ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் 33வது நாளாக போராட்டம்

0
10
Share on Facebook
Tweet on Twitter

ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில்  அப்பகுதி பொதுமக்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி துவக்கினர். நேற்று 32வது நாளாக நடந்த போராட்டத்தில் சிறுவர்கள், பொதுமக்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பதாகைகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்களத்திற்கு வந்த திரைப்பட இயக்குனர் கவுதமன் கூறுகையில், ‘தமிழகத்தில் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற கனிம வளங்களை எடுக்க ஒருபோதும் விடமாட்டோம்.  ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற கொடிய திட்டங்களுக்கு எதிராக போராடும் மக்களை தடுக்க நினைத்தால் தமிழக மக்கள் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.தமிழக மாணவர்கள் அதிக அளவில் மருத்துவர்களாவதை தடுக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு இடம் வழங்காமல் மற்றவர்களுக்கு இடம் வழங்குவதற்காகவே நீட் தேர்வை நடத்தியுள்ளனர். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்தெரிந்துள்ளனர். மக்கள் வளத்தையும், உரிமையையும் பாதுகாக்க தவறும் எந்த அரசாக இருந்தாலும் அதற்கு சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’என்றார். நெடுவாசலில் 33வது நாளாக இன்றும் பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Source: Dinakaran

Leave a Reply