Aadi Madha Rasipalan | ஆடி மாத ராசி பலன்கள் 17.7.2017 முதல் 16.8.2017 வரை

0
83
Share on Facebook
Tweet on Twitter

அனைவரிடமும் எதிர்பார்ப்பு இன்றிப் பழகும் மே‌ஷ ராசி அன்பர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் கடக ராசியில் நீச்சம் பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் அவரோடு 3,6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதனும், பஞ்சமாதிபதியான சூரியனும் கூடியிருக்கின்றனர். சுக ஸ்தானத்தில் 3 கிரகங்களும் சேர்ந்திருப்பது யோகம்தான்.
புத–ஆதித்ய யோகம் இருப்பதால் குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல்– வாங்கல்கள் ஒழுங்காகும். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். பயணங்கள் பலன் தரும் விதத்தில் அமையும். தாய்வழி ஆதரவு பெருகும். தொழில் பங்குதாரர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். அரசியலில் பிரவேசிக்க ஆயத்தம் செய்தவர்களுக்கு, எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும்.
தனாதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் வீற்றிருப்பது யோகம்தான். அவரைக் குரு பகவான் பார்க்கிறார். பார்க்கும் குருவால் பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். சுக்ர பலம் நன்றாக இருக்கும் பொழுது, துணிந்து எதையும் செய்யலாம் என்ற நம்பிக்கை உருவாகும்.
அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் அதிக மாகக் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பெண்களால் பெருமை சேரும். வங்கிகளில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த சலுகைகளும், கடன் உதவிகளும் தானாக வந்து சேரும்.
பின்னோக்கி நகரும் கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் ராகு–கேதுக்களின் மாற்றங்களும் இம்மாதத்தில் நிகழவிருக் கிறது. சுக ஸ்தானத்தில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஆரோக்கியத் தொல்லை ஏற்படாமல் இருக்கவும், தொழிலில் இருக்கும் தடைகள் அகலவும், தனவரவு திருப்தி அளிக்கவும், நாகசாந்திப் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் உங்கள் சுய ஜாதக அடிப்படையில் அனுகூலம் தரும் ஸ்தலங்களில் செய்வது நல்லது. முறையான ராகு–கேது வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும். ஆடி வெள்ளி தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
சிம்ம புதனும், வக்ர புதனும்
ஜூலை 22–ந் தேதி சிம்மத்திற்கு புதன் செல்கிறார். 6–க்கு அதிபதியாக விளங்கும் புதன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, உங்களின் பிள்ளைகளுக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். சகோதர வழி சச்சரவுகள் குறையும். பல மாதங்களாக நடைபெற்ற பாகப்பிரிவினை, இப்பொழுது நல்ல முடிவிற்கு வரும். சிம்ம ராசிக்குள்ளேயே ஜூலை 30–ந் தேதி புதன் வக்ரம் பெறுகிறார். ஆகஸ்டு 6–ந் தேதி மீண்டும் கடக ராசிக்குப் புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். இதன் விளைவாக மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். உத்தியோக மாற்றங்கள் ஒரு சிலருக்கு உருவாகலாம். அரசு பணி கிடைக்கவில்லையே என்று நினைத்தவர்களுக்கு அது கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும்.
ராகு–கேதுக்களின் மாற்றம்!
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரித்தார்கள். இப்பொழுது ஜூலை 27–ந் தேதி கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவுமாக பின்னோக்கிச் செல்கிறார்கள். கடகத்தில் ராகு சஞ்சரிப்பது ஒரு வழிக்கு யோகம் தான். கடக ராகு கைநிறையக் கொடுப்பார். எனவே பொருளாதாரத்தில் மேம்பாடு இருக்கலாம். அதே நேரத்தில் சுக ஸ்தானம் எனப்படும் 4–ம் இடத்தில் ராகு வருவதால்  ஆரோக்கியத்திற்காகச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். 10–ம் இடத்து கேது தொழில் மாற்றங்களைக் கொடுக்கலாம். சுயஜாதகம் பலம் பெற்றிருந்தால் கேதுவால் அதிக பாதிப்புகள் இருக்காது.
சனியின் வக்ர நிவர்த்திக் காலம்!
ஆகஸ்டு 4–ந் தேதி சனி வக்ர நிவர்த்தியாவதால், அஷ்டமத்துச் சனி பலம் பெறுகிறார். எனவே இடமாற்றம், வீடு மாற்றம் உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் என்று மாற்றங்கள் உருவாகும் சூழ்நிலை உண்டு. உறவினர் பகை அதிகரிக்கும். வீண் விரயங்கள் ஏற்படலாம்.
இறை வழிபாடு  :  துர்க்கை வழிபாடு துயரம் போக்கும்.
வளம் தரும் நாட்கள்:–  ஜூலை: 19,20,24,25 ஆகஸ்டு: 4,5,6,10,11,16
மகிழ்ச்சி தரும் வண்ணம்:– பச்சை
பெண்களுக்கு…
மாத தொடக்கத்தில் வருமானப் பெருக்கமும், மூன்றாம் வாரத்திற்கு மேல் விரயங்களும் ஏற்படும். ராகு–கேது பெயர்ச்சி நன்மை தரும் என்றாலும் உத்தியோகம், தொழிலில் நிலையற்ற தன்மையை உருவாக்கும். நீண்ட தூரப் பயணங்களால் பலன் கிடைப்பது அரிது. கணவன்– மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தாய்வழி உறவில் விரிசல் ஏற்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப் படுவீர்கள். அதற்கான வேலை வாய்ப்புக் கிடைத்து உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். வீடு மாற்றச் சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. செவ்வாய் விரதமும், அம்பிகை வழிபாடும் செல்வ நிலையை உயர்த்தும்.

உழைப்பால் வெற்றி காணும் ரி‌ஷப ராசி அன்பர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். பொருளாதார நிலை உயரும். புகழ் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து, முக்கியக் காரியங்கள் முடிய வழிவகுத்துக் கொடுப்பார்கள். குரு பார்வை, உங்கள் ராசியில் பதிவதால் சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் கூட இப்பொழுது சிறப்பாக நடைபெறும்.
மங்கள ஓசை மனையில் கேட்கவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு மகிழ்ச்சியடையும் விதத்தில் கல்யாண வாய்ப்புகள் கைகூடப் போகின்றது. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். உடன் பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். சொத்துகளால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சுக்ர பலம் நன்றாக இருப்பதால்,     ஆபரண சேர்க்கையும் அதிகரிக்கும்.
ஒரு சிலருக்கு அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அணிந்து அழகு பார்க்கும் சூழ்நிலை உருவாகலாம். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். வீடு வாங்கும் யோகம் உண்டு.   வெளிநாட்டு அழைப்புகளை ஏற்றுக் கொள்பவர்கள், சுயஜாதகத்தை ஒருமுறை ஆராய்ந்து பார்த்துக்கொள்வது நல்லது.
ராகு–கேதுக்களின் பெயர்ச்சியும் இம்மாதத்தில் நடைபெற இருக்கிறது. பின்னோக்கி நகரும் இந்த இரண்டு கிரகங்களும் ஒருவரது ஜாதகத்தில் பலம் தரும் இடத்தில் அமர்ந்து அதன் திசாபுத்திகள் நடைபெறுமேயானால், மிதமிஞ்சிய பொருளாதாரம் வந்து சேரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை பரிசீலனை செய்யப்பட£மலேயே கிடைக்கும். தற்சமயம் 3–ல் ராகுவும், 9–ல் கேதுவும் வருகிறார்கள். எனவே வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், வாய்ப்புகளில் வரும் தடை அகலவும் அனுகூல ஸ்தலங்களில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.
ஆடி வெள்ளியன்று விரதமிருந்து அம்பிகையை வழிபட்டு வந்தால், கோடி கோடியாய் நன்மைகள் வந்து சேரும்.
சிம்ம புதனும்.. வக்ர புதனும்..
ஜூலை 22–ந் தேதி சிம்ம ராசிக்கு, புதன் செல்லப் போகிறார். தன பஞ்சமாதிபதி 4–ல் சஞ்சரிக்கும் பொழுது தனவரவிற்கு பஞ்சம் இருக்காது. அதே நேரத்தில் புதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குறிப்பாக ஜூலை 30–ந் தேதி சிம்மத்தில் புதன் வக்ரம் பெறுகிறார். அதன்பிறகு ஆகஸ்டு 6–ந் தேதி கடகத்தில் புதன் வக்ரம் பெறுகிறார். எந்த இடத்தில் அவர் வக்ரம் பெற்றாலும் தனாதிபதியாக புதன் விளங்குவதால், வக்ர காலத்தில் பணப்பற்றாக்குறை ஏற்படும். ஒரு சிலர் கைமாற்று வாங்கும் சூழ்நிலை உருவாகும். தேவைகள் அதிகரிக்கும். சேமிப்பு கரையும். நெருங்கிய உறவினர்களால் பிரச்சினைகள் உண்டாகக்  கூடும். இதுபோன்ற நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
கடக ராகுவும், மகர கேதுவும்!
ஜூலை 27–ந் தேதி சிம்மத்தில் இருந்து கடகத்திற்கு ராகு செல்கிறார். அதே நேரத்தில் கும்பத்தில் இருந்து கேது மகரத்திற்குச் செல்கிறார். சகாய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும்பொழுது ஒரு சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்துசேருவர். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் அகலும். மூன்றாம் நபர் ஒருவர், உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பார்.
கேது 9–ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. பங்காளிப் பகை அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்பும் சூழ்நிலை உருவாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு.
சனியின் வக்ர நிவர்த்திக் காலம்!
உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமாக விளங்கும் சனி, ஆகஸ்டு 4–ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே சுப விரயங்கள் அதிகரிக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். துணிவும், தன்னம்பிக்கையும் உயரும். தொழில் முன்னேற்றம் உண்டு. பாகப் பிரிவினைகள் இழுபறி நிலையில் இருக்கும்.
இறை வழிபாடு  :  வெள்ளி தோறும் தெற்கு நோக்கிய அம்பிகை வழிபாடு
வளம் தரும் நாட்கள்:– ஜூலை: 22,23,26,27 ஆகஸ்டு: 7,8,11,12
மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  ஆனந்தா நீலம்.
பெண்களுக்கு…
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். வருமானம் பெருகும். தாய்வழி ஆதரவு தடையின்றி வந்து சேரும். கணவன்– மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். கட்டிடப் பணி தொடரும். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய வாகனங்கள் வாங்கிப் பயணிக்கும் சூழ்நிலை உருவாகும். அலுவலகத்தில் கூட எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதனின் வக்ர நிவர்த்திக் காலத்தில் மட்டும் கொஞ்சம் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.  ராகு–கேதுக்களுக்குரிய பரிகாரங்களைச் செய்து கொள்வதன் மூலம் தேக நலன் சீராகும். செல்வ நிலை உயரும். ஆடி வெள்ளியில் அம்பிகை வழிபாடு ஆனந்த வாழ்வை அமைத்துக் கொடுக்கும்.

பொதுத் தொண்டில் ஆர்வம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவர் சகாய ஸ்தானாதிபதி சூரியனுடனும், 6,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாயுடனும் சேர்ந்திருக்கிறார். எனவே பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய திருப்பங்கள் பலவும் காணப் போகிறீர்கள்.
புத–ஆதித்ய யோகம் செயல்படும் இந்த மாதத்தில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். உடனிருக்கும் பணியாளர்களில் ஒரு சிலரை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். கடன் சுமை குறைய புதிய வழி உருவாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களை அகற்றிக் கொள்ள நல்ல முடிவெடுப்பீர்கள். நினைத்த காரியம் நல்லவிதமாக               நடந்தேறும். அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவரின் ஆதரவு கிடைத்து, அதன் மூலமாக வரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்வீர்கள். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி நல்ல பெயர் எடுத்துக் கொள்வீர்கள்.
குரு 4–ல் பலம் பெற்றிருப்பதால் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்படும். உடலில் ஏதேனும் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. பொதுவாக 4–ம் இடத்தில் வரும் குருவை, அர்த்தாஷ்டம குரு என்று சொல்வது வழக்கம். இந்த காலங்களில் வீண் விரயம் உருவாகலாம். அதைச் சுபவிரயமாக மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனம். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலமாக அமையும்.
6–க்கு அதிபதியான செவ்வாய் இப்பொழுது வலிமை இழந்திருப்பதால் நிலம், பூமி சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு கூட லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.
ராகு–கேதுக்களின் பெயர்ச்சியும் இம்மாதம் நிகழவிருக்கிறது. 2–ல் வரப்போகும் ராகுவால் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும் என்றாலும், 8–ல் வரும் கேதுவால் இடர்பாடுகள் கொஞ்சம் உருவாகலாம். எனவே தொல்லையில் இருந்து மீளவும், தொழில் வளம் கூடவும் நாகசாந்திப் பரிகாரங்களை யோக பலம் பெற்ற நாளில் செய்து கொள்வது நல்லது.
சிம்ம புதனும், வக்ர புதனும்!
ஜூலை 22–ந் தேதி சிம்ம ராசிக்குப் புதன் செல்கிறார். ராசிநாதன் சகாய ஸ்தானத்திற்கு செல்லும் பொழுது, கொடுக்கல்– வாங்கலில் இருந்த  மந்த நிலை மாறும். தேங்கியிருந்த காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஜூலை 30–ந் தேதி சிம்ம ராசியிலும், ஆகஸ்டு 6–ந் தேதி கடக ராசியிலும் புதன் வக்ரம் பெறுகிறார். வக்ர காலத்தில் வளர்ச்சியில் தளர்ச்சி உருவாகலாம். உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பத்திரப் பதிவுகளில் தாமதம் ஏற்படும். வீடுகட்டும் பணி பாதியிலேயே நிற்கலாம்.
ராகு– கேது பெயர்ச்சி!
ஜூலை 27–ந் தேதி கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றனர். தன ஸ்தானத்தில் ராகு வரும் பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாகும். மனக் குழப்பங்கள் அகலும். மாறுபட்ட கருத்து கொண்டவர்களும் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தொழில் வளர்ச்சி கூடும். அதே நேரம் அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல தல்ல. அலைச்சல் கூடுதலாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
சனியின் வக்ர நிவர்த்திக் காலம்!
ஆகஸ்டு 4–ந் தேதி சனி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 8,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகும் பொழுது உத்தியோகம், தொழிலில் நல்ல மாற்றங்களைக் கொடுப்பார். பெற்றோர் வழியில் பிரியம் குறையக்கூடும். குடும்ப பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். ‘வேலையில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெறலாமா?’ என்று சிந்திக்கும் நேரமிது.
இறை வழிபாடு  :  சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடுங்கள்.
வளம் தரும் நாட்கள்:–  ஜூலை: 17,18,24,25,28,29 ஆகஸ்டு: 8,9,10,14,15
மகிழ்ச்சி தரும் வண்ணம்:–
 ஆரஞ்சு
பெண்களுக்கு…
மாத தொடக்கத்தில் நினைத்த காரியத்தை நினைத்தபடி செயல்படுத்த முடியும். அதிகம் செலவாகும் என்று நினைத்த காரியம் கூட குறைந்த செலவில் முடிவடையும். கணவன்–மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி முயற்சியும், கடல் தாண்டும் முயற்சி யும் கைகூட வழிகாட்டுவீர்கள். உடன்பிறப்புகளின் பிரியம் கூடும். தாய்வழி ஆதரவு ஓரளவே கிடைக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு மகர கேதுவின் ஆதிக்கத்தால் நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. ராகு– கேதுக்களின் பெயர்ச்சி காலத்தில் அதற்குரிய வழிபாடுகளை வைத்துக் கொள்வது நல்லது. புதன்தோறும் பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.

சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தும் கடக ராசி அன்பர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே தனாதிபதி சூரியன் சகாய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், யோகாதிபதியான செவ்வாய் ஆகிய மூன்றும் ஒன்று கூடிச் சஞ்சரிக்கிறது. எனவே வரவு திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். இரவு–பகலாகப் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர்.
சூரியன், புதனோடு இணைந்திருக்கும் நேரத்தில் காரியங்களில் வெற்றி கிடைக்கும். புத–ஆதித்ய யோகம் எனப்படும் பொன்னான யோகம் உங்கள் ராசியிலேயே நடைபெறும் பொழுது அரசியல் மற்றும் பொதுநலத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஏதேனும் புதிய பொறுப்புகள் கிடைக்குமா? என்று ஏங்கியவர்களுக்கு இப்பொழுது பொறுப்புகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். வாங்கல்– கொடுக்கல்கள் ஒழுங்காகும். குறைந்த விலையில் என்றைக்கோ வாங்கிப்போட்ட சொத்து இப்பொழுது அதிக  லாபம் தரலாம். வரும் தொகையைக் கொண்டு வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல வழிவகுத்துக் கொள்வீர்கள்.
மாதத் தொடக்கத்தில் 2–ல் ராகுவும், 8–ல் கேதுவும் இருக்கிறார்கள். இதனால் ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும்.  இந்த மாதத்தில் ராகுவும், கேதுவும் மாற்றமடையப் போகின்றனர். அதன்படி ராகு உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப் போகிறார். அதனால் சிறு சஞ்சலங்கள் ஏற்படுமே தவிர, சந்தோ‌ஷம் குறையாது. அதே நேரம் 7–ம் இடத்திற்கு வரும் கேது மனக்கவலையை உருவாக்கலாம். களத்திர ஸ்தானமாக மகரம் அமைவதால், வாழ்க்கைத் துணையோடு விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ராகு–கேதுக்களின் ஆதிக்கம் ஜென்மத்திலும், 7–ம் இடத்திலும் வரும்பொழுது சர்ப்ப தோ‌ஷம் பற்றிக்கொள்கிறது. எனவே சர்ப்ப தோ‌ஷத்திலிருந்து விடுபட அற்புதப் பலன் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஜாதகத்திற்கு உகந்த நேரத்தில் பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.
சிம்ம புதனும் வக்ர புதனும்!
ஜூலை 22–ந் தேதி சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். விரயாதிபதி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் விரயத்திற்கேற்ற தனவரவு வந்து கொண்டேயிருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது.  பணத்தை வைத்துக்கொண்டு காரியங்களை நடத்தமுடியாது. காரியத்தை தொடங்கிவிட்டால் பணம் கைக்கு வந்து சேரும்.
ஜூலை 30–ந் தேதி சிம்மத்திலும், ஆகஸ்டு 6–ந் தேதி கடகத்திலும் புதன் வக்ரம் பெறுகிறார். புதன் 3,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். 12–ம் இடத்திற்கு அதிபதியானவர் வக்ரம் பெறுவது நன்மை தான் என்றாலும், 3–ம் இடத்திற்கும் புதன் அதிபதியாக அல்லவா ஆகிறார். இதனால் சகோதரர்களிடையே சர்ச்சைகள் ஏற்படும்.
ராகு–கேதுக்களின் பெயர்ச்சி!
ஜூலை 27–ந் தேதியன்று கடகத்திற்கு ராகுவும், மகரத்திற்கு கேதுவும் செல்கிறார்கள். பின்னோக்கிச் செல்லும் கிரகங்களான ராகுவும், கேதுவும் இனி ஒன்றரை ஆண்டு காலம் உங்கள் ராசியிலும், சப்தம ஸ்தானத்திலும் பிரவேசிக்கப் போகிறார்கள். சர்ப்ப தோ‌ஷப் பின்னணியில் இருந்தாலும், தசாபுத்தி சுய ஜாதகத்தில் பலம்பெற்றவர்களுக்கு ஓரளவு நற்பலன் வந்து சேரும். மற்ற அமைப்பில் உள்ளவர்கள் வழிபாட்டின் மூலமாக வளர்ச்சியைக் கூட்டிக்கொள்ளலாம். இடமாற்றம், ஊர்மாற்றம், உத்தியோகமாற்றம் மற்றும் இலாகா மாற்றங்கள் ஒருசிலருக்கு வந்து சேரும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க மூத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.
சனியின் வக்ர நிவர்த்திக் காலம்!
ஆகஸ்டு 4–ந் தேதி சனி வக்ர நிவர்த்தியாவதால் பிள்ளைகள் வழியில் உள்ள பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரலாம். அவற்றின் கல்யாண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். பூர்வீக சொத்துகளில் விவகாரங்கள் விலக, புதிய நண்பர்களின் ஆலோசனை கைகொடுக்கும். சப்தம சனி வலிமையடைவதால் வெளிநாட்டு முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.
இறை வழிபாடு  :  வெள்ளி தோறும் அம்பிகையை  வழிபடுங்கள்.
வளம் தரும் நாட்கள்:–  ஜூலை: 19,20,26,27,31 ஆகஸ்டு: 1,11,12,16
மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  மஞ்சள்
பெண்களுக்கு…
மாத தொடக்கத்தில் நன்மைகள் பலவும் நடைபெறும். ராகு–கேது பெயர்ச்சி வரை வருமானப் பெருக்கமும், வசதி வாய்ப்புகளும் அதிகரிக்கும். அதன்பிறகு கொஞ்சம் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. ஜென்ம ராகுவும், 7–ல் கேதுவும் வரப்போவதால் குடும்பப் பெரிய வர்களை ஆலோசித்து எந்தக் காரியத்தையும் செய்யுங்கள். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குரு பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் உங்கள் குணமறிந்து வாழ்க்கைத் துணை நடந்து கொள்வர். உங்கள் பெயரிலேயே வீடு அல்லது இடம் வாங்கும் யோகம் உண்டு. தாய்வழி ஆதரவு ஏற்படும். உத்தியோக முயற்சியில் அனு கூலம் கிடைக்கும். ராகு–கேதுக்களின் வழிபாடு நன்மையை வழங்கும்.

சோதனையிலும் சாதனை நிகழ்த்திக் காட்டும் சிம்ம ராசி அன்பர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு யோகாதிபதி செவ்வாயும், தன லாபாதி பதி புதனும் இருக்கின்றனர். எனவே விரயங்கள் கூடுதலாக இருக்கும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்ற நீங்கள் இந்த மாதத்தை இனிய மாதமாக மாற்றிக் கொள்வீர்கள்.
சொந்தக் கருத்துகளை செயல்படுத்திய நீங்கள், இந்த மாதத்தில் அடுத்த வர்களின் ஆலோசனைகளையும் கேட்டு நடக்க நேரிடலாம். ‘சேமிப்பு கரைகிறதே’ என்று கவலைப்படுவீர்கள். ஜென்மத்தில் ராகு இருப்பதால் மன அமைதி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். மாற்றங்கள் வருவதை ஏற்றுக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள்.
குடும்பச் சுமை கூடும். கொடுக்கல்–வாங்கல்களில் மந்த நிலை உருவாகும். அர்த்தாஷ்டமச் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்திணைவர். கடந்த 2½ வருடங்களாக 4–ல் சனி சஞ்சரிக்கும் காலத்தில், நண்பர்களில் ஒருசிலர் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ளமாட்டார்கள்.
அப்படிப்பட்டவர்கள் இப்பொழுது வக்ரச் சனியின் ஆதிக்கத்தாலும், ராகு–கேதுக்களின் பெயர்ச்சியின் காரணமாகவும் மனமாற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சியை வரவழைத்துக் கொடுக்கப் போகிறார்கள். இம்மாதம் ராகு–கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் மாற்றம் பெறும் பொழுது, ஏற்றங்களும் இனிய பலன்களும் வந்து சேரும். பயண ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கப்போகிறார். இதுவரை கேட்டும் கிடைக்காத இடமாற்றம், இனி கேட்காமலேயே கிடைக்கலாம். 6–ல் வரும் கேது மறைமுக எதிர்ப்புகளை கொடுத்தாலும் முடிவில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் அப்போதைக்கப்போது அச்சுறுத்தல் உருவாகும். இந்தப் பாம்புக் கிரகங்களின் ஆதிக்கம் குறைய, பெயர்ச்சியான பிறகு ஒரு மாதத்திற்குள் முறையாக சர்ப்ப சாந்திகளைச் செய்து கொள்வது நல்லது.
சிம்ம புதனும், வக்ர புதனும்!
ஜூலை 22–ந் தேதி சிம்மத்திற்கு புதன் செல்கிறார். தன லாபாதிபதியாக விளங்கும் புதன், ராசியிலேயே சஞ்சரிக்கும் பொழுது தனவிருத்தி அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். வாகன யோகம் உண்டு. சான்றோர்களின் சந்திப்பால் தகுந்த பலன் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஜூலை 30–ந் தேதி சிம்மத்திலும், ஆகஸ்டு 6–ந் தேதி கடகத்திலும் புதன் வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கலக்கங்கள் மேலோங்கும். கட்டிடப் பணிகள் பாதியிலேயே நிற்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் விருப்ப ஓய்வில் வெளி வரலாமா? என்று சிந்திப்பர்.
ராகு–கேது மாற்றங்கள்!
ஜூலை 27–ந் தேதி கடகத்திற்கு ராகுவும், மகரத்திற்கு கேதுவும் செல்கிறார்கள். இந்த சர்ப்ப கிரகத்தின் மாற்றங்கள் நன்மையையே உங்களுக்கு வழங்கும். இதுவரை ஜென்மத்தில் சஞ்சரித்து வந்த ராகு சிரமங்களையும், சிக்கல்களையும் உருவாக்கி இருக்கலாம். ஆரோக்கியத் தொல்லையும் வந்திருக்கலாம். அவற்றில் இருந்தெல்லாம் விடுபடும் சூழ்நிலை இப்  பொழுது உருவாகும்.
ஜீவன ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கப்போவதால் எதிர்பார்ப்புகளைச் சமாளிக்கும் சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கடன்சுமை குறைய, சொத்துகளை விற்க நேரிடலாம். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சனியின் வக்ர நிவர்த்திக் காலம்!
அர்த்தாஷ்டமச் சனி வக்ர நிவர்த்தியாகும் பொழுது, பலம் கூடுகிறது. எனவே ஆகஸ்டு 4–ந் தேதிக்கு மேல் எதிலும் கூடுதல் கவனம் தேவை. திடீர் பிரச்சினைகள் உருவாகலாம். குடும்பச் சுமை கூடும். உறவினர்களாலும் பிரச்சினைகள் ஏற்படலாம்.
இறை வழிபாடு  :  சனிக்கிழமை தோறும் சனி பகவான் வழிபாடு
வளம் தரும் நாட்கள்:–  ஜூலை: 17,18,22,23,29,30 ஆகஸ்டு: 1,2,3,13,14
மகிழ்ச்சி தரும் வண்ணம்:– ரோஸ்.
பெண்களுக்கு…
ஜென்ம ராகு மாறும் வரை விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். வீட்டில் உள்ளவர்களால் பிரச்சினைகள் தலை தூக்கலாம். இருப்பினும் சமாதானமாகச் செல்லுங்கள். கணவன்– மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உடன் இருப்பவர்களால் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் வந்துசேரும்.
 பெற்றோர் வழியில் பிரச்சினைகள் உருவாகாமல் இருக்க அனுசரித்துச் செல்வதே நல்லது. சுபவிரயங்கள் அதிகரிக்கும். ராகு–கேதுக்களுக்குரிய சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நலம் யாவும் வந்து சேரும்.

ஆலோசனைகளை அள்ளி வழங்கும் கன்னி ராசிஅன்பர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் குரு பகவான் வீற்றிருக்கிறார். அவரது அருட்பார்வை 5,7,9 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். பிரபலங்களின் ஒத்துழைப்போடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
ராசிநாதன் புதன் விரயாதிபதி சூரியனுடனும், சகோதர ஸ்தானாதிபதி செவ்வாயுடனும் கூடி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே விரயங்கள் கொஞ்சம் அதிகமாகும். இருப்பினும் விரயத்திற்கேற்ற வரவும் வந்து
சேரும். சகோதரருக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை ஏற்படலாம்.
அதே நேரத்தில் ராகு– கேதுக்களின் பெயர்ச்சியும் இந்த மாதத்தில் நிகழவிருக்கிறது. ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே பாம்பு கிரகங்களின் பெயர்ச்சிக்குப் பின்னர், பண மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. மனம் மகிழும் விதத்தில் இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் கேது, பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்கி வைக்கலாம். ஒரு சிலருக்கு கடல் தாண்டிச் செல்லும் வாய்ப்பு உருவாகும். ராகு– கேதுக்கள் மேலும் நன்மை தர, மிகுந்த பொருளாதார யோகம் வர, பெயர்ச்சிக்குப் பிறகு அனுகூல நாள் பார்த்து சர்ப்பசாந்திப் பரிகாரம் செய்வது நல்லது.
இம்மாதம் சுக்ர பலம் உங்களுக்கு நன்றாக இருக்கிறது. 2,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சொந்த வீட்டில் இருக்கும் பொழுது ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆடி வெள்ளி தோறும் விரதம்இருந்து அம்பிகையை நாடிச் சென்றுவழிபட்டு வந்தால், தேடிவரும்       வாய்ப்புகள் அதிகரிக்கும்.
சிம்ம புதனும், வக்ர புதனும்!
உங்கள் ராசிநாதன் புதன் ஜூலை 22–ந் தேதி சிம்மத்தில் சஞ்சரிக்கப் போகிறார். சிம்ம ராசி உங்களுக்கு விரயங்களைத் தரும் ஸ்தானமாகும். அந்த இடத்திற்கு புதன் வரும்பொழுது, விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச் சுமை கூடும். தொழில்  ஸ்தானாதிபதியாகவும் புதன் விளங்குவதால் தொழில் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். வைத்திருக்கும் தொழிலைக் கொடுத்துவிட்டு வெளியூர், வெளிநாடு செல்லலாமா? என்று யோசிப்பீர்கள்.
ஜூலை 30–ந் தேதி சிம்மத்திலும், ஆகஸ்டு 6–ந் தேதி கடகத்திலும் புதன் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ரம் அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் அதிகரிக்கும். ஒரு காரியத்தை ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
ராகு–கேது பெயர்ச்சிக் காலம்!
ஜூலை 27–ந் தேதி கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கப்போகிறார்கள். லாப ஸ்தானத்தில் ராகுவும், புத்ர ஸ்தானத்தில் கேதுவும் வருவதால் லாபம் திருப்திகரமாக இருக்கும். தொழில் வளர்ச்சி கூடும். மாற்றினத்தவர்களின் ஆதரவால் மகத்தான காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். அவர்களின் பட்ட மேற்படிப்பை வெளிநாடு சென்று படிக்க விரும்பினால், அதற்கான ஆயத்தம் செய்ய முன்வருவீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பெண் குழந்தைகளின் சுபச்சடங்குகள் நடைபெறும் நேரம் இது.
சனியின் வக்ர நிவர்த்திக் காலம்!
ஆகஸ்டு 4–ந் தேதி சனி வக்ர நிவர்த்தியாகிறார். இதன் விளைவாக பங்காளிப் பகை மாறும். பகல் இரவாக பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிட்டும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். புதிய வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு அது கிடைக்கும். வருமானத்திற்கு வழிவகுக்க நண்பர்கள் முன்வருவர். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும்.
இறை வழிபாடு  :  வியாழன் தோறும் குரு வழிபாடு செய்யுங்கள்
வளம் தரும் நாட்கள்:– ஜூலை: 19,20,24,25,31, ஆகஸ்டு: 1,5,15,16
மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  கிளிப்பச்சை
பெண்களுக்கு…
ஜென்ம குருவின் ஆதிக்கத்தால் ஒரு சிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றம் அமையலாம். ஒரு சிலர் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, வாடகை வீட்டில் குடியிருக்க நேரலாம். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. பெண் குழந்தைகளின் வழியே சுபகாரியப் பேச்சுகள் நடைபெறலாம். தாயின் உடல்நலம் சீராகும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். செவ்வாய் தோறும் துர்க்கையை வழிபடுவது நல்லது. ஆடி வெள்ளியில் அம்பிகையை வழிபட்டுவந்தால் நாடி வந்த துயரங்கள் விலகும்.

பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லும் துலாம் ராசி அன்பர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை அவர் மீது பதிகிறது. எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அருளாளர்களின் ஆலோசனை அப்போதைக்கப்போது கைகொடுக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர் களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும்.
உங்கள் ராசிக்கு 2–ம் இடத்தில் சனிபகவான் வக்ர இயக்கத்தில் இருக் கிறார். குடும்பச் சனியாக தற்சமயம் நடைபெறுவதால் குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டுமென்று நினைத்தவர்களுக்கு அது கைகூடும். ஏழரைச் சனி முழுமையாக விலகும் வரை பெரிய முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
6–க்கு அதிபதியான குரு பகவான் 12–ம் இடத்தில் சஞ்சரிப்பதால் விபரீத ராஜயோகம் செயல்படுகிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, சில காரியங்களை செய்ய இயலவில்லையே என்று நீங்கள் நினைத்திருக்கலாம். அந்த வகையான காரியங்கள் இப்பொழுது நண்பர்களின் ஒத்துழைப்போடும், திறமை மிக்கவர்களின் பழக்கத்தினாலும் நிறைவேறி ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
இந்த மாதம் ராகு–கேதுக்களின் பெயர்ச்சி யும் நிகழவிருக்கிறது. இதுவரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு இப்பொழுது தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 5–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது, இப்பொழுது சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்படாமல் இருக்கவும், தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவும் ராகு–கேது பெயர்ச்சிக்குப் பிறகு அனுகூலமான நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரம் செய்வது நல்லது.
உங்கள் ராசிநாதன் சுக்ரன் வெள்ளிக்கிழமைக்கு அதிபதியானவர். எனவே வெள்ளிக் கிழமை தோறும் விரதமிருந்து அம்பிகையை வழிபடுவதோடு, ஆடிப்பூரம் அன்று அம்பிகையின் திருக் கல்யாணக் காட்சியை காண்பது நல்லது.
சிம்ம புதனும், வக்ர புதனும்!
உங்கள் ராசிக்கு 9–ம் இடம் மற்றும் 12–ம் இடம் ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். விரயாதிபதியாக விளங்கும் புதன் இப்பொழுது ஜூலை 22–ந் தேதி லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இதன் விளைவாக ஒரு சிலர் திடீர் விரயங்களை சந்திக்க நேரிடும். வீண் விரயங்கள் ஆகாமல் இருக்க வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வது நல்லது. குறிப்பாக பிள்ளைகளின் கல்யாண சீர்வரிசை பொருட்களை வாங்கி மகிழலாம்.
ஜூலை 30–ந் தேதி சிம்மத்திலும், ஆகஸ்டு 6–ந் தேதி கடகத்திலும் புதன் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர இயக்கம் உங்களுக்கு நன்மையையே வழங்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
ராகு–கேதுக்களின் பெயர்ச்சி காலம்!
ஜூலை 27–ந் தேதி கடகத்திற்கு ராகுவும், மகரத்திற்கு கேதுவும் செல்கிறார். இந்த ராகு மாற்றம் உங்களுக்கு ஓரளவு நன்மையையே கொடுக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் இல்லத்தில் நல்ல காரியம் நடைபெற வழிவகுத்துக் கொடுப்பர். கேது சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போவதால் ஆரோக்கியத் தொல்லை  ஏற்படும். மாற்று மருத்துவத்தை மேற்கொண்டு உடல்நலத்தை சீராக்கிக் கொள்வது நல்லது. அதே நேரத்தில் ராகு தொழில் ஸ்தானத்திற்கு செல்வது யோகம்தான். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்புவிழா நடத்திப் பார்ப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
சனியின் வக்ர இயக்க காலம்!
ஆகஸ்டு 4–ந் தேதி சனி வக்ர நிவர்த்தியாகிறார். எனவே குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நிறைய நடை            பெறும். மங்கள ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.             சொத்துகளால் ஆதாயம் உண்டு. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.
இறை வழிபாடு  :  அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்
வளம் தரும் நாட்கள்:– ஜூலை: 22,23,26,27, ஆகஸ்டு: 1,2,3,7,8
மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  ஆனந்தாநீலம்
பெண்களுக்கு…
குடும்பச்சுமை கூடும் மாதம் இது. கொடுக்கல் – வாங்கல்கள் ஒழுங்காகும். கணவன்–மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்க குடும்ப உறுப்பினர்கள் சம்மதிப்பார்கள். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். உடன்பிறப்புகளால் சில சமயங்களில் பிரச்சினைகள் உருவாகலாம். கடன் சுமை குறையும். தாய்வழி ஆதரவு தக்க விதத்தில் கிடைக்கும். ராகு–கேது பெயர்ச்சிக்கு பின் உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரும். வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வதோடு, நாக சாந்திப் பரிகாரங்              களைச் செய்து கொள்வது நல்லது.

பிரச்சினைகளை எளிய முறையில் தீர்க்க உதவும் விருச்சிக ராசி அன்பர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 9–ம் இடத்தில் சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். சூரியன் உங்கள் ராசி அடிப்படையில் தொழில் ஸ்தானாதிபதியாக விளங்குபவர். புதன் அஷ்டமாதிபதியாக விளங்கினாலும், லாபாதிபதியாக திகழ்பவர். எனவே தொழில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். உங்களின் முன்னேற்றம் மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும்.
கடந்த சில மாதங்களாக மனக்குழப்பத்துடன் வாழ்ந்த உங்களுக்கு, இப்பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏழரைச் சனி, வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். உற்சாகத்துடன் பணிபுரிந்து உன்னத நிலையை அடைவீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு. அரசுவழி சலுகை உண்டு.
புத–ஆதித்ய யோகம் இருப்பதால் புகழும், பாராட்டும் கிடைக்கும். நல்ல காரியமொன்றைச் செய்துமுடிப்பீர்கள். கல்வி முயற்சியில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையில் ஈடுபட்டு வெற்றி பெற நினைப்பவர்களுக்கு, பிரபலஸ்தர்களின் சந்திப்பு கிடைக்கும். அதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
இம்மாதம் ராகு–கேதுக்களின் பெயர்ச்சி நிகழவிருக்கிறது. இந்த பாம்புக் கிரகங்களின் பெயர்ச்சிதான் உங்கள் வாழ்க்கையில் மிகந்த முன்னேற்றத்தைக் கொடுக்கும். இதுவரை 10–ல் சஞ்சரித்து வந்த ராகு, இனி 9–ல் சஞ்சரிக்கப் போகிறார். 9–ல் சஞ்சரிக்கும் ராகுவால் ஒளிமயமான எதிர்காலம் உருவாகப் போகிறது. பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வந்து சேரும்.
ஞானகாரகன் கேது இப்பொழுது 3–ம் இடத்திற்கு வரப்போகிறார். வழக்குகள் சாதகமாகும். வசதிகள் பெருகும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கைகூடும். ராகு–கேதுக்களால் தொழில் வளம் கூடவும், பொருள் வளம் பெருகவும், குடும்ப முன்னேற்றம் அதிகரிக்கவும் நாகசாந்திப் பரிகாரங்களை யோகம் தரும் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்வது நல்லது. வெள்ளிக் கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
சிம்ம புதனும், வக்ர புதனும்!
ஜூலை 22–ந் தேதி சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். லாபாதிபதி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் சிறப்பாக நடைபெறும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவியும், ஊதிய உயர்வும் கிடைக்கும். ஜூலை 30–ந் தேதி சிம்மத்திலும், ஆகஸ்டு 6–ந் தேதி கடகத்திலும் புதன் வக்ரம் பெறுகிறார். அஷ்டமாதிபதியாகவும் புதன் விளங்குவதால், இந்த வக்ர காலத்திலும் உங்களுக்கு ஒருசில நன்மைகள் நடைபெறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார நிலையை பெருக்கிக் கொடுப்பர்.
ராகு–கேது பெயர்ச்சிக் காலம்!
ஜூலை 27–ந் தேதி கடகத்திற்கு ராகுவும், மகரத்திற்கு கேதுவும் வருகிறார்கள். இந்த மாற்றம் ஒரு நல்ல மாற்றம்தான். 9–ம் இடத்திற்கு ராகு சஞ்சரிக்கும் பொழுது, பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்; புகழ் கூடும். பண்புள்ள மனிதர்களின் பழக்கத்தால் பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பூமி வாங்கும் யோகமும் உண்டு. கேது பலத்தால் சகோதர சச்சரவுகள் அகலும். வழக்குகள் சாதகமாகும். கொடுக்கல்–வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். அருளாளர்களின் ஆலோசனைகளோடு தொடங்கிய காரியம் வெற்றிகரமாக முடியும்.
சனியின் வக்ர நிவர்த்திக் காலம்!
உங்கள் ராசியை பொறுத்தவரை சனி பகவான், சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர். அவர் இதுவரை வக்ர இயக்கத்தில் இருந்தார்.  ஆகஸ்டு 4–ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். எனவே, ஆரோக்கியத் தொல்லை அகலும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகஸ்தர்களில் ஒரு சிலருக்கு, உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் வந்து சேரும்.
இறை வழிபாடு  :  சனிக்கிழமை தோறும் ஆனைமுகனையும், அனுமனையும் வழிபடுங்கள்.
வளம் தரும் நாட்கள்:–  ஜூலை: 19,20,24,25,28,29 ஆகஸ்டு:– 4,5,6,9,10,15
மகிழ்ச்சி தரும் வண்ணம்:– கிரே.
பெண்களுக்கு…
மகிழ்ச்சி அதிகரிக்கும் மாதம் இது. மங்கள நிகழ்ச்சி அதிகம் நடைபெறும். கணவன்–மனைவி ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்க குடும்ப உறுப்பினர்கள் சம்மதிப்பர். பிள்ளைகளால் பெருமை சேரும். குரு புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் பிள்ளைகளின் விவாகம் பற்றியோ, வேலைவாய்ப்பு கருதியோ ஏதேனும் முயற்சி செய்திருந்தால் அதில் அனுகூலம் கிடைக்கும். சகோதரர்கள் உங்களிடம் சகாயமாக நடந்து கொள்வர். ஆரோக்கியத் தொல்லை அகலும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். தனவரவு திருப்தி தர, ராகு–கேதுக்களுக்கு முறையாக பிரீதி செய்வது நல்லது. மேலும் வெள்ளி தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் நல்ல வாய்ப்புகள் உங்களை நாடிவரும்.

கொள்கைப் பிடிப்போடு பணியாற்றும் தனுசு ராசி அன்பர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குருபகவான் 10–ல் சஞ்சரிக்கிறார். அதன் பார்வை உங்கள் ராசிக்கு 2,4,6 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே திரண்ட செல்வம் தேடிவரும். திருமண வாய்ப்புகள் கைகூடிவரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாசம் மிக்கவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
ஏழரைச் சனியில் தற்சமயம் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஏழரைச் சனி நடப்பவர்களுக்கும், 3–ம் சுற்று ஏழரைச் சனி நடப்பவர்களுக்கும் முன்னேற்றத்தில் சில முட்டுக்கட்டைகள் ஏற்பட்டாலும், அதற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் தடைகள் ஓரளவு அகலும். மன நிம்மதி கிடைக்கும். 2–வது சுற்றாக சனி நடப்பவர்கள் பொங்குசனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு தங்கு தடைகள் தானாக விலகும். தைரியமும், தன்னம்பிக்கையும் தானாக வந்து சேரும்.
ராகு–கேதுக்களின் பெயர்ச்சியும் இந்த மாதத்தில் நிகழவிருக் கிறது. இதுவரை 9–ல் சஞ்சரித்து வந்த ராகு 8–ம் இடத்திற்கு செல்லவிருக்கின்றார். அஷ்டமத்து ராகு அலைச்சலை அதிகப்படுத்தலாம். நீண்ட தூரத்திற்கான இடமாற்றங்களைக் கொடுக்கலாம். 3–ம் இடத்து கேது 2–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் பலத்தால் ஒருசில சமயங்களில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். எனவே நாணயப் பாதிப்பில் இருந்து விடுபடவும், நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலவும், நாகசாந்திப் பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது. மேலும் ஞானகாரகன் கேதுவிற்குரிய வழிபாடாக திசைமாறிய தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
10–ம் இடத்து குருவும் உத்தியோகத்தில் பிரச்சினைகளை உருவாக்கலாம். உயர் அதிகாரிகளின் மனக்கசப்புக்கு ஆளாக நேரிடும். பதவி மாற்றங்களும், பொதுநலத்தில் இருப்பவர்                 களுக்கு எதிர்பாராத விதத்தில் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். மனதிற்கு ஏற்ற விதத்தில் இவை அனைத்தும் வந்து சேர வியாழக் கிழமை தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. அதுமட்டுமல்ல ஆடி வெள்ளியில் தேடிவரும் நற்பலன்களை பெற, அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
சிம்ம புதனும், வக்ர புதனும்!
ஜூலை 22–ந் தேதி சிம்மத்திற்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7,10–க்கு அதிபதியானவர் புதன். அவர் சிம்மத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். வாரிசு களால் வந்த பிரச்சினைகள் அகலும். நெருங்கிய உறவினர்களின் பகை மாறும். நிலபுலன்கள் சம்பந்தமாக இருந்த பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். ஜூலை 30–ந் தேதி சிம்மத்திலும், ஆகஸ்டு 6–ந் தேதி கடகத்திலும் புதன் வக்ரம் பெறுகிறார். சப்தமாதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும்.
ராகு–கேது பெயர்ச்சிக் காலம்!
ஜூலை 27–ந் தேதி கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். அஷ்டமத்தில் ராகு சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. அலைச்சல் கூடுதலாக இருக்கும். அதிகப் பிரயாசை எடுத்தே ஒரு சில காரியங்களை செய்ய வேண்டியதிருக் கும். நீண்டதூரப் பயணங்களால் ஒருசிலருக்கு நிம்மதி குறையலாம். வாக்கு, தனம், குடும்பம் என்று சொல்லப்படும் 2–ம் இடத்தில் கேது சஞ்சரிக்கப் போவதால் யாருக்கும் வாக்குகொடுக்கும் முன் ஒரு கணம் யோசிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி கிடைக்கும். ஒருதொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கைகளில் புரளும்.
சனியின் வக்ர நிவர்த்திக் காலம்!
ஆகஸ்டு 4–ந் தேதி சனி வக்ர நிவர்த்தியாகிறார். எனவே எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறும். பிரிந்தவர்கள் வந்திணைவர். கட்டிடப் பணி தொடரும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள் நன்மை தருவதாக அமையும். தொழில் முன்னேற்றம் கூடுதலாக இருக்கும்.
இறை வழிபாடு  :  சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுங்கள்.
வளம் தரும் நாட்கள்:–  ஜூலை: 26,27,28,30 ஆகஸ்டு: 1,7,8,11,12,13
மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  ரோஸ்
பெண்களுக்கு…
இம்மாத தொடக்கத்தில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் விரும்பும் விதத்தில் அமையும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களின் தொல்லைக்கு ஆளாக நேரிடும்.  ராகு–கேது பெயர்ச்சிக்குப் பின்னால் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சர்ப்ப சாந்திப் பரிகாரமும், வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகை வழிபாடும் சகல யோகத்தையும் கொடுக்கும்.

உழைப்பால் உயர விரும்பும் மகர ராசி அன்பர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில்  உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் குரு பகவானின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே காரியங்களில் தடை இருந்தாலும், கடைசி நேரத்தில் கைகூடி விடும். 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் 5–ம் இடத்தில் வலுப்பெற்றிருப்பது யோகம்தான். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆயினும் சுக்ரனின் மீது சனியின் பார்வை பதிவதால் பங்குதாரர்களால் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம்.
சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒருசேர உங்கள் ராசியைப் பார்க்கிறார்கள். சூரிய பார்வை பதிவதால் அரசு வழிச் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும். சுக லாபாதி பதியான செவ்வாய் நீச்சம் பெற்றிருக்கிறார். அவரோடு 6–க்கு அதிபதியான புதன் இருப்பதால் உடன்பிறப்புகள் வழியே சில பிரச்சினைகள் உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு குறையலாம்.
இம்மாதம் ராகு–கேதுக்களின் பெயர்ச்சி நடைபெறப் போகிறது. ஜென்ம கேதுவும், 7–ல் ராகுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். எனவே முழுமையான சர்ப்ப தோ‌ஷத்தின் பின்னணியில் நிற்கிறீர்கள். இதுபோன்ற காலங்களில் வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். எனவே எதைச் செய்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. அருளாளர் களின் ஆலோசனை கைகொடுக்கும்.
மிதமிஞ்சிய பொருளாதாரத்தில் மிதக்க வேண்டுமானால், சர்ப்ப சாந்திப் பரிகாரங்  களைச் செய்து கொள்வது நல்லது. இணக்கமாக நடந்தவர்கள் எதிரியாக மாறலாம். எனவே ராகு–கேது பெயர்ச்சி உருவான ஓரிரு மாதங்  களில் யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. மேலும் வெள்ளிக்கிழமையில் அம்பிகையை வழிபட்டு வாருங்கள்.
சிம்ம புதனும், வக்ர புதனும்!
உங்கள் ராசிக்கு 7–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த புதன், ஜூலை 22–ந் தேதி அஷ்டம ஸ்தானத்திற்கு அடியெடுத்து வைக்கப்போகிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். மக்கள் செல்வங்களால் மேன்மை உண்டு. இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கலாம். கல்விக் காக எடுத்த முயற்சி கைகூடும். ஜூலை 30–ந் தேதி சிம்மத்திலும், ஆகஸ்டு 6–ந் தேதி கடகத்திலும் புதன் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 6,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன் 6–க்கு அதிபதி வக்ரம் பெறுவது யோகம்தான். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தொழிலில் திடீர் முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் உங்களுக்கு கூடுதல் லாபம் கொண்டு வந்து சேர்ப்பர். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கு கிடைக்கும்.
ராகு–கேது பெயர்ச்சிக் காலம்!
ஜூலை 27–ந் தேதி கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கே கேது வருவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குலதெய்வ கோவில்களில் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனக்குழப்பம் அதிகரிக்கும். சப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்வதுடன் கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்தினால், நல்ல பலன்களைப் பெறலாம்.
சனியின் வக்ர நிவர்த்திக் காலம்!
ஆகஸ்டு 4–ந் தேதி சனி வக்ர நிவர்த்தியாகிறார். அதன்பிறகு உங்களுக்கு இருந்த ஆரோக்கியத் தொல்லை அகலும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வளர்ச்சி கூடும். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். மங்கள ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.
இறை வழிபாடு  :  வெள்ளிக் கிழமை தோறும் அம்பிகையை வழிபடுங்கள்.
வளம் தரும் நாட்கள்:–  ஜூலை: 17,18,28,29 ஆகஸ்டு: 1,2,3,9,10,13,14
மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  நீலம்.
பெண்களுக்கு…
இம்மாதம் முதல் வாரத்தில் முன்னேற்றங்கள் கூடுதலாக இருக்கும். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். துணிந்து நீங்கள் செய்த செயல்களைக் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். மாதத்தில் 2–வது வாரத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும். 3–ம் வாரத்திற்கு மேல் முன்னேற்றத்தில் தடைகள் உருவாகலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. கணவன்–  மனைவிக்குள் மனக்கசப்புகள் ஏற்படும். குழந்தைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். நோய்நொடி அகல, ராகு–கேது பெயர்ச்சிக்குப் பின்னால் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை சுயஜாதக அடிப்படையில் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமையில் அம்பிகையை வழிபட்டால் அனைத்து நலன்களும் வந்து சேரும்.

மனசாட்சிக்கு விரோதமாக நடக்காத கும்ப ராசி அன்பர்களே!
உங்களின் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ஜென்மத்தில் கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். கடந்த ஒன்றரை வருட காலமாக சர்ப்ப தோ‌ஷத்தின் பின்னணியில் சிக்கியிருக்கிறீர்கள். எனவே பல காரியங்களில் தடைகள் ஏற்பட்டிருக்கலாம். இனம்புரியாத கவலை இதயத்தைச் சூழ்ந்திருக்கலாம். எதைத் தொட்டாலும் தாமதம் ஏற்படுகின்றதே என்று நினைத்திருக்கலாம்.
இதற்கெல்லாம் விடிவு காலம் வரப்போகிறது. இம்மாதம் ராகு–கேதுக் களின் பெயர்ச்சி நிகழவிருக்கிறது. ஜென்மத்திலுள்ள கேது பின்னோக்கிச் செல்லப் போகிறார். மகரத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் மனக்கலக்கம் அகலும். மதிப்பும், மரியாதையும் உயரும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு 6–ம் இடத்திற்கு வரப்போகிறார். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் காணப் போகிறீர்கள். உத்தியோகத்திற்காக முயற்சி செய்தவர் களுக்கு அது கைகூடிவரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள், குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதியும் நேரத்தில், அதற்கான முயற்சியில் ஈடுபடலாம். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம்பெற்றிருந்தால் தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
தற்சமயம் உங்கள் ராசியில் இருந்து சர்ப்ப கிரகங்கள் விலகுவதால், யோகபலம் பெற்ற நாளில், அனுகூலம் தரும் ஸ்தலங் களில் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. அப்பொழுதுதான் பாம்பு கிரகங்களின் ஆதிக்கத்தால் வரும் பலன்கள், நற்பலன்களாக அமையும். ராகு–கேது பெயர்ச்சிக்குப் பிறகு 3 மாத காலத்திற்குள் நல்ல நாள் பார்த்து சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்ள வேண்டும். வார வழிபாடாக துர்க்கையையும், வெள்ளிக்கிழமை அம்பிகையையும் வணங்குங்கள்.
சிம்ம புதனும், வக்ர புதனும்!
ஜூலை 22–ந் தேதி சிம்மத்திற்கு புதன் செல்கிறார். பஞ்சம அஷ்டமாதிபதியான புதன் சப்தம ஸ்தானத்திற்கு வருவது யோகம் தான். பயணங்களால் பலன் கிடைக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் உருவாகும். நிலையான வருமானத்திற்கு வழிஅமைத்துக் கொள்வீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.
ஜூலை 30–ந் தேதி சிம்மத்திலும், ஆகஸ்டு 6–ந் தேதி கடகத்திலும் புதன் வக்ரம் பெறப்போகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு நற்பலன் வழங்கும் காலமாகும். பஞ்சம அஷ்டமாதிபதியாக விளங்கும் புதன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது பிள்ளைகள் வழியில் விரயம் ஏற்படலாம். அதைச் சுபவிரயமாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.
ராகு–கேதுக்களின் பெயர்ச்சி காலம்!
ஜென்ம கேதுவும், சப்தம ராகுவும் விலகும் மாதமிது. அந்த நிகழ்வு ஜூலை 27–ந் தேதி நிகழவிருக்கிறது. கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இதுவரை இருந்த தடைகள் இனி அகலும். கடைதிறப்பு விழாக்களும், கட்டிடத் திறப்பு விழாக்களும் காணப் போகிறீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். புதிய உத்தியோக முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்கோபத்தின் காரணமாக முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக் கட்டைகள் இனி அகலும். ராகு–கேது பலத்தால் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
சனியின் வக்ர நிவர்த்தி காலம்!
ஆகஸ்டு 4–ந் தேதி சனி வக்ர நிவர்த்தியாகின்றார். ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகும் பொழுது, ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். ஊர்மாற்றச் சிந்தனை அகலும்.  தொழிலில் வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். வெளிநாட்டு யோகம் ஒருசிலருக்கு ஏற்படும்.
இறை வழிபாடு  :  செவ்வாய் தோறும் முருகப்பெருமானை  வழிபடுங்கள்.
வளம் தரும் நாட்கள்:– ஜூலை: 19,20,30,31 ஆகஸ்டு: 4,5,6,12,13,14
மகிழ்ச்சி தரும் வண்ணம்:– கருநீலம்
பெண்களுக்கு…
இம்மாதம் நன்மைகள் நடைபெறும் மாதமாகும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக் கொடுப்பர். கணவன் – மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். பிணக்குகள் அகன்று இணக்கம் கூடும். தாய்வழி ஆதரவு உண்டு. கூடப்பிறந்தவர்கள் உங்களோடு இணைந்து செயல்பட முன்வருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். பணி உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும். ராகு–கேது பெயர்ச்சி காலத்தில் சர்ப்ப சாந்தி செய்வதோடு வெள்ளிக் கிழமை தோறும் வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வருவது  நல்லது.

எளிமையை விரும்பும்  மீன ராசி அன்பர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சப்தம ஸ்தானத்தில் இருந்தபடியே உங்கள் ராசியைப் பார்க்கிறார். அதுமட்டுமல்ல 3,11 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். எனவே பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தொழிலில் லாபம் கிடைக்கும். எதிரிகள் விலகுவர். இல்லத்தில் அமைதி நிலவும்.
உங்கள் ராசிநாதனாகவும் குரு விளங்குவதால், அவரது பார்வைக்கு பலன் அதிகம் உண்டு. எனவே கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடல் தாண்டிச் சென்று சம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வந்து சேரும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். வீடுகட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் இதுவரை ஏற்பட்ட தாமதம் இனி அகலும். சொத்தில் கிடைக்கும் தொகையை, தொழிலுக்கு மூலதனமாக்கிக் கொள்வீர்கள்.
தனாதிபதி செவ்வாய் பலம் இழந்திருந்தாலும் சூரியன், புதன் ஆகியவற்றுடன் இணைந்திருப்பதால் புத– ஆதித்ய யோகம் ஏற்படுகிறது. எனவே பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடலாம். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிக்கு கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு அது கைகூடும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
இம்மாதத்தில் ராகு–கேது பெயர்ச்சி நிகழ விருக்கிறது. உங்கள் ராசிக்கு 6–ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு 5–ம் இடத்திற்கும், 12–ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது 11–ம் இடத்திற்கும் பின்னோக்கிச் செல்லவிருக்கிறார்கள். இந்த சர்ப்ப கிரகங்களின் மாற்றம் உங்களுக்கு நன்மையை வழங்கும். லாப கேது உங்களுக்கு லாபத்தை வழங்கப் போகின்றது. அதே நேரத்தில் பஞ்சம ராகு, பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்களை விலகச் செய்யும். மேலும் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராகு–கேது வழிபாடுகளையும் நீங்கள் முறையாக மேற்கொண்டால் சோகங்கள் மாறும். சுகங்கள் வந்து சேரும்.
சிம்ம புதனும், வக்ர புதனும்!
ஜூலை 22–ந் தேதி சிம்மத்திற்கு புதன் செல்கிறார். மறைந்த புதன் நிறைந்த தன லாபத்தைக் கொடுக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். ஒரு சிலருக்கு உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு அனுகூலத்தோடு புது முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள்.
வெளிநாட்டிற்குச் சென்று உத்தியோகம் பார்க்கும் அமைப்பு உருவாகலாம். கண்ணியம் மிக்க நண்பர்கள் உங்கள் கடமைக்கு உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். ஜூலை 30–ந் தேதி சிம்மத்திலும், ஆகஸ்டு 6–ந் தேதி கடகத்திலும் புதன் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ரம் உங்களுக்கு வளர்ச்சி கூடும் விதத்திலேயே இருக்கிறது. குறிப்பாக கேந்திராதிபத்ய தோ‌ஷம் பெற்ற கிரகங்கள் யோகத்தைச் செய்யும். எனவே தாய்வழி ஆதரவு உண்டு. இடம், பூமி பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். திருமண முயற்சியில் அனுகூலம் கிடைக்கும்.
ராகு–கேது பெயர்ச்சி!
ஜூலை 27–ந் தேதி கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். பஞ்சம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வாரிசுகளின் வளர்ச்சிக்காக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். மகர கேதுவின் ஆதிக்கத்தால் இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் இருக்கும்.  பணியாளர்களிடம் ஏற்பட்ட தொல்லை அகலும். பங்குதாரர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
சனியின் வக்ர நிவர்த்திக் காலம்!
ஆகஸ்டு 4–ந் தேதி சனி வக்ர நிவர்த்தியாகிறார். லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் இருக்கும் சனி 9–ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, வக்ர நிவர்த்தியாவதால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். சொல்லை செயல்படுத்துவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் உயரும். பயணங்கள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
இறை வழிபாடு  :  வியாழன் தோறும் குருவழிபாடு
வளம் தரும் நாட்கள்:–ஜூலை: 17,18,22,23 ஆகஸ்டு: 1,2,3,7,8
மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  கரும்பச்சை
பெண்களுக்கு…
இம்மாதம் குரு பார்வையால் குழப்பங்கள் அகலும். குதூகலம் கூடும். வழக்கமான பணிகளில் இருந்த தொய்வு அகலும். வங்கிகளில் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். உயர் பதவிகள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். ராகு–கேதுக்களுக்குரிய வழிபாடும், பிரதோ‌ஷ வழிபாடும் பெருமைகளைச் சேர்க்கும்.
  • TAGS
  • Tamil Month Rasipalan
SHARE
Facebook
Twitter
Previous articleENGLISH GK FOR GOVT EXAMS – 0092
Next articleTamil GK For Government Exams – 0098

Leave a Reply