Home Tamil Astrology Tamil Month Rasipalan Puratasi Madha Rasipalan | புரட்டாசி மாத ராசி பலன்கள் 17-9-2017 முதல் 17-10-2017 வரை

Puratasi Madha Rasipalan | புரட்டாசி மாத ராசி பலன்கள் 17-9-2017 முதல் 17-10-2017 வரை

0
15
astrology forecast | ராசிபலன்

அடுத்தவர்களுக்கு உதவுவதில் அலாதி பிரியம் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, புதிய திருப்பங்கள் பலவும் காணப்போகிறீர்கள். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் குழப்பங்கள் அகலும். மாதம் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும் விதத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறப் போகின்றது. தொடக்க நாளில் சந்திரபலம் நன்றாக உள்ளது. எனவே சுகங்களும், சந்தோஷங்களும் பெருகும். ஆரோக்கியத் தொல்லை அகலும், ஆதாயம் அதிகரிக்கும்.

எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தவிடுபொடி யாக்கும் தன்மை குருவின் பார்வைக்கு உண்டு. அதே நேரத்தில் சூரியனும், புதனும் ‘பரிவர்த்தனை யோகம்’ பெற்றிருக்கிறார்கள். யோகங்களில் சிறப்பானது பரிவர்த்தனை யோகமாகும். 3, 6-க்கு அதிபதியான புதனும், பஞ்சமாதிபதியான சூரியனும் பரிவர்த்தனை பெறுவதால் பிள்ளைகள் வழியில் உத்தியோகம், படிப்பு சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடுகள் செய்திருந்தால் அதில் அனுகூலம் கிடைக்கும்.

நேர்முகத் தேர்வு வரை சென்றும் வேலை கிடைக் காமல் வேதனைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். பணியில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு தானாக வந்து சேரும். உங்களை விட்டு விலகியிருந்த உடன்பிறப்புகள் இப்பொழுது சமரசமாகி உங்களோடு வந்திணைவர். அதோடு மட்டுமல்லாமல் உங்கள் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருப்பர்.

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இன்னும் இருக்கின்றது. அது விலகுவதற்கு சில மாதங்கள் உள்ளன. இரண்டரை ஆண்டுகளாக உங்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகளைக் கொடுத்த சனி பகவான் விலகுவதற்கு இரண்டரை மாதங்கள் முன்னதாகவே நன்மைகளைச் செய்யக் காத்திருப்பார்.

அப்படி நன்மைகள் செய்யக் காத்திருக்கும் சனி பகவானை, திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவது நல்லது. நளமகாராஜா அரண்மணை, வீடு, வாசல் அனைத்தும் இழந்ததோடு மனைவி மக்களையும் பிரிந்து வாழ்ந்தபோது இந்த ஸ்தலத்திற்கு வந்து தீர்த்தமாடி, இங்குள்ள இறைவனையும், இறைவியையும், சனி பகவானையும் வழிபட்டு இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றதாகப் புராணங்கள் சொல்கின்றன.

அந்த அடிப்படையில் உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் எதை இழந்திருந்தாலும், அதை மீண்டும் பெறும் யோகம் இந்த ஸ்தல வழிபாட்டிற்கு உண்டு. இங்கு வந்து நள தீர்த்தமாடி நல்லது செய்ய வேண்டி, சனி பகவானை வழிபாடு செய்யுங்கள். மேலும் நவராத்திரி விழாவில் 9 நாட்களும் கலந்து கொண்டு விஜயதசமியன்று பராசக்தியையும் வழிபட்டு வருவது நல்லது.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

உங்கள் ராசிக்கு 3, 6-க்கு அதிபதியான புதன் செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசியிலும், அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசியிலும் சஞ்சரிக்கப்போகின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை மறைவிடங்களான 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வலிமை இழப்பது யோகம் தான். வழக்குகள் சாதகமாகும். கடன் சுமை குறைய நீங்கள் எடுத்த புது முயற்சிகள் வெற்றி தரும். துலாம் ராசியில், புதன் சஞ்சரிக்கும் பொழுது தாய்வழி உறவு மேம்படும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திவைப்பீர்கள்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சுக்ர பகவான் அக்டோபர் 10-ந்தேதி கன்னி ராசியில் நீச்சம் பெறப்போகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. பண நெருக்கடி அதிகரிக்கும். வாங்கல்-கொடுக்கல்களில் தடுமாற்றம் ஏற்படும். கல்யாண வாய்ப்புகள் கைநழுவிச் செல்ல லாம். மங்கையர் வழியில் மனக்கலக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

கன்னி ராசியில், செவ்வாயின் சஞ்சாரம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். ‘கன்னிச்செவ்வாய் கடலும் வற்றும்’ என்பார்கள். எனவே பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும். மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். சகோதர்களிடையே பகை ஏற்படும். சொத்துகளை விற்கும் சூழ்நிலையும் அதனால் மனக்கலக்கமும் உண்டாகும்.

இம்மாதம் நவராத்திரி நாட்களில் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அஷ்டமத்துச் சனிக்கு பரிகாரமாக அனுமனையும் வழிபட்டு வருவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 17, 28, 29, அக்டோபர்: 3, 4, 9, 10, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்ச்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் பெயர்ச்சியான குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் வளர்ச்சி கூடும். வருமானம் திருப்தி கரமாக இருக்கும். தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் மேலோங்கும். குழந்தைகளின் எண்ணங்களை பூர்த்திசெய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர்பதவியைக் காண்பர். வீடு வாங்கும் யோகம் உண்டு. அகிலாண்ே-்டஸ்வரி வழிபாடு அனைத்து நலன்களையும் உங்களுக்கு வழங்கும்.

நல்ல காரியங்களுக்குப் பிள்ளையார் சுழி போடுவதில் முதன்மையாய் நிற்கும் ரிஷப ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு தனாதிபதி புதனும் விரயாதிபதி செவ்வாயும் இணைந்து சஞ்சரிக்கின்றார்கள். எனவே தனவிரயங்கள் அதிகரிக்குமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும். எதை எந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

நீண்ட நாட்களாக நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு, அது கைகூடும் விதத்தில் கிரகங்கள் சாதகமாக விளங்குகின்றன. கட்டிய வீட்டைப் பழுதுபார்க்க முடியவில்லையே என்றும், கையில் பணம் புழங்கவில்லையே என்றும் கவலைப்பட்டவர்களுக்கு, அந்த பணியைத் தொடரும் விதத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகப் போகின்றது.

இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறும் இம்மாதத்தில், சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். நோய்க்கான அறிகுறி தோன்றும் பொழுதே மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

சூரியபலம் 5-ம் இடத்தில் இருப்பதால் படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது மகிழ்ச்சியான விதத்தில் நல்ல தகவல் வந்து சேரப்போகின்றது. அரசு வேலைக்காக முயற்சி செய்திருந்தவர்களுக்கு அதுவும் கைகூடி வரலாம்.

3-ல் ராகு இருப்பதால் வழக்குகள் சாதகமாக முடியும். முன்னேற்றப் பாதையில் இருந்த இடையூறுகள் அகலும். சகோதர வர்க்கத்தினரின் சச்சரவுகள் அகலும். உங்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களும் முன்வருவர். 6-ல் குரு தற்சமயம் வந்திருக்கின்றார். ‘6-ல் குரு ஊரில் பகை’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஆனால் உங்களைப் பொறுத்த வரை அந்த மாதிரியான சூழ்நிலை ஏற்படாது. காரணம் உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியாக விளங்குபவர் குரு பகவான். 8-க்கு அதிபதி 6-ல் வரும்பொழுது விபரீத ராஜயோகம் செயல்படும்.

உங்களுக்கு குரு பகவானின் பெயர்ச்சியால் திட்ட மிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர், திடீர் என தனலாபம் வந்து கொண்டே இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் இருந்து விடுபட்டு தனித்து இயங்க முன்வருவீர்கள். குரு பகவானை முறையாக வழிபட்டால் முன்னேற்றப் பாதையை நோக்கி நீங்கள் அடியெடுத்து வைக்க இயலும். நவராத்திரி விழா நடைபெறும் இந்த மாதத்தில் 9 நாட்களிலும் அம்பிகையை வழிபடுவதோடு, விஜயதசமியன்று பராசக்தி வழிபாட்டை பரிபூரணமாகச் செய்தால் அதிக பலன் கிடைக்கும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசியிலும், அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசியிலும் புதன் சஞ்சரிக்கப் போகின்றார். வலிமை இழந்து புதன் சஞ்சரிக்கப் போவதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்யும் சூழ்நிலை உருவாகலாம். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும். பணநெருக்கடிகள் அதிகரிக்கலாம். பிள்ளை களாலும் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். நல்ல வாய்ப்புகளாக இருந்தாலும் அதை நழுவவிட்டு விடுவீர்்கள். இக்காலத்தில் சிறப்புப் பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசியில் சுக்ரன் நீச்சம் பெறுகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. எதிர்பாராத திருப்பங்கள் பலவற்றையும் ஏற்படுத்தும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பொருளாதாரத்தில் நெருக்கடி, குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு போன்றவற்றை எல்லாம் சந்திக்க நேரிடும்.

செவ்வாய் பெயர்ச்சிப் பலன்கள்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். எண்ணியது நிறைவேற ஏற்ற தருணம் இது. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கட்டிடப்பணி தொடரும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்திணைவர். திடீர்ப் பயணங்கள் தித்திக்க வைக்கும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினைகள் அகலும்.

குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும். அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அணிந்து அழகு பார்க்கும் சூழ்நிலை உண்டு. குரு வலிமை இழந்து சஞ்சரிப்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும்.

இம்மாதம் அமாவாசையன்று முன்னோர் வழிபாடும், சனிக்கிழமையன்று அனுமன் வழிபாடும் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 18, 19, 30, அக்டோபர்: 1, 2, 5, 6, 12, 13, 16, 17

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்நீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் வளர்ச்சி கூடும் மாதமாகும். அக்கறை காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும். கல்யாண வாய்ப்புகள், வீடு கட்டும் யோகம், கட்டிடத் திறப்புவிழா நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். வாகன யோகம் உண்டு. தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானை வழிபடுவதோடு நவராத்திரி நாட்களில் ஆலயம் சென்று அம்பிகையை வழிபட்டு வருவதன் மூலம் வாழ்வில் வசந்தம் உருவாகும்.

நாட்டுப்பற்று மிக்கவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு விரயாதிபதி மற்றும் பஞ்சம ஸ்தானாதிபதியான சுக்ரனும் இருக்கின்றார். 6, 11-க்கு அதிபதியான செவ்வாயும் இணைந்திருக்கின்றார். ராசிநாதனோடு லாபாதிபதியும், விரயாதிபதியும் இணைந்திருக்கும் பொழுது விரயத்திற்கேற்ற லாபம் வந்து கொண்டே இருக்கும். வீண் விரயம் ஏற்படாமல் சுபவிரயங்களாக மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

குருவின் அருட்பார்வை உங்கள் ராசியில் பதிவது மிக மிக யோகமாகும். குரு பார்க்கக் கோடி நன்மை என்பதால் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிட்டும். துயரங்கள் எல்லாம் ஓடி ஒளியப்போகின்றது. விவகாரங்கள் தீரும். தகராறுகள் தானாக விலகும். தக்க விதத்தில் நண்பர்களும், உறவினர்களும் ஒத்துழைப்புச் செய்வார்கள்.

மங்கலச் சத்தம் மட்டுமல்ல, மழலையின் ஓசையும் மனம் மகிழும் விதத்தில் இல்லத்தில் கேட்கும். கொடுத்த பணம் குறிப்பிட்டபடி வசூலாகும். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும். சரிந்திருந்த வாழ்க்கை சமநிலைக்கு வந்து விடும். புரிந்து கொண்டு செயல்பட்டு புகழைப் பெருக்கிக் கொள்வீர்கள். அதே நேரத்தில் 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரித்து சர்ப்ப தோஷத்தை வலுப்படுத்துகிறார்கள். எனவே ராகு திசை, கேது திசை, ராகு புத்தி, கேது புத்தி போன்றவை நடப்பவர்கள் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை அவசியம் செய்து கொள்வது நல்லது.

8-ல் கேது வரும்பொழுது இட மாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். அவ்வாறு வரும் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றமும், உன்னதமான வாழ்க்கையும் அமையும். கைநிறையச் சம்பாதிக்கும் யோகம் இப்பொழுது வந்து சேரப்போகின்றது. பை நிறையப் பணம் குவியும் என்றாலும் உறவினர்களையும் அனுசரித்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானுக்கு முல்லைப்பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வந்தால் பிரச்சினைகள் தீரும்.

அதுமட்டுமல்லாமல் துர்க்காஷ்டமி அன்று துர்க்கையையும், சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதியையும், விஜய தசமியன்று லட்சுமியையும், ஆதிபராசக்தியையும் வழிபட்டு முப்பெருந்தேவியரைக் கொண்டாடினால் ஒப்பற்ற வாழ்க்கை அமையும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசியிலும், அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசியிலும் புதன் சஞ்சரிக்கப் போகின்றார். புதன் வலிமை இழந்து சஞ்சரித்தாலும் கூட கன்னி ராசியில் உச்சம் பெறும் நேரத்தில் மிகுந்த நற்பலன்களை வழங்குவார். தன பஞ்சமாதிபதியான புதன், பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். துலாத்தில் புதன் சஞ்சரிக்கும் பொழுது கொடுத்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசியில் சுக்ரன் நீச்சம் பெறுகின்றார். பஞ்சம விரயாதிபதி நீச்சம் பெறும் பொழுது பிள்ளைகளால் சில பிரச்சினைகள் அலைமோதும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். உறவினர் வழிப் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கலாம். தேனாகப் பேசுபவர்கள் வீணாகச் சண்டை போடத் தொடங்குவர். உத்தியோகத்தில் திடீர் மாறுதல்கள் உருவாகலாம். கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது. ஆரோக்கியப் பாதிப்புகளும் அதனால் மருத்துவச் செலவுகளும் உருவாகலாம்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கப் போகின்றார். இடம், பூமி வாங்கும் யோகமும், பத்திரப் பதிவில் கவனம் செலுத்தி சொத்துகள் வாங்கும் சூழ்நிலையும் உருவாகும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். தொழிலில் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

இம்மாதம் குரு வழிபாட்டை முறையாக மேற்கொள்வதோடு, குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்கும் யோகபலம் பெற்ற நாளில்சென்று வழிபட்டு வருவது நல்லது. ராகு-கேது வழிபாடு தடைகளை அகற்றும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 17, 21, 22, அக்டோபர்: 4, 5, 13, 14, 15

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் மனக்கசப்புகள் மாறும் மாதமாகும். பணப்புழக்கம்அதிகரிக்கும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் நல்லவிதமாக முடியும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். உடன்பிறப்புகள் உறு துணையாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த இலாகா மாற்றங்களைக் காண்பர். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. மாதத்தின் பிற்பாதியில் பயணங்கள் அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். நவராத்திரி விழாவில் தொடர்ந்து அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் துன்பங்களிலிருந்து விடுபட இயலும். புதன்கிழமை தோறும் பெருமாளையும், லட்சுமியையும் வழிபட்டு வருவது நல்லது.

பணிவு மட்டுமல்லாமல் துணிவும் கொண்டு செயலாற்றும் கடக ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் உங்கள் ராசியில் சஞ்சரிப்பது யோகம்தான். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். ராசியிலேயே ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால் ஒருசில நேரங்களில் மனக்கலக்கத்திற்கு ஆளாக நேரிடும். ஒரு காரியத்தைச் செய்துவிட்டு அது சரியாக முடிவடையாத பட்சத்தில், ‘ஆகா இப்படிச் செய்து விட்டோமே?’ என்று நினைப்பீர்கள்.

அர்த்தாஷ்டம குருவாக 4-ம் இடத்தில் குரு சஞ்சரிக்கின்றார். எனவே ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். இடம், பூமி விற்பனையில் ஏமாற்றங்களைச் சந்திக்காமல் இருக்க விழிப்புணர்ச்சியுடன் நீங்கள் செயல்பட வேண்டும். தாய், தந்தையரின் உடல்நலப் பாதிப்பின் காரணமாக மனக்கலக்கம் ஏற்படலாம்.

பஞ்சம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது நன்மை தான். நீண்ட நாட்களாக முடிவடையாத பிரச்சினைகள் இப் பொழுது முடிவடைந்து நிம்மதியை வழங்கும். வாங்கல் கொடுக்கல்களில் யாருக்கேனும் பொறுப்புகள் சொல்லிஇருந்தால் அவர்களால் பகை உணர்வை வளர்த்திருக்கலாம். இப்பொழுது நாணயப் பாதிப்பிலிருந்து விடுபடும் விதத்தில் அவை ஒழுங்காகும். ஜென் மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே காலசர்ப்ப தோஷத்தின் பின்னணியில் உங்கள் ஜாதகம் செயல்படப் போகின்றது.

பாம்பு கிரகங்கள் பலன் தரும் என்றாலும் சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. வெளிநாட்டு முயற்சி வெற்றிகரமாக முடியுமா? என்பது சந்தேகம் தான். வியாபார விரோதங்களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்கள் பகை உணர்வை வளராமல் பார்த்துக் கொள்வது நல்லது. திடீர், திடீர் எனப் பொறுப்புகள் மாற்றப்படலாம்.

ஜென்ம ராகுவால் நன்மைகள் நடக்கவும், சப்தம கேதுவால் தடைகள் விலகவும், நாகசாந்திப் பரிகாரங்களை உங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் அனுகூலம் தரும் ஸ்தலங்களை உங்கள் சுயஜாதகத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துப் பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது. மேலும் நவராத்திரி விழா நாட்களில் ஆதிபராசக்தியை உள்ளன்போடு வழிபட்டு வந்தால் சோதனைகள் மாறிச் சாதனைகள் நிகழ்த்த இயலும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப், புதன் செல்கின்றார். அதன்பிறகு அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் செல்கின்றார். சகாய ஸ்தானம், விரய ஸ்தானம் ஆகியவற்றிற்கு அதிபதியான புதன், கன்னி ராசியில் உச்சம் பெறும்பொழுது உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். துலாம் ராசியில், புதன் சஞ்சரிக்கும்பொழுது பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றங்கள் உருவாகலாம். தாய்வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். குடும்பப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் சூழ்நிலை உருவாகும்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். இந்த வீடு சுக்ரனுக்கு நீச்ச வீடாகும். 4, 11-க்கு அதிபதி வலிமை இழந்தாலும் கூட குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் தொழிலில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்டுவீர்கள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்வர். முயற்சிகளில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். வேலையாட்களால் ஏற்பட்ட வேதனைகள் விலகும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக்கொண்டு செயல்படுவீர்கள். வெளிநாட்டில் பணி புரிபவர் களுக்கு திடீர் என்று தாய்நாடு திரும்பும் சூழ்நிலை உருவாகும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். ‘கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்’ என்பது பழமொழி. எனவே பொருளாதாரத்தில் மிகுந்த பற்றாக்குறை ஏற்படலாம். வாங்கல்-கொடுக்கல்களில் தடைகளும், தாமதங்களும் உருவாகும். கடன் சுமையின் காரணமாகவோ அல்லது தொழிலுக்கு மூலதனமாக்கிக் கொள்ளவோ, வீடு, மனைகளை விற்கும் சூழ்நிலை சிலருக்கு உருவாகலாம். பிள்ளைகளால் அதிக தொல்லைகளைச் சந்திக்க நேரிடலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களிடம் பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

இம்மாதம் வியாழன் தோறும் குரு பகவானை வழிபடுவதோடு செவ்வாய் தோறும் முருகப்பெருமானையும் வழிபட்டு வருவது நல்லது. நவராத்திரி நாட்களில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரை வழிபட்டு துயரங்களைப் போக்கிக் கொள்ளுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 19, 20, 22, 23, அக்டோபர்: 5, 6, 10, 11, 16, 17

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நேரமிது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவிக் குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளை உங்களுடைய கவனத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கும் நேரத்தில் இடமாற்றம், ஊர் மாற்றங்கள் உருவாகலாம். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். ஒவ்வொரு வியாழக் கிழமையும் விரதமிருந்து குரு பகவானை வழிபட்டு வருவது நல்லது. நவராத்திரி வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துங்கள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஈடேறும்.

மற்றவர்கள் மனதைப் புரிந்து கொண்டு செயல்படும் சிம்ம ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். தனாதிபதி புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். சூரியனும், புதனும் ஒரே நேரத்தில் தங்களது வீடுகளை மாற்றி, சூரியன் வீட்டில் புதனும், புதன் வீட்டில் சூரியனும் சஞ்சரித்து பரிவர்த்தனை யோகத்தைக் கொடுக்கின்றார். யோகங் களில் சிறப்பான யோகம் பரிவர்த்தனை யோகமாகும்.

இதன் விளைவாக பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் காணப்போகிறீர்கள். உங்கள் கனவுகள் எல்லாம் நனவாகும். குருவும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகற்கள் எல்லாம் அகலும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இடையிடையே ஸ்தம்பித்திருந்த தொழில் இனி சீராக நடைபெறும். குடும்பத்தில் நடைபெற இருந்த சுபகாரிய நிகழ்வுகளில் ஏற்பட்ட தாமதங்கள் அகலும்.

கல்யாணமாக இருந்தாலும், காதணி விழாவாக இருந்தாலும், கட்டிடத் திறப்புவிழாவாக இருந்தாலும் இனி துரிதமாக நடைபெறும். வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

சனி அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படுமே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். சனி விலகும் நேரம் வந்து விட்டது. விலகுவதற்குச் சில மாதங்கள் முன்னதாகவே நன்மைகளையே செய்யத்தொடங்கும் என்பதால் இனி மன நிம்மதி கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் இருந்து விடுபட்டுத் தனித்து இயங்க முற்படுவீர்கள்.

உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் சில நாட்களுக்கு முன்பு 12-ம் இடத்திற்குச் சென்று கடக ராசியில் சஞ்சரிக்கின்றார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது பகவான் 6-ம் இடத்திற்கு வந்துள்ளார். எனவே உத்தியோகத்தில் உள்ளவர்கள்் திடீர் மாற்றம் ஏற்பட்டு இடமாறுதல் காணப்போகின்றார்கள். இது போன்ற காலங் களில் வழிபாடுகள் உங்களுக்குத் தேவை. சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டையும், பெருமாள், லட்சுமி வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

24.9.2017 அன்று கன்னி ராசிக்குப் புதன் செல்கின்றார். புதனுக்கு அந்த வீடு உச்ச வீடு என்றாலும் புத பகவான் வலிமை இழந்து சஞ்சரிக்கின்றார். அத்துடன் அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் செல்கின்றார். அங்கும் வலிமை இழந்துதான் சஞ்சரிக்கின்றார். எனவே இக்காலம் ஒரு பொற்காலமாகும். தனலாபாதிபதி உச்சம் பெறும் பொழுது தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன்கருதி நீங்கள் செய்யும் செயல்களுக்கு வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாகச் செயல்படுவர். துலாத்தில் புதன் சஞ்சரிக்கும் பொழுது மாமன், மைத்துனர் வழியில் உதவிகளும், ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். தொழில் முன்னேற்றம் உண்டு.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். அது சுக்ரனுக்குரிய நீச்ச வீடாகும். வலிமை இழந்து வீட்டில் சுக்ரன் சஞ்சரித்தாலும் நற்பலன்களையே அவர் வழங்குவார். காரணம் சூரியனோடு சுக்ரன் சேர்க்கை பெற்றிருக்கின்றார். 3, 10-க்கு அதிபதி நீச்சம் பெறுவதால் தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படலாம். பங்குதாரர்களை மாற்றிக்கொள்ள முன்வருவீர்கள். பணத்தேவைகள் கடைசிநேரத்தில் பூர்த்தியாகும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு யோக கிரகமான செவ்வாய், கன்னி ராசிக்குச் செல்லும் பொழுது சொத்து களால் ஆதாயம் கிடைக்கும். சொந்தங்களால் நன்மை உண்டாகும். தந்தை வழி உறவிலிருந்த விரிசல் மறையும். பூர்வீக சொத்துகளில் இருந்த பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

இம்மாதம் சனிக்கிழமைதோறும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது. சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மூலம் சங்கடங்களை அகற்றிக் கொள்ள இயலும். மகாளய அமாவாசை அன்று முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 20, 21, 24, 25, 26, அக்டோபர்: 7, 8, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ். ”

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் பரிவர்த்தனை யோகமும், புத ஆதித்ய யோகமும் செயல்படும் மாதம் என்பதால் பணக்கவலை தீரும். பாராட்டும், புகழும் கூடும். மனதளவில் செய்ய நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங் கள் வெற்றி பெறும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். கடன்சுமை குறையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பராசக்தி வழிபாடு அனைத்து நலன்களையும் வழங்கும்.

உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உன்னத குணம் பெற்ற கன்னி ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் விரயஸ்தானத்தில் இருக்கின்றார். விரயாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். எனவே குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். கொடுக் கல்-வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. கடுமையாக முயற்சி செய்தே ஒருசில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலும்.

குருப்பெயர்ச்சியாகிவிட்டதே இனி நமக்கு நன்மைகள் நடைபெறும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது, இப்படி விரயத்திற்கான அறிகுறி தென்படுகின்றதே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஜென்ம குரு மாறியதால் சிரமங்கள் பாதிக்குமேல் குறையும். இருந்தாலும் இதுபோன்ற விரயாதிபதி பலம் பெற்றிருக்கும் காலங்களில் விரயங்கள் ஏற்படத்தான் செய்யும். இவ்வாறு ஏற்படும் விரயங்களைச் சுபவிரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது. வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, மின்சாதனப் பொருட்கள் வாங்குவதற்கும் செலவிடலாம்.

வருமானம் திருப்திகரமாக இருக்கும் என்பதால் செலவைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை. எனவே தனாதி பதி சுக்ரன் 12-ல் சூரியன் வீட்டில் இருந்து நற்பலன் களை அதிகம் வழங்கப் போகின்றது. 2-ல் வந்த குரு திரண்ட செல்வத்தைக் கொடுப்பார். திட்டமிட்ட காரியங் களைத் திட்டமிட்டபடியே நடத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டாலும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவரும்.

உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் 3-ல் இருப்பது ஒருவகை யில் நன்மைதான். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கு ஏற்ப சில எதிர்பாராத திருப்பங் களும் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு, ஊதியத்தில் வராமலிருந்த சம்பளப் பாக்கிகள் கைக்கு வரும். சகோதர விரோதம் விலகும். நிரந்தர வேலைக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வீடு தேடிவரும். குணம் மாறி நடந்த பிள்ளைகள் மனம் மாறுவர்.

இம்மாதம் புதன்கிழமைதோறும் பெருமாளையும், லட்சுமியையும் வழிபாடு செய்வதோடு, அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டு வருவது நல்லது. நவராத்திரி நாட்களில் தொடர்ந்து அன்னை பராசக்தியை வழிபட்டால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் செல்கின்றார். இதன் விளைவாக மிகுந்த நற்பலன்கள் உங்களுக்கு வந்துசேரப்போகின்றது. குறிப்பாக கன்னி ராசியில் புதன் உச்சம் பெறும் பொழுது உடல் ஆரோக்கியம் சீராகும். மதிப்பும், மரியாதையும் உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்கு, புதன் செல்கின்றார். புதனுடைய சஞ்சாரம் கொஞ்சம் வலிமை இழந்திருந்தாலும் கூட உங்கள் ராசிநாதனாக இருப்பதால் ஓரளவு நன்மைகளையே வழங்குவார். தொழில் ஸ்தானாதிபதியாகவும் புதன் இருப்பதால் இக்காலத்தில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

சுக்ரன் உங்கள் ராசிக்கு அக்டோபர் 10-ந் தேதி வருகின்றார். கன்னி ராசி சுக்ரனுக்கு நீச்ச வீடாகும். எனவே இக்காலத்தில் பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். ஒருசிலருக்கு நெருக்கடியைச் சமாளிக்க பிறரிடம் கைமாற்று வாங்கும் சூழ்நிலை கூட உருவாகலாம். தந்தை வழியில் விரோதங்கள் வளரும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஏமாற்றம் உருவாகலாம். எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். இக்காலத்தில் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. குறிப்பாக சகோதர விரோதம் வளரும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். புதியவர்களை நம்பி எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது. சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கும். பணியில் நெருக்கடிகள் அதிகரிக்கும்.

இம்மாதம் பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்வதோடு மகாளய அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டிலும் கவனம் செலுத்துங்கள். நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு அம்பிகையை தரிசனம் செய்வது அதிகப் பலன்களைக் கொடுக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 17, 22, 23, 28, 29, அக்டோபர்: 9, 10, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். சென்ற மாதத்தில் சேமித்த சேமிப்புகள் கரையலாம். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உறவுகள் பகையாகலாம். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல்நலம் சீராகும்.வீடு வாங்கும் யோகம் ஒருசிலருக்கு உண்டு. புதன் தோறும் விஷ்ணு, லட்சுமி, வழிபாட்டை மேற்கொள்வதோடு நவராத்திரி நாட்களில் அன்னை புவனேஸ்வரியை வழிபடுவதன் மூலம் அனைத்து நலன்களும் வந்து சேரும்.

கவர்ச்சியாகப் பேசிக்காரியங்களைச் சாதித்துக் கொள்வதில் வல்லவர்களாக விளங்கும் துலாம் ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். ஜென்ம குருவாக இருந்தாலும் அதன் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் அந்தந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் எல்லாம் நல்லவிதமாக நடைபெறும். எனவே பிள்ளைகளின் படிப்பு அல்லது பல நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த வேலை, கல்யாணம் தொடர்பாக நீங்கள் ஏதேனும் புது முயற்சிகள் செய்திருந்தால் அதில் அனுகூலம் கிடைக் கும்.

சப்தம ஸ்தானத்தைப் பார்க்கும் குருவின் பலனால் சங்கடங்கள் தீரும். சார்ந்து இருப்பவர்களால் நன்மை கிட்டும். கல்யாணக் கனவுகள் நனவாவதற்கான அறிகுறிகள் தென்படும். வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும், பணிபுரிய வேண்டும் என்று விரும்பியவர் களுக்கு இப்பொழுது அவர்கள் விருப்பங்கள் நிறைவேறப்போகின்றது.

9-ம் இடம் புனிதமடைவதால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புகழ் கூடும். பண்புள்ள மனிதர் களின் தொடர்பால் பல நாட்களாக நடைபெறாத ஒருசில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும். இடையூறுகளை வெல்லக் கூடிய ஆற்றல் குருவின் பார்வைக்கு உண்டு என்பதால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நீங்கள் விரதமிருந்து குருபகவானை வழிபடுவது நல்லது. குறிப்பாக உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் பகை கிரகமான சுக்ரன் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் வெள்ளிக்கிழமை அன்று சுக்ர வழிபாட்டையும், வியாழக்கிழமை குரு வழிபாட்டையும் முறையாகச் செய்தால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

இந்த மாதத்தில் நவராத்திரி விழா வருகின்றது. எனவே ஒன்பது நாட்களும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மேலும் சனிப்பெயர்ச்சிக்கு பிறகே உங்களுக்குச் சாதகமான பலன்கள் ஏராளமாக நடைபெறும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் செல்கின்றார். அது புதனுக்குரிய உச்ச வீடாகும். விரய ஸ்தானத்தில் விரயாதிபதியாக விளங்கும் புதன் உச்சம் பெறும்பொழுது கட்டுக்குள் அடங்காத செலவுகள் ஏற்படலாம். சென்ற மாதத்தில் சேமித்த சேமிப்புகள் கரையலாம். குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். வீடு விற்க, வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். பயணங்களால் பலன் உண்டு. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் அமைப்பு ஒருசிலருக்கு ஏற்படும். அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்கு, புதன் வருகின்றார். 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதி ராசியில் உலா வரும்பொழுது சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் அகலும்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

சுக்ர பகவான் அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்கின்றார். அது அவருக்கு நீச்ச வீடாகும். ராசிநாதன் பலமிழந்து சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் மிகமிக கவனம் தேவை. புதியவர்களை நம்பி ஏமாறும் சூழ்நிலை கூட உருவாகும். எதிரிகளின் தொல்லை மேலோங்கும். எதிர்மறைச் சிந்தனைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் சிறப்பு வழிபாடு உங்களுக்குத் தேவை. உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

தனாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்திற்கு வரப் போகின்றார். அந்த நிகழ்வு அக்டோபர் 14-ந் தேதி நிகழவிருக்கின்றது. அதே நாளில் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் குருபகவானும் கொஞ்சம் வலிமை இழந்து சஞ்சரிக்கின்றார். எனவே உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் உருவாகலாம். சொத்துகள் விரயமாகும். சொந்தங்கள் பகையாகலாம்.

இம்மாதம் வியாழன்தோறும் குருவை வழிபடுவதோடு சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து தும்பிக்கையானை வழிபாடு செய்யுங்கள். அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு முன்னேற்றத்திற்கு வித்திடும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 18, 19, 24, 25, 26, அக்டோபர்: 1, 2, 12, 13, 16, 17

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்நீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் அக்டோபர் 9-ந்தேதி வரை அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். அதன்பிறகு சுக்ரன் நீச்சம் பெறும் நேரத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத் தொல்லை உருவாகலாம். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் நலன்கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம். சகோதரர்களால் விரயம் உண்டு. பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் உருவாகலாம். வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியையும், வெள்ளிதோறும் அம்பிகையையும் வழிபட்டு வருவதன் மூலம் வளர்ச்சி ஏற்படும். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். மேலும் 10-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன் 11-ம் இடமான லாப ஸ்தானத்திலும், 11-ம் இடத்திற்கு அதிபதியான புதன் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரித்து பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். இந்த யோகம் மிகச்சிறப்பான யோகமாகும்.

நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக முடிவடையும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். இனி ஜென்மச் சனி விலகப் போகின்றது. சனி விலகுவதற்கு முன்னதாகவே நன்மைகளைச் செய்யத் தொடங்கும். குறிப்பாக 3 மாத காலத்திற்கு முன்னரே சனிபகவான் தனது ஆதிபத்யங்களுக்குரிய பலன்களை நல்ல விதமாக அள்ளி வழங்குவார்.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனிபகவான். எனவே தடைகற்கள் எல்லாம் படிக்கற் களாக மாறும். தானாக வந்த துன்பம் தவிடு பொடியாகும். உடல் ஆரோக்கியம் சீராகி உற்சாகப்படுத்தும்.

தற்சமயம் பெயர்ச்சியான குரு பகவானும் 12-ம் இடத்தில் சஞ்சரித்து அதன்பார்வையை 4-ம் இடத்தில் பதிக்கின்றது. சுக ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் சுகங்களும், சந்தோஷங்களும் கூடுதலாக இருக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன்பணிபுரிபவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். உயர்மட்ட அதிகாரிகளின் நெருக்கத்தால் சம்பள உயர்வோடு கூடிய சந்தோஷமான மாற்றம் வந்து சேரும்.

ஜென்மச் சனிக்குப் பரிகாரமாக சனிக்கிழமை தோறும் ஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுவது நல்லது.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் வருகின்றார். புதனுக்கு அது உச்ச வீடாகும். லாபாதிபதி உச்சம் பெறும் இந்த நேரத்தில் எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும். வங்கிச் சேமிப்பு உயரும். வெளிநாட்டுத் தொடர்பு விருத்திக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். உயர்பதவியில் இருப்பவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருப்பர். அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வரப்போகின்றார். அஷ்டமாதிபதியாகவும் புதன் விளங்குவதால் அவர் 12-ம் இடத்திற்கு வரும்பொழுது பயணங்களாலும் பலன் கிடைக்கும். பாக்கிகளும் வசூலாகி பரவசப் படுத்தும். தொழில் முன்னேற்றம் உண்டு.

சுக்ரப் பெயர்ச்சி காலம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்கு, சுக்ரன் செல்கின்றார். அங்கு சுக்ரன் நீச்சம் பெற்றாலும் கூட உங்கள் ராசிக்கு 7, 12-க்கு அதிபதியான சுக்ரன் 11-ல் சஞ்சரிக்கும் பொழுது விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. பெண்வழிப் பிரச்சினைகள்அகலும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்க முன்வருவீர்கள். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகளும், பூமி சேர்க்கையும் ஏற்படும். நல்ல வாய்ப்பு இந்த நேரத்தில் வந்து சேரும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்பொழுது யோகத்தை வாரி வழங்கப்போகின்றார். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொகை வரவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். மாற்று மருத்துவத்தால் உடல் ஆரோக்கியம் சீராகும்.

இம்மாதம் ஜென்மச் சனிக்குப் பரிகாரமாக சனிக் கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது. மகாளய அமாவாசை அன்று முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள். நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 17, 20, 21, 28, 29, அக்டோபர்: 3, 4, 13, 14, 15

மகிழ்ச்சி தரும் வண்ணம்: இளஞ்சிவப்பு.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் உங்களுக்கு இனிய மாதமாகும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். குடும்பத்தில் சுபகாரியப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். அரசுவழி ஆதரவு கிடைக்கும். நவராத்திரி நாயகியை கொண்டாடுங்கள். விஜயதசமியன்று வெற்றிக்குரிய சக்தியை வழிபடுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

பாசத்தோடு பழகியவர்களுக்கு நேசக்கரம் நீட்டும் தனுசு ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே பொருளாதார நிலை உயரும். சென்ற மாதத்தைக் காட்டிலும் சிறப்பான மாதமாக அமையும். தொழில் முன்னேற்றம் உண்டு. துணையாக இருக்கும் நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். பணிபுரியும் இடத்தில் இருந்த பகை மாறும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

ஏழரைச் சனியில் விரயச் சனி ஆதிக்கம் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் தன ஸ்தானம் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியாகச் சனி விளங்குவதால் வரவைக் கொடுத்தே உங்களுக்குச் செலவுகளையும் வழங்குவார். எனவே எந்தக் காரியத்தையும் நீங்கள் செய்யத்தொடங்கினாலும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு தொடங்க வேண்டியதில்லை. காரியத்தைத் தொடங்கிவிட்டால் பணம் தானாக வந்துசேரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

அரசியல் மற்றும் பொது நலத்தில் ஈடுபட்டிருப்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். மேலிடத்து அனு கூலத்தோடு மேன்மை பெறுவீர்கள். 9-ம் இடத்திற்கு அதிபதியான புதனும், 10-ம் இடத்திற்கு அதிபதியான சூரியனும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார்கள்.

தர்மகர்மாதிபதியின் பரிவர்த்தனை சிறந்த யோகமாகும். ஒருசிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கலாம். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். எதிரிகள் விலகுவர். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு. ஆரோக்கியத்திற்காக செலவிட்ட தொகை குறையும். ஆதாயம் தரும் தகவல் அன்றாடம் வந்து கொண்டேயிருக்கும்.

உறவினர்கள் மனக்கசப்பு மாறி உங்களோடு இணைந்து செயல்படுவர். நிலையான வருமானத்திற்கு வழி யமைத்துக் கொள்வீர்கள். கூட்டு முயற்சிகளின் மூலம் பலனடைந்தவர்கள் இப்பொழுது தனித்து இயங்க முன்வருவர். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். கவலை என்ற மூன்றெழுத்து உங்கள் அகராதியில் இருந்து விலகப் போகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சனிபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

மகாளய அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்னேற்றப் பாதையிலிருந்த முட்டுக்கட்டைகள் விலகும். மேலும் நவராத்திரி விழா இம்மாதம் வருகின்றது. அதில் கலந்து கொண்டு அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வதோடு அம்பிகை வெற்றிபெற்ற நாளான விஜயதசமியன்று ஆலயவழிபாட்டை மேற்கொண்டால் நல்ல தகவல்கள் நாளும் வந்து கொண்டேயிருக்கும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்தில் புதன் சஞ்சரிக்கும் பொழுது தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். எதிர்பாராத விதத்தில் நன்மைகள் கிடைக்கும். கன்னி ராசி புதனுக்கு உச்ச வீடாகும். எனவே புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும்.

நடக்கும் தொழிலோடு கூடுதலாக ஏதேனும் செய்யலாமா? என்று யோசிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் அகலும். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் வரப்போகின்றார். தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் எதிர்பாராத திருப்பங்கள் உருவாகும். வாடகைக்கு உள்ள இடத்தில் தொழில் நடத்துவோர் அந்த இடத்தை விலைக்கு வாங்க முற்படுவர். உன்னதமான நேரம் இது.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். அந்த இடம் சுக்ரனுக்கு நீச்ச வீடாகும். 6, 11-க்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறும் பொழுது நற்பலன்களை வழங்கும். குறிப்பாக மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளையும் முழுமையாகச் செய்து முடிப்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். வெளிநாடு செல்ல அனுகூலம் உண்டு. கூட்டாளிகளால் லாபம் கிடைக்கும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசி்க்குச் செவ்வாய் செல்கின்றார். பஞ்சம விரயாதிபதி 10-ல் சஞ்சரிக்கும் பொழுது, ஒருசிலருக்கு தொழில் மாற்றங்கள் உருவாகலாம். கிளைத்தொழில் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். ஒருசிலர் பங்குதாரர்களை விலக்கிவிட்டுப் பிள்ளைகளையே பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்வர். இடமாற்றங்கள் இனிமை தருவதாக அமையும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும்.

இம்மாதம் வியாழன் தோறும் குருவழிபாட்டை மேற்கொள்ளுங்கள். முல்லைப்பூ மாலை சூட்டினால் நல்ல பலன் கிடைக்கும். அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 18, 23, 24, 29, அக்டோபர்: 1, 2, 5, 6, 16, 17

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும் மாதமாகும். பாராட்டும், புகழும் கூடும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் கூடும். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில்லாப் பட்டதாரிகளாக விளங்கிய பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். அவர்கள் மணமாலை சூடும் வாய்ப்பும் உருவாகும். உடன்பிறப்புகள் உங்கள் தொழிலுக்கு உறுதுணை புரிவர். சொத்துகள் வாங் கும் யோகமும் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு சம்பள உயர்வோடு கூடிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபாடு செய்யுங்கள். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

எடுத்த லட்சியம் நிறைவேறும் வரை இரவு-பகல் பாராமல் பாடுபடும் மகர ராசி நேயர்களே!புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் பாம்பு கிரகமான கேது சஞ்சரிக்கின்றார். சப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கின்றார். எனவே கால சர்ப்ப தோஷத்தின் பிடியில் இருக்கிறீர்கள். ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கை உங்களுக்கு அமையும். இன்பமும், துன்பமும், வரவும், செலவும் சமமாக இருக்கும். எனவே யோகபலம் பெற்ற நாளில் நாகசாந்திப் பரிகாரங்களைச் செய்துகொள்வது அவசியம்.

ஜென்மத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அதே நேரத்தில் சப்தம ஸ்தானத்தில் சந்திரனோடு ராகு இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு வைத்தியச் செலவுகள் உருவாகலாம். வீண் விரயங்கள் கூடும்.

அதே நேரத்தில் அஷ்டமத்தில் மூன்று கிரகங்கள் முற்றுகையிட்டிருக்கின்றன. செவ்வாய் 8-ல் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. உடன்பிறப்புகளாலும், உடல் நிலையாலும் தொந்தரவுகள் ஏற்படலாம். கடன் சுமை கூடிக்கொண்டே போகின்றதே என்றும் கவலைப்படுவீர்கள். பெண்வழிப் பிரச்சினை தலைதூக்கும். மனக் கவலை அதிகரிக்கும். அந்த நேரத்தில் சுயஜாதக அடிப்படையில் தெசாபுத்திக்கேற்ற தெய்வத்தைத் தேர்ந் தெடுத்து வழிபடுவது நல்லது. எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து பொறுமையாகச் செய்வது அவசியம்.

10-ல் குரு வந்திருக்கின்றார். ‘10-ல் குரு வந்தால் பதவியைப் பறிப்பார்’ என்பார்கள். எனவே உத்தியோகம் மற்றும் உயர்பதவியில் இருப்பவர்கள் மேலிடத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இல்லையேல் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு திக்குமுக்காடச் செய்யும். தாய்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் அமைப்பும், வெளிநாட்டில் இருப்பவர்களுக்குத் தாய்நாடு திரும்பும் அமைப்பும் உருவாகும்.

இருப்பினும் 10-ம் இடத்தில் சஞ்சரிக்கின்ற குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால் குடும் பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலவும், மறைமுக எதிர்ப்புகள் மாறவும் குருவிற்குரிய சிறப்புப் பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. மேலும் உங்கள் ராசிநாதன் சனிபகவான் மூன்றாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் மருத்துவச் செலவுகள் கூடும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும், சனி பகவான் சன்னிதியில் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதோடு தினமும் காகத்திற்கு அன்னம் வைப்பது நல்லது. குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளைச் செய்து வழிபட்டு வந்தால் 10-ம் இடத்து குருவால் முத்தான பலன்கள் கிடைக்கும். நவராத்திரி விழாக் காலத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வந்த துயரங்கள் வாயிலோடு நிற்கும்.

புதனின் சஞ்சாரக் காலம்!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் செல்கின்றார். அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். 6, 9-க்கு அதிபதி உச்சம் பெறும் பொழுது ஜீவன ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும், நேர்முகத் தேர்விற்குச் சென்றும் இதுவரை பலன் கிடைக்கவில்லையே என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது அழைப்பு வரப்போகின்றது. பயணங்கள் அதிகரிக்கும். பெற்றோர்களின் மணிவிழா, பவளவிழா, முத்துவிழா போன்றவற்றை நடத்தி மகிழும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும்். அண்ணன், தம்பிகளுக்குள் ஏற்பட்ட அரசல் புரசல்கள் இணக்கமாக மாறி பாகப்பிரிவினைகளை சுமுகமாக முடித்துக் கொள்வீர்கள். பங்காளிப் பகை மாறும். அக்டோபர் 9-ந் தேதி துலாத்தில் புதன் சஞ்சரிக் கும் பொழுது தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்தி ணைவர்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். அந்த வீடு சுக்ரனுக்கு நீச்ச வீடாகும். 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் 9-ல் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். இதுபோன்ற காலங்களில் நாமே சுபவிரயங்களைச் செய்வது நல்லது. குறிப்பாக பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டுச் சீர்வரிசைப் பொருட்களை வாங்கலாம். அல்லது அவர் களுக்குரிய ஆபரணங்களை வாங்கி மகிழலாம். வங்கிகளில் வைப்பு நிதி வைக்கலாம். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். 4, 11-க்கு அதிபதி 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் நன்மைகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். குறிப்பாக பெற்றோர் வழியில் ஆதரவு கூடும். எதிர்காலக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீடு வாங்குவது அல்லது கட்டுவதில் இருந்த வில்லங்கங்கள் அகலும். உடன் பிறப்புகள் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும்.

இம்மாதம் வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். பவுர்ணமி கிரிவலம் வருவதும் பலன் தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 21, 22, 24, 25, 26, அக்டோபர்: 3, 4, 7, 8

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச்செல்லும் மாதமாகும். அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. 10-ம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு திடீர் மாற்றங்கள் உருவாகலாம். மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சனிக்கிழமை அனுமன் வழிபாட்டையும், நவராத்திரி நாட்களில் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொள்வதன் மூலம் தடைகள் அகலும்.

நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டுமென்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரப்போகின்றது. கூட்டு முயற்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாய் மாறும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள ஆயத்தம் செய்வீர்கள். குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகமாகும்.

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதால் இனி படிப் படியான முன்னேற்றம் பல வழிகளிலும் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நிறைய நடைபெறப் போகின்றது. தள்ளிப்போன சுபகாரியங்கள் தானாக நடைபெறும்.

வெல்லம் போல் இனிமையாக பேசியவர்களில் ஒருசிலர் விலகிச் சென்றிருக்கலாம். அவர்கள் மீண்டும் வந்திணைய வாய்ப்பு உண்டு. அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தால் பலவிதக் கஷ்டங்களையும், நஷ்டங் களையும் எதிர்கொண்டு வந்த நீங்கள் இப்பொழுது இஷ்டம் போல் வாழ்க்கை நடத்த எல்லா வழிகளிலும் உதவி கிடைக்கப் போகின்றது. மற்றவர்களைப் போல இல்லாமல் நாம் ஒரு புது முறையைக் கையாள வேண்டுமென்று நினைப்பவர்கள் நீங்கள். அதற்கு இதுவரை இடையூறு சக்திகள் இருந்திருக்கலாம். இனி உங்கள் நோக்கங்கள் நிறைவேறும். தாக்கங்கள் அகலும்.

6-ல் ராகு, 12-ல் கேது சஞ்சரிக்கின்றார்கள். 6-ல் ராகு இருப்பதால் உத்தியோகத்தில் உயர்வும், ஊதியத்தில் எதிர்பார்த்தபடி சலுகைகளும் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகும். அதே நேரத்தில் 12-ல் கேது இருப்பதால் ஒருசில சமயங்களில் நீங்கள் எடுத்த முடிவால் அவதிப்படவும் நேரிடலாம். அதிக விரயங்களையும் அது கொடுக்கும். எனவே சான்றோர்களின் ஆலோசனை களையோ, ஆன்மிகம் சார்ந்தவர்களின் ஆலோசனை களையோ கேட்டு நடப்பது நல்லது.

சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அரசியல்வாதிகளால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம். வங்கிகளில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் வந்தடைவதிலும் தாமதம் ஏற்படலாம். பொதுநலத்தில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். மதிநுட்பத்தோடு நடந்துகொள்வது நல்லது. இம்மாதம் நவராத்திரி விழா வருகின்றது. உங்கள் ராசிக்குச் சுக்ரன் நன்மை செய்யும் கிரகமாகும். எனவே பெண் தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு கைகொடுக்கும். அந்த அடிப்படையில் நவராத்திரி விழாக் காணும் அம்பிகையை 9 நாளும் சென்று வழிபட்டு வருவதோடு அம்பிகை வெற்றி பெற்ற நாளான விஜய தசமியிலும் அம்பிகையை வழிபட்டு வந்தால் வெற்றிச்செய்திகள் வந்து சேரும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் செல்கின்றார். அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். அஷ்டமாதிபதியான புதன் 8-ல் உச்சம் பெறுவது யோகம் தான். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். எனவே பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக் கசப்புகள் மாறும். சேமிப்புகள் உயரும். இந்த நேரத்தில் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் செல்கின்றார். இதன் விளைவாக பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் அகலும். உங்களுக்குரிய பங்கு வந்து சேரும்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்கு, சுக்ரன் செல்கின்றார். அது அவருக்கு நீச்ச வீடாகும். 4, 9-க்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது. நண்பர்கள் ஏமாற்றங்களைச் சந்திக்கும் நேரமிது. அணிந்து அழகு பார்த்த நகைகளை ஒருசிலர் அடகு வைக்கும் சூழ்நிலை உருவாகும்.

கன்னி ராசியில் செவ்வாயின் சஞ்சாரம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்தில் மறைவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். உடன்பிறப்புகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் இழுபறி நிலையில் இருக்கும்.

இம்மாதம் செவ்வாய் தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதோடு நவராத்திரி நாட்களில் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடுவதன் மூலம் சுபகாரியத் தடைகள் அகலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 22, 23, 28, 29, அக்டோபர்: 5, 6, 9, 10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் குரு பார்வை இருப்பதால் தொட்ட காரியங் களில் வெற்றி கிடைக்கும். தொகை வரவு திருப்திகரமாக அமையும். அனுபவித்து வந்த கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்தது என்று சொல்லி மகிழ்வீர்கள். பாதியில் நின்ற பணிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக முடிவடையும். மாதத்தின் கடைசி 4 நாட்கள் மிகமிக கவனமுடன் இருப்பது நல்லது. கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும் என்பதால் பெரும்பொருள் விரயம் அச்சமயத்தில் ஏற்படலாம். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் வேலை வாய்ப்பு அல்லது வெளிநாட்டு முயற்சி சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடு செய்திருந்தால் அதில் அனுகூலங்கள் உருவாகும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குருவழிபாடும், நவராத்திரி நாளில் அம்பிகை வழிபாடும் நன்மைகளை வழங்கும்.

நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்லவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் மீன ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் குருபகவான் இப்பொழுது அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். 6-க்கு அதிபதியான சூரியன் சப்தம ஸ்்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்க்கின்றார். எனவே புரட்டாசி மாதம் முழுவதும் நீங்கள் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாகவே அஷ்டமத்திற்கு சனி வந்தாலும், குரு வந்தாலும், செவ்வாய் வந்தாலும் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் பிறருக்கு நன்மை செய்ய முயற்சி செய்து, அது தீமையில் முடியலாம். பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்க்கை அமையலாம். இரவு, பகலாக நீங்கள் அரும்பாடுபட்டு மேற்கொண்ட காரியங்களுக்கு பலனில்லாமல் போகலாம்.

பொதுவாகவே மாபெரும் கிரகங்கள் 8-ம் இடத்திற்கு வரும்பொழுது வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படத்தான் செய்யும். அவற்றை ஈடுகட்ட நீங்கள் வழிபாட்டில்தான் முழுக் கவனமும் செலுத்த வேண்டும். எனவே இந்த மாதத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குருபகவானை வழிபட்டு, அர்ச்சனைகள் செய்து வருவது நல்லது. உங்கள் பெயரையும் நட்சத்திரத்தையும் சொல்லி அர்ச்சனைகள் செய்யும் பொழுது முழுமையான நற்பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். சோதனையான காலம் கூட இனிமையான நேரமாக மாற இறைவழிபாடு ஒன்றுதான் கைகொடுக்கும்.

மாதத்தொடக்கத்தில் பஞ்சம ஸ்தானத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் இருக்கின்றார்கள். புத்திர ஸ்தானத்தில் ராகு இருக்கும் பொழுது சுபவிரயங்கள் அதிகரிக்கும். கல்யாண காரியங்களை துரிதமாக பேசி முடிக்கவும் இயலும். பிள்ளைகள் வெளிநாடு சென்று படிக்கவோ, வேலை பார்க்கவோ, நீங்கள் எடுத்து வந்த முயற்சியில் இதுவரை எதிர்கொண்டு வந்த தாமதங்கள் இனி அகலும். முன்னோர்கள் கட்டமைத்த ஆலயங்களை முழுமையாக பராமரித்து முறையாக திருப்பணிகள் செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.

இம்மாதம் புதனும், சூரியனும் 6,7 ஆகிய இடங்களில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கின்றார்கள். புதிய வேலையில் சேர்ந்து அதில் திருப்தியில்லாமல் வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இது அனுகூலம் தரும் நேரமாகும். வேலை தேடிக்கொண்டிருப்பவர் களுக்கு புதிய வேலையும் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றமும் ஏற்படும். பொதுவாக இம்மாதத்தில் ராகு-கேதுக்களுக்குப் பிரீதி செய்வது நல்லது. பிரதோஷ நேரத்தில் நந்தியெம்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நவராத்திரி நாட்களில் மகிஷாசுர மர்த்தினியாக அம்பிகை அவதாரம் எடுத்து அசுரனை வெற்றி பெற்ற நாளான விஜயதசமி அன்று முறையாக வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். தடைகள் அகலும். தன வரவு திருப்தி தரும். வாழ்க்கை பயணம் நல்ல விதமாக அமையும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் செல்கின்றார். அங்கு புதன் உச்சம் பெறுவதால் திருமண காரியங்கள் கை கூடும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக் கசப்புகள் நீங்கும். அயல்நாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். தாயார், தந்தையாரின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். அவர்களின் உடல்நலம் தேறும். உங்கள் தொழிலுக்கான மூலதனத்தைப் பெற்றோர்களே தரலாம். அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வருகின்றார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். குறைந்த லாபம் கிடைத்து வந்த தொழிலில் நிறைந்த லாபம் கிடைக்கப் போகின்றது.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

சுக்ரன் அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்கின்றார். அது அவருக்கு நீச்ச வீடாகும். 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். உங்கள் ராசி நாதன் குருபகவானுக்கு பகை கிரகமாக விளங்குபவரும் சுக்ரனே ஆவார். எனவே அப்படிப்பட்ட கிரகம் நீச்சம் பெறும்பொழுது அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பார்கள். எனவே நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல் கின்றார். 2,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் 7-ம் இடத்தில் சஞ்சரிப்பது நன்மைதான். குடும்பச் சுமை குறையும். கொடுக்கல்-வாங்கல்கள் சீராகும். தந்தை வழி உறவில் இருந்து வந்த விரிசல் அகலும். பூர்வீக சொத்துக்களை பாகம் பிரிக்க மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதர சச்சரவுகள் அகலும்.

இம்மாதம் செவ்வாய் தோறும் முருகப்பெருமானையும், வியாழன் தோறும் குருபகவானையும் வழிபாடு செய்யுங்கள். பவுர்ணமி கிரிவலம் வருவதன் மூலம் பலன் அதிகம் கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 24,25, அக்டோபர்: 1,2,7,8,11,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்ச்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். குடும்பச்சுமை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல்கள் ஸ்தம்பித்து நிற்கலாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இணக்கம் ஏற்பட, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் சொல்வதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வழிநடத்துவது உகந்தது. உத்தியோக மாற்றம் உருவாவதை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். திசாபுத்தி வலுவிழந்தவர்களுக்கு நீண்ட தூரத்திற்கு மாறுதல் கிடைக்கலாம். பெற்றோர் வழி ஆதரவு ஓரளவு உண்டு. விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவீர்கள். வியாழன் தோறும் குரு வழிபாட்டையும், பிரதோஷ நேரத்தில் நந்தியெம்பெருமான் வழிபாட்டையும், சிவன் உமையவள் வழிபாட்டையும் மேற்கொண்டால் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

NO COMMENTS

Leave a Reply

%d bloggers like this: