துணர்ச்சியோடு செயல்பட்டு பொருள் வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
கடக செவ்வாய் சஞ்சாரம்!
ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். அங்கு செவ்வாய் நீச்சம் பெறுவதால், ஒருவழிக்கு உங்களுக்கு நன்மை ஏற்படும். 6-க்கு அதிபதி நீச்சம் பெறுவதால் தள்ளிப் போன காரியங்கள் தானாக நடைபெறும். எள்ளி நகையாடியவர்கள் இப்பொழுது உங்களோடு வந்திணைவர். வெளிநாட்டுத் தொடர்பில் திடீரென மாற்றம் ஏற்படும். வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்பும் சூழ்நிலை ஒருசிலருக்கு உண்டு. பூர்வீகச் சொத்துகளை விற்று விட்டு, புதிய சொத்துகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பெண்களுக்கு!
இந்த மாத தொடக்கத்தில் பணப்புழக்கம்அதிகரிக்கும். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். மனக் குழப்பம் அகலும். மக்கள் செல்வங்களின் சுபகாரியங்களை எளிதாக முடித்து வெற்றி காண்பீர்கள். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரும். மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தை சீராக்கிக் கொள்ள இயலும். வாகனங்களால் தொல்லை உண்டு. வளர்ச்சி கூட அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். செவ்வாய் நீச்சம் பெறும் நேரம் அங்காரகனை வழிபடுவதன் மூலம் தடைகள் அகலும். இந்த மாதம் ஆனித் திருமஞ்சனத்தன்று நடராஜரை தரிசனம் செய்வதன் மூலம் தேனான வாழ்க்கை அமையும்.

எதிலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அதுமட்டு மல்ல, அஷ்டமத்தில் கேதுவும், 2-ல் ராகுவும் வீற்றிருந்து மாதம் தொடங்கு கிறது. சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. எனவே நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக அமையும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உதவி செய்வதாக சொன்னவர்கள், கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். ஊர் மாற்றச் சிந்தனைகளும், உத்தியோக மாற்றச் சிந்தனைகளும் தலைதூக்கும்.
விரய ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் முற்றுகையிட்டு இருக்கின்றன. ஒன்று தனாதிபதி சூரியன், இரண்டு யோகாதிபதி செவ்வாய், மூன்று விரயாதிபதி புதன் மேற்கண்ட மூன்று கிரகங்களும் விரய ஸ்தானத்தில் இருப்பதால் வரவைக் காட்டிலும் செலவு கூடும். ஒருசில சமயங்களில் ஆடை, ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை விற்கும் சூழலும் வரலாம். வீண் விரயங் களில் இருந்து விடுபட வேண்டுமானால், சுபவிரயங்களை மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் கல்யாண வயதில் பெண் பிள்ளைகள் இருந்தால், அதற்குரிய சீர்வரிசைகளை வாங்கிச் சேர்க்கலாம். குடியிருக்கும் வீடு பழுதாகி இருந்தால் பராமரிக்கலாம். பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவி மாற்றத்திற்கோ, இலாகா மாற்றத்திற்கோ ஏற்பாடு செய்திருந்தால் அது வெற்றிகரமாக நடைபெறும்.
கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 7,9,11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே கல்யாண வாய்ப்புகள் கைகூடலாம். குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கவில்லையே என்ற கவலை இனி அகலும். குடும்ப முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். மறதியால் சென்ற மாதத்தில் விடுபட்டுப் போன காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல் ஆதரவோடு உங்கள் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்க குருவின் பார்வை கைகொடுக்கிறது.
எனவே அப்படிப்பட்ட பார்வையால் பலன் கொடுக்கும் குருவைத் திருப்திப்படுத்த, சிவாலயத்திற்குச் சென்று குரு பகவானை வழிபடுவது நல்லது. மேலும் குரு பீடமாக விளங்கும் திருச்செந்தூர் மற்றும் ஆலங்குடி, திட்டை, பட்டமங்கலம் ஆகிய தலங்களுக்கு வாய்ப்பிருக்கும் போது சென்று வழிபட்டு வருவதும் நல்லது.
ரிஷப சுக்ரன் சஞ்சாரம்
ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4,11 ஆகிய இடங்களுக்கு அதிபதி சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, எதிர்பார்த்த தொகை இல்லம் தேடி வரும். மதிப்பும், மரியாதையும் உயரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பழைய வாகனங்களை கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடக புதன் சஞ்சாரம்
3,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். இவர் ஜூலை 1-ந் தேதி கடக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். விரயாதிபதி உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, உடன்பிறப்புகள் வழியே ஒரு பெரும் விரயம் ஏற்படும். மாமன், மைத்துனர் வழியில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதை முன்னிட்டு ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். சேமிப்பில் சிறிது கரையும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்க மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடக செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். அது செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். யோகம் செய்யும் கிரகம் நீச்சம் பெறுகிற பொழுது, ஒருசில காரியங்கள் முடிவடைவதில் தாமதமாகலாம். தாமதங்களைத் தவிடு பொடியாக்க, இறைவனின் துணை நமக்குத் தேவை. இது போன்ற காலங்களில் சுய ஜாதக அடிப்படையில் தெசாபுத்திக்கேற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது. அரசியல் மற்றும் பொது நலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாறலாம். திடீரென வீண் பழிகள் கூட வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட தூரப் பயணங்கள் உருவாகும். ஆனித் திருமஞ்சனத்தன்று நடராஜரை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
 
பெண்களுக்கு!
மாதத் தொடக்கத்தில் விரய ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே குடும்பச்சுமை கூடும். கொடுக்கல்- வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும் மனநிம்மதி இருக்காது. கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது. சர்ப்பக் கிரகங்களுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து கொண்டால் பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட தூர மாறுதல்கள் கிடைக்கலாம். அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவரின் ஆலோசனைப்படி மாதக் கடைசியில் ஒருசில நன்மைகள் வந்து சேரும். ஆனித் திருமஞ்சனத்தன்று நடராஜப் பெருமானை வழிபடுவது நல்லது. மேலும் முத்துமாரியம்மன் வழிபாடு உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

மக்களின் பாராட்டுகளைப் பெறும் சிம்ம ராசி அன்பர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தன லாபாதிபதியான புதனும், யோகாதிபதியான செவ்வாயும் இணைந்து சஞ்சரிக்கின்றனர். இதனால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். புகழ்மிக்கவர்களின் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அதற்கான வாய்ப்புகள் இப்பொழுது கைகூடிவரப்போகிறது.
என்ன இருந்தாலும் உங்கள் ராசியில் ராகுவும், 7-ம் இடத்தில் கேதுவும் இருப்பதால் இடர்பாடுகளுக்கு மத்தியிலேயே உங்கள் முன்னேற்றம் வந்துசேரும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. தானாகவே முடிவெடுக்கும் நீங்கள், இதுபோன்ற காலங்களில் குடும்பப் பெரியவர்களையும், சான்றோர்களையும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நலம் தரும். மேலும் சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் பொழுது திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லலாம். திடீர் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமையாது. நாகசாந்திப் பாரிகாரங்களை நல்ல விதமாகச் செய்வதன் மூலம் தேக நலனை சீராக்கிக் கொள்ளலாம்.
உங்கள் ராசிக்கு 2-ல் குருபகவான் சஞ்சரிக்கிறார். குருவின் பரிபூரண பார்வை 6,8,10 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் 6-ம் இடத்தில் குருவின் பார்வை பதிவதன் மூலம் எதிர்ப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். எதிரிகளின் பலம் குறையும் இந்த நேரத்தில், நீங்கள் எடுத்த முடிவில் வெற்றி கிடைக்கப் போகிறது. அதே சமயம் அர்த்தாஷ்டமச் சனியின் பிடியில் சிக்கியிருக்கும் உங்களுக்கு சனி வக்ர இயக்கத்தில் இருப்பதாலும், ஆரோக்கியத்தைக் குறிக்கும் ஆறாமிடத்தைக் குரு பார்ப்பதாலும், நீடித்த நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ரண சிகிச்சை செய்யக்கூடிய நிலையில் இருந்தவர்கள் இனி சாதாரண சிகிச்சை செய்வதன் மூலமே குணமாகலாம். உற்சாகமும், தெம்பும் உள்ளத்தில் குடிகொள்ளும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். உத்தி யோகத்தில் உள்ளவர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்தக் கூடிய நேரமிது. உங்களின் பணிபுரியும் ஆற்றல், உங்களது பதவி உயர்விற்கு வழிவகுத்துக் கொடுக்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆனித் திருமஞ்சனத்தன்று சிவாலயத்திற்குச் சென்று, நடராஜரை தரிசனம் செய்தால் நன்மைகள் அடுக்கடுக்காக வந்துசேரும்.
ரிஷப சுக்ரன் சஞ்சாரம்
ரிஷப ராசியில் ஜூன் 29-ந் தேதி சுக்ரன் சஞ்சரிக்கிறார். ரிஷபம் சுக்ரனுக்கு சொந்த வீடாகும். அங்கு சுக்ரன் பலம்பெறுவதன் மூலம் தொழில் வளர்ச்சி மேலோங்கும். பங்குதாரர்களின் குணம் மாறி, தொடர்ந்து உங்களோடு செயல்படுவார்கள். வியாபார விரோதங்கள் விலகும். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு அகலும். சகோதர வர்க்கத்தினரின் பாச மழையில் நனைவீர்கள். உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
கடக புதன் சஞ்சாரம்
ஜூலை 1-ந் தேதி கடக ராசியில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்கு 2,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் விரய ஸ்தானத்திற்கு வரப்போவதால் குடும்பச் சுமை கூடும். எதிர்பாராத விரயங்கள் ஏராளமாக வரலாம். இது போன்ற காலங்களில் சுபவிரயங்களை ஏற்படுத்திக் கொண்டால் வீண் விரயங்களில் இருந்து தப்பிக்க இயலும்.
கடகச் செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். அங்கு செவ்வாய் நீச்சம் பெறுவதால், ஆரோக்கியத் தொல்லைகளைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகலாம். எனவே நோய்க்கான அறிகுறிகள் தோன்றும் பொழுது, மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. முன்னோர் வழிச் சொத்துகளில் மீண்டும் பிரச்சினைகள் உருவாகலாம். சகோதர வர்க்கத்தினரின் வெறுப்பிற்கு ஆளாவீர்கள். உடன்பிறப்புகளோடு தொழில் கூட்டு வைத்திருப்பவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக தனித்து இயங்க நேரிடும். உத்தியோகத்தில் உயர்பதவி வகித்தவர்கள் பாதிப்புக்கு ஆளாகி பதவி இழக்கும் சூழல் வரலாம். எனவே பணிபுரியும் இடத்தில் மிகுந்த கவனம் தேவை.
பெண்களுக்கு
உங்களுக்கு இன்பமும், துன்பமும் கலந்து வரும் மாதம் இது. ஒரு சில நாட்கள் ஓகோ என்றிருப்பீர்கள். ஒருசில நாட்கள் யோசித்து செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சச்சரவுகள் மேலோங்கும். புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் வழியில் மாதத் தொடக்கத்திலேயே விரயங்கள் ஏற்படலாம். மாமன், மைத்துனர் வழியில் உதவிகள் கிடைக்கும். குருபலம் நன்றாக இருப்பதால் பணப்பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும். தாய்வழி ஆதரவு குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடன்பிறப்புகளால் நன்மை உண்டு. வருமானப் பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள்.நடராஜர் வழிபாடு நன்மையை வழங்கும்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் கன்னி ராசி அன்பர்களே!
உங்களின் ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு 3,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாயும், விரயாதிபதியான சூரியனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். ராசியிலேயே குருபகவான் சஞ்சரிக் கிறார். எனவே விரயங்கள் கூடும். குடும்பச்சுமை அதிகரித்தாலும் குருபலத்தால் அதைச் சமாளித்து விடுவீர்கள்.
சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். அரசு வழிச் சலுகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வீடுகட்ட, வாகனம் வாங்க ஏதேனும் விண்ணப்பம் செய்திருந்தால் அது பரிசீலிக்கப்பட்டு பணம் கைக்கு வந்து சேரலாம். அஷ்டமாதிபதி வலிமை இழப்பது யோகம்தான். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை இப்பொழுது ஈடுகட்டுவீர்கள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் மீண்டும் வந்து இணைவர். உணர்ச்சிவசப்பட்டு பேசி பகையாகிப் போன உறவு, மீண்டும் நட்பாக மாறும்.
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிசெய்து கொள்வீர்கள். ஆளுமை சக்தி அதிகரிக்கும். ஆதாயம் பார்க்காமல்அடுத்தவர்களுக்கு உதவியதன் விளைவாக ஆச்சரியப்படத்தக்க சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். அசுர குருவான சுக்ரன் 8-ல் மறைந்தாலும், அதன் பார்வை 2-ம் இடத்தில் பதிகின்றது. 2-ம் இடமான துலாம் ராசி சுக்ரனுக்குரிய சொந்த வீடாகும். எனவே தன் வீட்டைத் தானே பார்க்கும் சுக்ரனால் வசதிகள் பெருகும். வருமானம் திருப்தி தரும். நகை வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள்.
3-ம் இடத்தில் சனி வக்ரம் பெற்றிருப்பதால் விபரீத ராஜயோகம் செயல்படப் போகிறது. 6-க்கு அதிபதி சனி வக்ரம் பெறுகிறார். எனவே இடையிடையில் எதிர்பாராத நல்ல திருப்பம் வரலாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். சாட்சி கையெழுத்திட்டதன் மூலம் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும்.
வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். பணியாளர் களின் தொல்லை அகலும். பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதியவர்களை சேர்க்க முன்வருவீர்கள். இம்மாதம் ஆனித் திருமஞ்சனம் வருகின்றது. அன்யை தினம் நடராஜரை வழிபட்டு வந்தால் இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும்.
ரிஷப சுக்ரன் சஞ்சாரம்
ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். அப்போது உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை அதன் மீது பதிகிறது. எனவே திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். செல்வநிலை ஒருபடி உயரும். பழுதான பழைய வாகனங்களை கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அதிகாரிகளோடு ஏற்பட்ட பகை மாறும். புதிய பாதை புலப்படும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்துசேரும்.
கடக புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிநாதனும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதனும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். ஜூலை முதல் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறப்போகிறது. எனவே அதன் பிறகு பண மழையிலும், உறவினர்களின் பாசமழையிலும் நனையப் போகிறீர்கள். வெளிநாட்டு யோகம் எண்ணியபடியே வந்து சேரும். புண்ணிய காரியங்களுக்குச் செலவிட முன்வருவீர்கள். முன்னோர்கள் செய்த திருப்பணிகளை முறையாகச் செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள்.
கடக செவ்வாயின் சஞ்சாரம்!
ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். கடக ராசி செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 3,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வலிமை இழக்கும் பொழுது இழப்புகளை ஈடுசெய்ய பெரிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். ஊர்மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வாடகை இடத்தில் தொழில் செய்வோர் சொந்த இடத்திற்கு மாறும் சூழ்நிலை உருவாகும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பணியாளர்களை மாற்றுவதில் மும்முரம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும்.
பெண்களுக்கு!
குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். கூடப்பிறந்தவர்களால் நன்மை உண்டு. தாய்வழி ஆதரவு தானாக வந்து சேரும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளை களின் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக் களைப் பெறுவீர்கள். குலதெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். செவ்வாய் நீச்சம் பெறும் நேரம். உங்கள் பெயரில் உள்ள சொத்துகளை கொடுத்து விட்டுப் புதிய சொத்துகள் வாங்க முன்வருவீர்கள். 6-ல் கேது இருப்பதால் பக்கத்து வீட்டாரின் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சீரான வாழ்வு அமைய அறுபத்துமூவர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிய சொல்லும் துலாம் ராசி அன்பர்களே!
உங்களின் ஆனி மாதக் கிரகநிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சனி 2-ம் இடத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து 6-ம் இடத்தைப் பார்க்கிறார். பொதுவாகவே இம்மாதம் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் என்றே சொல்லலாம். சுக்ர பலம் கூடுதலாக இருக்கும் பொழுது, வசதி பெருகும். வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும்.
வேலை கிடைக்கவில்லையே என்று வேதனைப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும். மாலை கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு மாலை சூடும் வாய்ப்பு கிட்டும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று அங்கலாய்த்தவர்களுக்கு இப்பொழுது தகுந்த பலன் கிடைக்கப் போகிறது. கொடுக்கல்-வாங்கல்களில் ஆதாயம் உண்டு. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
ஏழரைச் சனியில் எத்தனையாவது சுற்று உங்களுக்கு நடைபெறுகிறது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். முதல்சுற்று நடைபெற்றால் முன்னேற்றப் பாதையில் சில குறுக்கீடுகள் வந்து சேரும். இரண்டாவது சுற்று நடைபெற்றால் இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறும். அதை ‘பொங்கு சனி’ என்று அழைப்பார்கள். மூன்றாவது சுற்று, நான்காவது சுற்று நடைபெறுபவர்கள் ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்பட நேரிடலாம். என்ன இருந்தாலும் சனி உங்களுக்கு ஓரளவு நன்மையைச் செய்பவராகத்தான் இருக்கிறார். எனவே கூடியவரை நல்ல பலன்களையே அவர் வழங்குவார்.
இருப்பினும் மந்தன் எனப்படும் சனி, மந்த கதியில் இயங்குபவர். காரியங் களில் தாமதம் ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். சனிக்குரிய கவசத்தைப் பாடி, சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. சனி பகவானுக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சனிக் கிழமை அல்லது புதன்கிழமை சென்று, கரு நீல வண்ணத்தில் வஸ்திரம் அணிவித்து, சுகந்த வாசமுள்ள மலர் மாலையைச் சூட்டி வழிபடுவதன் மூலம் பிரச்சினைகள் நீங்கும்.
இம்மாதம் ஆனித் திருமஞ்சனம் வருகிறது. அன்றைய தினம் நடராஜர் சன்னிதியில் சிவபுராணம் பாடி வழிபடுவதன் மூலம் நன்மைகளை அதிகம் பெறலாம். மாதத்தின் மையப் பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.
ரிஷப சுக்ரன் சஞ்சாரம்
ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். ராசிநாதன் மறைவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் நிம்மதி குறையும். கருத்து மோதல்கள் அதிகரிக்கும். எந்தச் செயலையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. மற்றவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். அரசு வழியில் தொல்லைகளும், அரசாங்கத்தால் சிக்கல்களும் உருவாகலாம். வெளிநாட்டு வேலையில் இருப்பவர்கள் திடீர் என மாற்றப்படுவர். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும். பெண்வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும்.
கடக புதன் சஞ்சாரம்
ஜூலை முதல் கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்திற்கு பயனிக்கும் புதன், முத்தான பலன்களை வழங்கப் போகிறார். மாமன் வழி உறவால் மகிழ்ச்சி ஏற்படும். மன இறுக்கம் அகலும். எதிர்காலம் பற்றிய பயம் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வர். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கூடுதலாகக் கிடைக்கும்.
கடக செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். தன சப்தமாதிபதியான செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். எனவே பணப்புழக்கத்தில் தடை ஏற்படும். பற்றாக்குறை அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சங்கிலித் தொடர்போல கடன்சுமை தொடர்ந்து கொண்டிருக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். உங்களுக்குரிய பங்கை பிரித்துக்கொடுக்காமல், சகோதரர்கள் கவலை அடையவைப்பர். போராடி வெற்றி பெறும் நேரமிது.
பெண்களுக்கு!
மாதத் தொடக்கம் முதல் ஜூலை 11-ந் தேதி வரை, உங்களுக்கு நல்ல பலன்களே வந்து சேரும். இல்லம் தேடி இனிய செய்திகள் வரத்தொடங்கும். தாய்வழி ஆதரவு பெருகும். சகோதர வர்க்கத்தினர் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பர். வீண்பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கான சுபகாரியங்களைச் செய்து முடிக்க வேண்டுமென்ற ஆசை மேலோங்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்களை விட்டு விலகலாம். சொத்துப் பிரச்சினைகள் உருவாகலாம். வராகி வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

நினைத்ததை செய்து முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சூரியனோடும், புதனோடும் இணைந்து சஞ்சரிக்கிறார். ராசிநாதனாகவும், 6-க்கு அதிபதியாகவும் விளங்கும் செவ்வாய் 8-ம் இடத்தில் வலிமையிழந்து சஞ்சரிக்கும் பொழுது ராஜயோக அமைப்பு உருவாகிறது. எனவே தொட்ட காரியங்கள் வெற்றியாகும். தொகை வரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும்.
புத ஆதித்ய யோகம் இருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அதிகப் பிரயாசை எடுக்காமலேயே அனைத்துக் காரியங்களும் வெற்றியாக முடியும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கல்வி மற்றும் கலைத்துறை சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும்.
தன பஞ்சமாதிபதியாக விளங்கும் குரு பகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் திடீர் என வந்து சேர்ந்து திக்குமுக்காட வைக்கும்.
வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏற வேண்டுமானால், வியாழ பகவானின் அருட்பார்வை வேண்டும். அந்த அருட்பார்வை, உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3,5,7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே முன்னேற்றத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். முக்கியப் புள்ளிகள் உங்கள் இல்லம் தேடிவந்து உதவிக்கரம் நீட்டுவர். தங்கம், வெள்ளி தானாக வந்து சேரும். விற்பனையான சொத்துகளுக்குப் பதிலாக மீண்டும் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள். புண்ணிய காரியங்களுக்கு பொருளுதவி செய்வீர்கள்.
ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெற்றாலும், ஏழரைச் சனி இனி நற்பலன்களைக் கொடுக்கத் தொடங்கும். சனி வக்ரம் பெற்றுச் சஞ்சரிப்பதால் சஞ்சலங்கள் தீரும். சந்தோஷம் சேரும். சனிக் கிழமை தோறும் சனீஸ்வர பகவானை, சனி கவசம் பாடி வழிபாடு செய்யுங்கள். கற்பக விநாயகர் வழிபாடும் ஆனந்தமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். ஆனித் திருமஞ்சனத்தன்று நடராஜர் தரிசனம் பார்த்தால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.
 
ரிஷப சுக்ரன் சஞ்சாரம்
ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். சப்தம ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிப்பது மிகுந்த யோகமாகும். 7-ல் சஞ்சரிக்கும் சுக்ரன், உங்கள் ராசியைப் பலமாக பார்க்கிறார். நவக்கிரகத்தில் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர் சுக்ரன். எனவே நீங்கள் சொல்லும் சொற்கள் எல்லாம் வெல்லும் சொற்களாக மாறும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடக புதன் சஞ்சாரம்
ஜூலை 1-ந் தேதி கடக ராசிக்குப் புதன் செல் கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 8,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். லாபாதிபதியாக விளங்கும் புதன் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும். கூட்டாளிகளால் நன்மை உண்டு. மாமன், மைத்துனர்கள் உங்கள் சேமிப்பு உயர வழிவகுத்துக் கொடுப்பர். பூமி வாங்கும் யோகம் முதல் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் யோகம் வரை படிப்படியாக வந்து சேரும் நேரம் இது. சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கமும் உங்களுக்கு நற்பலன்களைத் தரும் விதத்திலேயே இருக்கிறது. 4-ல் கேது, 10-ல் ராகு இருப்பதால் நாகசாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வதன் மூலம் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
கடகச் செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். அங்கு அவர் நீச்சம் பெறுகிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். அலைச்சல்களை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். 6-க்கு அதிபதியாகவும் செவ்வாய் இருப்பதால், அது நீச்சம்பெறுவது ஒருவழிக்கு நன்மையை வழங்கும். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். அங்காரக வழிபாடு அதிக நன்மையை வழங்கும்.
பெண்களுக்கு!
முன்னேற்றங்கள் அதிகரிக்கும் மாதம் இது. மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள். தாய்வழியில் தனவரவு உண்டு. கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உத்தியோக உயர்வு, சம்பள உயர்வு போன்றவை பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வாகன யோகம் உண்டு. குழந்தைகளின் கனவுகளை நனவாக்குவீர்கள். சக ஊழியர் களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஜென்மச் சனிக்குப் பரிகாரமாக சனிக்கிழமை தோறும் சனிபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிரதோஷம் அன்று நந்தீஸ்வரரையும், உமா மகேஸ்வரரையும் வழிபட்டு நலங்களை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

பெருந்தன்மை குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருபகவான் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கிறார். 10-ல் குரு வரும்பொழுது பதவியில் மாற்றம் வரும் என்பார்கள். அந்த அடிப்படையில் தெசாபுத்தி பலம் பெற்றிருந்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம். தெசாபுத்தி பலமிழந்திருந்தால் பதவி இறக்கம் ஏற்படலாம். அதே நேரத்தில் உங்கள் ராசி அடிப்படையில் ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது.
தனுசு ராசிக்குச் சனிபகவான் நன்மை செய்பவர்தான் என்றாலும், விரயச் சனியின் ஆதிக்கத்தில் அல்லவா இப்பொழுது இருக்கிறார். எனவே பணம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்காது. அதே நேரம் சேமிப்பு கரைகிறதே என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். தனாதிபதியாகவும், சகாய ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால், தேவைக்கேற்ற பணத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். காரியத்தைத் தொடங்கிவிட்டால் பணம் தானாக வந்து சேரும். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
குருவின் பார்வையும், குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. எனவே குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள், இனிமேல் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இருக்கின்றன. சப்தமாதிபதியான புதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும்.
பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். மேலிடத்து அனுகூலம் கிடைக்கும். வீண் வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் வந்த தொல்லைகள் அகலும். சூரிய – செவ்வாய் சேர்க்கையால் அரசு வழித் தொல்லைகளுக்கு ஆளாக நேரிட்டாலும், குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் அதிலிருந்து விடுபட இயலும். அதே நேரத்தில் சகாய ஸ்தானத்தில் கேதுவும், 9-ம் இடத்தில் ராகுவும் இருப்பதால், ராகு-கேது பிரீதிகளை முறையாகச் செய்துகொள்வது நல்லது. பிரதோஷ காலத்தில் விஸ்வரூப நந்தியை வழிபடுவது பிரச்சினையை தவிர்க்கும்.
இந்த மாதத்தில் ஆனித் திருமஞ்சனம் வருகின்றது. இறைவன் காட்சி கொடுக்கும் திருநாள் இது. உங்கள் மனக்கவலை மாறவும், பணக்கவலை, தீரவும் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறவும், திருமஞ்சன நாளில் நடராஜப் பெருமானை வழிபட்டு வருவது நல்லது.
ரிஷப சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை மேஷத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன் ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்குச் செல்கிறார். 6-க்கு அதிபதி 6-ல் சஞ்சரிக்கும் பொழுது, வாங்கல்- கொடுக்கல்களில் கவனம் தேவை. வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். பழைய வியாதிகள் மீண்டும் தலைதூக்கலாம். பய உணர்ச்சி அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் துணிந்து செய்ய இயலாது. செய்வோமா, வேண்டாமா என்ற இரட்டித்த சிந்தனை மேலோங்கும். இதுபோன்ற காலங்களில் துணிவும், தன்னம்பிக்கையும் உங்களுக்குத் தேவை. பெரியோர்களின் ஆலோசனைகளையும், அருளாளர்களின் ஆசியும் தான் உங்களுக்கு மனநிம்மதியைக் கொடுக்கும்.
கடக புதன் சஞ்சாரம்
ஜூலை 1-ந் தேதி கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 8-ல் புதன் சஞ்சரிப்பது ஒரு வகைக்கு நன்மைதான். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். வீடுமாற்றச் சிந்தனை மேலோங்கும். புதிய ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றாக வந்து சேரலாம். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
கடக செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். கடக ராசி என்பது செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5,12-க்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் நீச்சம் பெறுவதால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வாங்கிய சொத்துகளில் பிரச்சினைகள் உருவாகும்.
பெண்களுக்கு!
இம்மாதம் பொருளாதார நிலை உயரும் மாதமாகவே கருதலாம். புதிய பாதை புலப் படும். உயர்பதவிகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்குஅது கைகூடும். கணவன்- மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் குரலுக்கு குடும்ப  உறுப்பினர்கள் செவிசாய்ப்பர். வாங்கல் -கொடுக் கல்கள் ஒழுங்காகும். வாரிசுகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வாகனப் பழுதுச் செலவுகளால் கவலை ஏற்படும். எனவே பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் மும்முரம் காட்டுவீர்கள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உங்களுக்குகூடுதலாக இருக்கும். விரயச்சனியின் ஆதிக்கம் நடப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். பெருமாள்- லட்சுமி வழிபாடு பெருமைகளைச் சேர்க்கும்.

வருமுன் காக்கும் வழிகளை தெரிந்து வாழும் மகர ராசி அன்பர்களே!
உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். ராசிக்கு 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதிகமாக செலவு ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். அதே நேரத்தில் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் என்றே சொல்லலாம். மகத்தான காரியங்களைச் செய்ய, மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அதே நேரத்தில் 6-ம் இடத்தில் சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. அஷ்டமாதிபதி சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் விபரீத ராஜயோக அடிப்படையில் திடீர் மாற்றங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். வீடு கட்ட, வாகனம் வாங்க அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
‘மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றே சொல்லலாம். ஒருசிலர் உத்தியோகத்தில் நீடிக்கலாமா அல்லது விருப்ப ஓய்வில் வெளியில் வந்து தொழில் செய்யலாமா? என்று சிந்திப்பர். பெரும்பாலும் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் செய்யும் வாய்ப்பு இதுபோன்ற காலங்களில் ஏற்படும்.
ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை போன்றவற்றின் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பு உண்டு. புத-ஆதித்ய யோகம் இருப்பதால் கல்விக்காக எடுத்த முயற்சிகள் கைகூடும். அரசியலில் ஈடுபட்டிருப்பவர் களுக்கு அதிகப் பொறுப்புகள் வந்து சேரலாம். ராசிநாதன் வக்ரம் பெற்றிருக்கும் இந்த மாதத்தில் ஆரோக்கியக் குறைபாடுகள் வருவது இயற்கைதான். ஆயினும் நோய்க்கான அறிகுறிகள் தோன்றும் பொழுதே மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. ராகு-கேதுக் களின் ஆதிக்கம் இருப்பதால் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள்.
இம்மாதம் ஆனித் திருமஞ்சனம் வருகின்றது. அன்றைய தினம் சிவன் கோவில்களில் நடராஜர் அபிஷேகம் நடைபெறும். அன்றையப் பொழுது நடராஜர் அபிஷேக தரிசனத்தை கண்டு வந்தால், வாழ்வில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.
ரிஷப சுக்ரன் சஞ்சாரம்
ஜூன் 29-ந் தேதி ரிஷபத்தில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்கு 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். எனவே இந்த காலம் ஒரு இனிய காலமாகவே அமையும். பூர்வீக சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. நகை வாங்குவதில் ஆர்வம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி வங்கிகளில் வைப்புநிதி வைக்க முன்வருவீர்கள்.
கடக புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 6,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், ஜூலை 1-ந் தேதி கடக ராசியில் சஞ்சரிக்கிறார். எனவே கல்யாண வாய்ப்புகள் கைகூடும். நிரந்தர வேலையில்லாமல் இருந்தவர் களுக்கு வேலை அமையும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள் ஆச்சரியமாக இருக்கும். தேங்கிக் கிடந்த வேலைகளை விரைவில் முடிப்பீர்கள். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முன்னேற்றத்திற்கான வழிவகை செய்து கொள்வீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும்.
கடக செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசி செவ்வாய் நீச்ச வீடாகும். உங்கள் ராசி அடிப்படையில் சுக லாபாதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணவரவில் தடைகள் ஏற்படலாம். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும்.
பெண்களுக்கு!
உற்சாகத்தோடு செயல்படும் மாதம் இது. செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டேயிருக்கும். உறவினர் பகை மாறும். உங்கள் பெயரிலேயே வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டு புதிய பாதையை அமைத்துக் கொள்வீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்வதால் வாழ்வில் சிறப்பான நிலையை அடையலாம்.
பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்திகரமாக இருந்தாலும் கூட, அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். அரசு வழிச் சலுகைகள் கிடைக்கும். நடராஜர் தரிசனமும், சனிக்கிழமை அனுமன் வழிபாடும் நன்மைகளை வழங்கும்.

முன்யோசனையுடன் செயல்படும் கும்ப ராசி அன்பர்களே!
உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனிபகவான் தொழில் ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கும், 12-ம் இடத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால், சனியின் வக்ர இயக்கம் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. தொழிலுக்கு புதிய முதலீடு செய்ய புதிய கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்வீர்கள். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும்.
பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவிடும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். ஒரு சிலருக்கு வீடு, இடம் வாங்கும் யோகம் ஏற்படலாம். வெளியூர் அல்லது வெளி மாநிலங்களுக்குச் சென்று தொழிலை விரிவு செய்யவேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும்.
ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். மாதத் தொடக்க நாளில் 6-க்கு அதிபதி சந்திரன் கேதுவோடு இணைந்து செயல்படுகிறார். எனவே அலைச்சல் அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். குலதெய்வம் கோவிலுக்கு திருப்பணிகள் செய்வதற்காக உதவிகளை சிலர் செய்வார்கள். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பளப் பாக்கிகள் வசூலாகும். நேர்முகத் தேர்விற்கு பலமுறை சென்றும் வேலை கிடைக்கவில்லையே என்று வேதனைப்பட்டவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும்.
சகாய ஸ்தானத்தில் சுக்ரன் பலம் பெற்று இருப்பதால், பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. பஞ்சம ஸ்தானத்தில் புதன், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. சப்தமாதிபதி 5-ல் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட போராட்டங்கள் மாறும். புத- ஆதித்ய யோகம் செயல்படுவதால் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலத்தோடு ஒரு நல்ல காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். ஆனித் திருமஞ்சனத்தன்று நடராஜர் அபிஷேகமும், பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தைப் பற்றிய பயம் இனிதே விலகும்.
ரிஷப சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 4,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஜூன் 29-ந் தேதி ரிஷபத்தில் சஞ்சரிக்கப் போகிறார். சுக ஸ்தானம் எனப்படும் 4-ம் இடத்திற்கு அதிபதியாக விளங்கும் சுக்ரன், அந்த ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கும் பொழுது சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். தாய் வழியில் தனலாபம் உண்டு. வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒரு சிலருக்கு ஆடை, ஆபரணங்களின் சேர்க்கையும் உண்டு.
கடக புதன் சஞ்சாரம்
இதுவரை 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த புதன், தன் சொந்த வீட்டை விட்டு 6-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். மாமன், மைத்துனர்களின் இல்லத்தில் நடைபெறும் மங்கள நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்களுக்கு உதவுவீர்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட உயர்வு, இனிமேல் தானாக வந்து சேரும். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டு முயற்சிகள் இதுபோன்ற காலங்களில் கைகொடுக்கும்.
கடக செவ்வாய் சஞ்சாரம்
கடக ராசிக்கு ஜூலை 12-ந் தேதி செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். கடகத்தில் அவர் நீச்சம் பெறும் பொழுது, சகோதர ஒற்றுமை குறையும். நீங்கள் சார்ந்திருப்பவர்களால் பிரச்சினைகள் உருவாகலாம். தொழில் நடைபெறும் இடத்தை மாற்றலாமா? என்று சிந்திப்பீர்கள். ஒருசிலர் தொழில் நிலையத்தை பழுது பார்க்கும் சூழ்நிலை உருவாகும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளை அரவணைத்துக் கொள்வது நல்லது.
 
பெண்களுக்கு!
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் மாதம் இது. அண்ணன், தம்பி அக்கா, தங்கைகளை அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயம் கிடைக்கும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவதன் மூலம் நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கைத் துணை வழியே அடிக்கடி பிரச்சினைகள் வந்து அலை மோதும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
பிள்ளைகள் படிப்பில் தேர்ச்சி பெற்று நல்ல பெயர் எடுப்பார்கள். பிரயாசை எடுக்காமலேயே பெரிய படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கலாம். உத்தியோகத்தில் சக பணியாளர் களின் ஒத்துழைப்பு கிட்டும். சனிக்கிழமை தோறும் விரதமிருந்து, அதிகாலையில் ஆனைமுகப் பெருமானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை விதவிதமாக உபசரிக்கும் மீன ராசி அன்பர்களே!
உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. 6-ல் ராகு நிற்க, குரு கேந்திரத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் செயல்படும் என்பார்கள். அந்த அடிப்படையில் இந்த மாதத்தின் கிரக நிலைகள் இருக்கின்றன. எனவே, பணப்புழக்கம் நன்றாக இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். கருத்து மோதல்கள் அகலும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து பாராட்டுப் பெறுவீர்கள்.
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அஷ்டலட்சுமி யோகம் செயல்படும் பொழுது எட்டு வகை லட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் அல்லவா?. எனவே தைரியத்தோடு சில முக்கிய முடிவெடுப்பீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்தும் நடைபெறும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
எப்பொழுது திருமணம் முடியும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு, இந்த மாதம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். 2-ல் சுக்ரன் இருப்பது ஒருவழிக்கு நன்மைதான். கவர்ச்சியாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வீட்டுக் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. எனவே அச்சுறுத்தும் நோய் உங்களை விட்டு அகலும். உறவினர் பகை அகல, புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். அரசியல் அனுகூலம் உண்டு. லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்கும் சனிபகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே வெளிநாட்டு முயற்சியில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் விரும்பும் விதத்தில் அமையும்.
உத்தியோகம் சம்பந்தமாக வெளிநாட்டிற்குச் சொந்தச் செலவில் செல்ல நினைப்பவர்கள், கொஞ்சம் யோசித்துச் செயல் படுவது நல்லது. வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். இம்மாதம் பார்க்கும் குருவைப் பலப்படுத்துவதோடு, குருவிற்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதும் நல்லது.
ரிஷப சுக்ரன் சஞ்சாரம்
ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். சகாய ஸ்தானாதிபதி சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு இலாகா மாற்றங்கள் வந்து சேரலாம். வழக்குகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் ஒருசிலருக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல்கள் கிடைக்கலாம். உடன்பிறப்புகளில் ஒருசிலர் உங்களை விட்டு விலக நேரிடலாம். பணியாளர் தொல்லை அதிகரிக்கும்.
கடக புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன், அவர் 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக கடல் தாண்டிச் சென்று படிக்க வேண்டு மென்று விரும்பினால், அதற்காக எடுத்த முயற் சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட பிணக்குகள் அகலும். பூர்வீகச் சொத்துகளில் ஒரு பகுதியை விற்று விட்டு, புதிய சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடக செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். அந்த வீடு அவருக்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 2,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணப்பற்றாக்குறை ஏற்படலாம். பக்கபலமாக இருக்கும் நண்பர்களுக்குள் பகை ஏற்படக்கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாமல் போகலாம். தைரியமும், தன்னம்பிக்கையையும் தக்க வைத்துக் கொள்ளுங்கள். ஆனித் திருமஞ்சனத்தன்று நடராஜர் தரிசனம் பார்ப்பதன் மூலம் நலம் யாவும் வந்து சேரும்.
பெண்களுக்கு!
இந்த மாதம் குரு பார்வையால் குழப்பங்கள் அகலும். குதூகலம் கூடும். இழப்புகளை ஈடுசெய்ய இனிய வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப ஒற்றுமை பலப் படும். கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். மழலைச் செல்வத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரப்பேறு கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உடன்பிறப்புகளில் ஒரு சிலர் உங்களுக்கு எதிரியாகலாம். பெற்றோர் வழியில் ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும் வாய்ப்பு உண்டு. ஆனைமுகன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

NO COMMENTS

Leave a Reply

%d bloggers like this: