Aadi Madha Rasipalan | ஆடிராசிபலன்! 16.7.2016 முதல் 16.8.2016 வரை

0
89
Share on Facebook
Tweet on Twitter

ஆடிராசிபலன்! 16.7.2016 முதல் 16.8.2016 வரை

1இந்த மாதத்தில் சற்று சவாலான சூழலை எதிர்கொண்டு வருவீர்கள். நினைத்த காரியம் ஒவ்வொன்றும் சிறிது போராட்டத்திற்கு பின்பு முடிவிற்கு வரும்.  ராசிநாதன் செவ்வாயோடு இணைவினைப் பெற்றிருக்கும் சனி பகவான் உங்கள் பணிகளில் சிறு சிறு இடையூறுகளை உண்டாக்குவார். ஆகஸ்டு மாதத்தின்  துவக்கத்தில் உண்டாகும் கிரக நிலை மாற்றம் நல்ல முன்னேற்றத்தினைத் தரும். குடும்பத்தில் சலசலப்பான சூழல் நிலவி வரும். பொருள் வரவு நிலையில்  சிறிது சுணக்கம் உண்டாகலாம். உடன்பிறந்தோருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய வேண்டியிருக்கும். அடுத்தவர் மனம் கவரும் வகையிலான  பேச்சுக்களை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் சிரமத்தினையும், மாலை நேரத்தில் பயனுள்ள வகையிலும்  அமையும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள். இந்த மாதத்தில் பயன்தரும் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வி நிலையில்  சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.

தகப்பனார் வழி உறவினர்களுடனான சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். வண்டி வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள்  கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். முன்னோர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதினில் இடம்பிடிக்கும். எதிர்கால நலன் கருதி புதியதொரு  சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உண்டு. அலர்ஜியின் காரணமாக உண்டாகும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளால் உடல்நிலையில் சிரமம் தோன்றக்கூடும்.  வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். புதிய நட்புறவு ஒன்றினால் அதிக செலவு களுக்கு ஆளாவீர்கள். கலைத்துறையினரின்  கற்பனைகள் செயல்வடிவம் பெறும். தொழில்முறையில் இருந்து போட்டியான சூழலை சமாளித்து வெற்றி காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் உடன்  பணிபுரிவோருடன் எச்சரிக்கையுடன் பழக வேண்டியது அவசியம். போராட்டத்தினைக் கண்டாலும், வெற்றி பெறும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள் :
ஜூலை 16, ஆகஸ்டு 11, 12, 13 பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.

2ராசிநாதனின் சாதகமான சஞ்சார நிலையினால் இந்த மாதத்தில் உங்கள் மனதினில் மகிழ்ச்சி நிறைந்திருக்கக் காண்பீர்கள். உங்களைச் சுற்றிலும் கலகலப்பான  சூழ்நிலையை உருவாக்கி வைத்திருப்பதில் அதிக அக்கறை கொள்வீர்கள். நினைத்த காரியங்கள் ஏதேனும் ஒரு வகையில் நடந்தேறி வருவதால் மனநிம்மதிக்குக்  குறைவிருக்காது. பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும்படியான வார்த்தைகள் நிறைந்திருக்கும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளும்  வகையில் பொருள் வரவு சிறப்பாக இருந்து வரும். உடன்பிறந்தோரால் கௌரவம் உயரும்படியான சம்பவங்கள் நிகழும். தகவல் தொடர்பு சாதனங்கள் இரவினில்  பயன் தரும் வகையில் அமையும். அவ்வப்போது சிறு சிறு பிரயாணங்களுக்கான வாய்ப்பு உண்டு. ஆகஸ்டு மாதத்தின் துவக்கத்தில் எதிர்பாராத வகையில்  உண்டாகும் தொலைதூரப் பிரயாணத்தின் மூலம் எதிர்காலத்தில் சிறப்பான பலனைக் காண்பீர்கள்.

உறவினர்களின் வழியில் ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். பிள்ளைகளின்  செயல்களில் சிறிது மந்தத்தன்மையை உணரலாம். அவர்களின் செயல்கள் ஒரு சில இழப்புகளைத் தோற்றுவிப்பதோடு அதிகப்படியான செலவினையும் தரக்கூடும்.  ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்  வகையில் செயல்பட்டு வருவார். நெருங்கிய நண்பர் ஒருவருக்கு கடனுதவி செய்ய வேண்டியிருக்கும். தொழில்முறையில் தரகு, கமிஷன் ஆகியவற்றால் அதிக  லாபம் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நேரடியான அணுகுமுறையை கடைபிடித்து வருவது நல்லது. சுயதொழில் செய்வோர் நல்ல  லாபத்தினைக் கண்டு வருவார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்பினைப் பெறுவர். நற்பலனைக் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 17, 18, 19, ஆகஸ்டு 14, 15 வரலட்சுமி விரத நாளன்று சுமங்கலி பூஜை செய்வது நல்லது.

3கிரக நிலை சாதகமாக உள்ளதால் இந்த மாதத்தில் சற்று நிம்மதியான சூழலைக் காண்பீர்கள். ராசிநாதன் புதனின் சாதகமான சஞ்சார நிலை ஏதேனும் ஒரு  வகையில் பொருள் வரவினைத் தோற்றுவிக்கும். குருப்பெயர்ச்சியும் சாதகமாக உள்ளதால் சுகமான வாழ்வியல் நிலைக்குக் குறைவிருக்காது. மனதில் மகிழ்ச்சி  நிலவி வரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கிணங்க புதிய சொத்து ஒன்றினை வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு. தேர்ந்தெடுத்துப் பிரயோகிக்கும்  வார்த்தைகளால் உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாகச் செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் இரவு நேரத்தில்  மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் செயற்கரிய செயல் ஒன்றினைச் செய்து தனிப்பட்ட முறையில் பெயரும், புகழும்  அடைவதற்கான வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உறவினர்களுக்கு உதவி செய்யப்போய் ஒரு சில  தர்மசங்கடங்களை எதிர்கொள்ள நேரிடலாம். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் அமையும். நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளால்  உடல்நிலையில் சிரமத்தினைக் காண நேரிடலாம். வாழ்க்கைத்துணையோடு அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். நண்பர்களின் வழியில் கூடுதல்  செலவினங்களுக்கு ஆளாக நேரிடும். அரசுத் தரப்பு காரியங்களில் இழுபறியினை சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் புதிய முயற்சியில் வெற்றி காண்பர்.  தொழில் முறையில் இருந்து வரும் அலைச்சல் நிலை தொடர்ந்து கொண்டிருக்கும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளோடு நேரடித் தொடர்பில் இருந்து வருவது  நல்லது. நற்பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள் :
ஜூலை 20, 21, ஆகஸ்டு 16 புதன்தோறும் பெருமாளுக்கு துளசிமாலை சாற்றி வழிபடுங்கள்.

4இந்த மாதத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையிலான கிரக அமைப்பு நிலவுகிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்களது  கௌரவத்தினை உயர்த்திக் காட்டும் வகையில் அமையும். விவேகம் நிறைந்த செயல்களால் அடுத்தவர்களிடமிருந்து தனித்துவம் பெறுவீர்கள். இடம், பொருள்  அறிந்து வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் மூலம் நினைத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். ஆகஸ்டு  1ம் தேதி முதல் வரவு நிலை உயரும். புதிதாக சொத்து ஒன்று வந்து சேர்வதற்கான வாய்ப்பும் உண்டு. உடன்பிறந்தோரின் முன்னேற்றத்திற்காக உதவி செய்ய  வேண்டியிருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பழுதாகி சற்று சிரமத்தினைத் தரக்கூடும். முன்பின் தெரியாத நபர்களை நம்பி புதிய முயற்சிகளில்  ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்கள் சார்ந்த செலவினங்கள் அதிகரிக்கலாம். ஜூலை மாதத்தின் இறுதியில் எதிர்பாராத தொலைதூரப்  பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு.

மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் உயர்வினைக் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் வழியில் ஒரு சில செலவுகளை எதிர்கொள்ள  நேரிடும். ஆயினும் அவர்களது செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற் போல் அமைவது கண்டு மன நிம்மதி காண்பீர்கள். நினைத்த காரியத்தில் ஏதேனும்  ஒரு வகையில் வெற்றி கண்டு வரும்போதும் மனதின் மூலையில் ஒருவித குழப்பம் இடம்பிடித்திருப்பதைத் தவிர்க்க இயலாது. வாழ்க்கைத்துணையோடு சிறு  கருத்து வேறுபாடு தோன்றி மறையும். குடும்பப் பெரியவர் ஒருவருடனான சந்திப்பு புதிய உற்சாகத்தைத் தரும். தொழில்முறையில் தங்கள் திட்டங்கள் வெற்றி  பெற்று வருவதை கண்கூடாகக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு ஆடிமாதத்தின் முற்பாதியில் திட்டமிடுதலுக்கும், பிற்பாதியில் செயலில் இறங்குவதற்கும்  காலநேரம் சாதகமாக அமையும். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 22, 23 திங்கள்தோறும் சிவாலயத்தில் அன்னதானம் செய்து வாருங்கள்.

5இந்த ஆடி மாதத்தின் முற்பாதியில் சற்று சிரமத்தினையும், பிற்பாதியில் சாதகமான அம்சத்தினையும் அனுபவிக்க உள்ளீர்கள். ஆகஸ்டு 1ம் தேதி வரை எந்த ஒரு  காரியத்திலும் அவசரப்படாது நிதானத்தினை கடைப்பிடிப்பது நல்லது. நினைத்த காரியத்தை செய்து முடிக்க கடுமையான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும்.  நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கக் கண்டு மனம் வருந்துவீர்கள். ஆகஸ்டு மாதத்தின் துவக்கத்தில் உண்டாகும் கிரக நிலை மாற்றம் உங்கள்  பணிகளை எளிதாக்கும். குறிப்பாக குருப்பெயர்ச்சியினால் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். அதுவரை பேசும் வார்த்தைகளில் வெளிப்படும்  கருத்துக்கள் மற்றவர்களால் தவறாகப் பொருள் காணப்படலாம். குடும்பத்தில் சலசலப்பு நிலவி வரும். பொருள் வரவு நிலையில் ஒரு சில தடைகளைக் காண  நேரிடும். உடன் பிறந்தோர் உதவிகரமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணி நேரத்தினை மிச்சப்படுத்தும் வகையில் உதவிகரமாய்  அமையும்.

பெண் நண்பர்களால் சாதகமான பலன்களைக் கண்டு வருவீர்கள். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில்  நடக்கும் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி முன்னிலை பெறுவார்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில்  அமையும். ஆன்மிகம் பற்றிய சிந்தனைகள் மனதினை அதிகமாக ஆக்கிரமித்திருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்குத் துணை நிற்பார். கௌரவம் கருதி  செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கும் நேரம் இது. கலைத்துறையினர் ஆகஸ்டு முதல் சிறப்பான ஆதாயம் காண்பர். சுயதொழில் செய்வோர், மற்றும்  வியாபாரிகள் சிறப்பான தனலாபத்தினைக் கண்டு வருவார்கள். உத்யோகஸ்தர்கள் தங்களது உண்மையான உழைப்பிற்கான ஆதாயத்தினை அடைவர்.  துவக்கத்தில் சிரமத்தினையும், போகப்போக ஆதாயத்தினையும் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 24, 25 ஆடி அமாவாசை நாளில் முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்யுங்கள்.

6ராசிநாதன் புதனின் சாதகமான அமர்வு நிலை ஆடி மாதத்தின் துவக்கத்தில் சிறப்பான நற்பலன்களை ஏற்படுத்தித் தரும். ஜூலை 24ம் தேதி முதல் எடுத்த  காரியம் எளிதில் முடியாமல் சற்று கூடுதல் அலைச்சலைக் காண்பீர்கள். ஜென்ம ராசியில் வந்து அமர உள்ள குருபகவான் உங்களை நேர்மையான பாதையில்  வழிநடத்திச் செல்வார். ஆகஸ்டு 1ம் தேதி வரை நினைத்த காரியங்கள் ஏதேனும் ஒரு வழியில் வெற்றிகரமாக நடந்தேறும். விவேகமான செய்கைகளின் மூலம்  காரிய வெற்றியை சாத்தியமாக்கிக் கொள்வீர்கள். செலவுகளை சமாளிக்கின்ற வகையில் பொருள் வரவு தொடர்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி  வரும். குடும்ப உறுப்பினர்களின் நீண்ட நாள் விருப்பத்திற்கேற்ப ஆடம்பரப் பொருள் ஒன்றினை வாங்கும் வாய்ப்பு வந்து சேரும். பேசும் வார்த்தைகளில்  நகைச்சுவை உணர்வு வெளிப்படும். உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் தடையாகவும், இரவு  நேரங்களில் சாதகமாகவும் அமைந்திருக்கும்.

உறவினர்களுடனான சந்திப்பின் மூலம் குடும்பப் பாரம்பரிய சம்பிரதாயங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான  முன்னேற்றம் காண்பார்கள். ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் எதிர்பாராத விதமாக தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு வந்து சேரும். வண்டி,  வாகனங்கள் ஆதாயம் தரும் விதமாக அமையும். பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்சனைகள் தோன்றலாம். வழக்கு விவகாரங்கள் இழுபறியைத் தரும். கடன்  பிரச்சனைகள் மீண்டும் தலையெடுக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாகத் துணைநிற்பார். பிள்ளைகளின் செயல்களில் ஒருவித  மந்தத்தன்மையை உணர்வீர்கள். தொழில்முறையில் கூடுதல் அலைச்சலைக் காண்பீர்கள். கலைத்துறையினர் ஜூலை இறுதிவரை தனலாபம் காண்பர்.  சுயதொழில் செய்வோர் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. முயற்சியால் முன்னேறும் மாதமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்
: ஜூலை 26, 27, 28 குலதெய்வ வழிபாடு குடும்பத்திற்கு நன்மை சேர்க்கும்.

7ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சார நிலை இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு நற்பலன்களைப் பெற்றுத் தரும். உழைப்பின் மீதான நம்பிக்கை கூடும். இதுநாள் வரை  இருந்து வந்த மந்தமான மனநிலை மாறி எந்த ஒரு காரியத்தையும் துணிந்து சாதிப்பீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றி எடுத்த காரியத்தை விரைந்து முடித்து  ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்து வரும் சலசலப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் துவங்கும். செலவுகள் கூடினாலும் சமாளிப்பீர்கள். உங்கள்  பேச்சினில் வெளிப்படும் வார்த்தைகள் அடுத்தவர்களால் தவறாகப் பொருள் காணப்பட்டு சிறிது சிரமத்திற்கு ஆளாகலாம். உடன்பிறந்தவர்களோடு லேசான கருத்து  வேறுபாடு உருவாகக் கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது செயலிழந்து காரியத்தடையை உருவாக்கக்கூடும். எந்த ஒரு காரியத்திலும்  இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயலில் இறங்குவது நல்லது. அந்நியப் பெண்களிடம் எச்சரிக்கையோடு பழக வேண்டியது அவசியம்.

குடும்ப விவகாரங்களை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்வது நல்லதல்ல. மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க  வேண்டியிருக்கும். பிள்ளைகளின் செயல்கள் உங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையக்கூடும். அவர்களது வழியில் கூடுதல் செலவினத்தை சந்திக்க  நேரிடலாம். மருத்துவ செலவுகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள்  பணிகளுக்கு பக்கபலமாய்த் துணை நிற்பார். சொத்து விவகாரங்களில் புதிய பிரச்னைகள் முளைக்கலாம். தான தர்ம காரியங்களுக்காக கூடுதலாக செலவழித்து  வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காணும்  நேரம் இது. கலைத்துறையினர் தொழில்முறையில் தனலாபம் காண்பர். நற்பலன்களைத் தரும் மாதமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 29, 30 சனிதோறும் எள்ளுப்பொடி சாதம் நைவேத்யம் செய்து தானம் செய்திடுங்கள்.

8எந்த ஒரு காரியத்திலும் விடா முயற்சியோடு செயல்பட்டு வெற்றி காணும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான பலன்களைத் தரும். எடுத்த  காரியத்தை செய்து முடிப்பதில் தீவிரமாகச் செயல்படுவீர்கள். அரசுத்தரப்பிலிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஒரு சில காரியங்களில்  உடனிருப்போராலேயே எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். எச்சரிக்கை தேவை. பொருள் வரவு நிலை நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.  சுபகாரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு உண்டு. பேசும் வார்த்தைகளில் அவ்வப்போது தத்துவம் நிறைந்த கருத்துக்கள் வெளிப்படக்கூடும். உடன்பிறந்தோரால்  கூடுதல் செலவுகளுக்கு ஆளாக நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் உரிய நேரத்தில் செயலிழந்து சற்று சிரமத்தினைத் தரக்கூடும். எந்த ஒரு காரியத்திலும்  இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். புதிய உறவு ஒன்றினால் நம்பிக்கை துரோகத்தினை சந்திக்க நேரலாம்.

வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள். பிரயாண சுகம் உண்டு. ஆன்மிகப் பயணம் ஒன்றிற்கான வாய்ப்பு உருவாகும். நல்லோர்களின் சந்திப்பின் மூலம்  மனமகிழ்ச்சி காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றத்தினைக் கண்டு வருவார்கள். பிள்ளைகளின் செயல்கள் மனமகிழ்ச்சியைத்  தரும் வகையில் அமையும், அவர்களது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.  பொதுக்காரியங்களில் ஈடுபடும்போது வீண் வம்பு விவகாரங்களில் சிக்க நேரிடலாம். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். சம்பந்தமில்லாத, அர்த்தமற்ற  செலவுகளால் சற்று பொருளிழப்பினை சந்திக்க நேரிடும். தொழில்முறையில் கடும் அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் அதற்குரிய தனலாபத்தினை உடனுக்குடன்  காண்பீர்கள். கலைத்துறையினர் தங்கள் வாய்ப்பினைப் பயன்படுத்தி சாதிப்பர். உண்மையான உழைப்பினால் வெற்றியைக் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 31, ஆகஸ்டு 1 கருமாரியம்மனை வணங்கி வாருங்கள். வெள்ளிதோறும் மாரியம்மன் ஆலயத்தில் எலுமிச்சை சாதம் தானம்  செய்யுங்கள்.

9இந்த மாதத்தில் மனதில் தர்ம சிந்தனைகள் அதிகரிக்கக் காண்பீர்கள். தான, தர்ம காரியங்கள், ஆன்மீக விவகாரங்களில் அதிக நாட்டம் செல்லும்.  சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள், குடும்பப் பெரியோர்களின் கருத்துக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவீர்கள். செயல்களில்  சுறுசுறுப்பு இடம்பிடிக்கும். அதே நேரத்தில் படபடப்பின்றி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சீரான பொருள் வரவு நிலை தொடர்ந்து  கொண்டிருக்கும். மனதில் இருந்து வரும் விடை தெரியாத வினாக்கள் அவ்வப்போது வார்த்தைகளாக வெளிப்படும். உடன்பிறந்தோர் உங்கள் விருப்பங்களை  நிறைவேற்றும் வகையில் செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பொது அறிவினை வளர்த்துக் கொள்ளும் வகையில் மிகுந்த பயனளிக்கும்.  தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்கள் தொழில் முறையில் உதவிகரமாக அமையும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான  முன்னேற்றம் கண்டு வருவார்கள்.

தகப்பனார் வழியில் உறவினர் ஒருவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்ய  நேரிடும். கேளிக்கை, கொண்டாட்டங்கள், உல்லாசப் பயணம் சார்ந்த விவகாரங்களுக்காக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். கடன் கொடுக்கல் வாங்கல்  விவகாரங்களில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். முன்பின் தெரியாத பெண்களுக்கு உதவப்போய் தர்மசங்கடமான சூழலை எதிர்கொள்வதற்கான  வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்சினைகள் தலையெடுக்கலாம். தொழில்முறையில் ஜூலை 24ம் தேதிக்குப் பிறகு சிறப்பான முன்னேற்றம்  கண்டு வருவீர்கள். கலைத்துறையினர் ஆகஸ்டு 1 முதல் புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பர். சுயதொழில் செய்வோர் எதிர்பார்த்த லாபத்தினை அடைவார்கள்.  நற்பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள் : ஆகஸ்டு 2, 3 ஞாயிறுதோறும் சரபேஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.

10இந்த ஆடி மாதத்தின் துவக்கத்தில் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறக் காணும் நீங்கள் பிற்பாதியில் அதிக அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். ஜூலை  மாதம் வரை இருந்து வரும் சாதகமான கிரக சஞ்சார நிலை உங்கள் வெற்றிக்குத் துணை நிற்பதால் செய்ய நினைக்கும் காரியங்களை அதற்குள்ளாக  செயல்படுத்திக் கொள்வது நல்லது. உங்களது செய்கைகளில் சற்று மந்தத்தன்மையை உணர்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையின்  விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவீர்கள். பொருள் வரவு நிலையில் அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல்  தோன்றக்கூடும். பேசும் வார்த்தைகளில் தத்துவம் நிறைந்த கருத்துக்கள் அதிகமாக வெளிப்படும். உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். தகவல்  தொடர்பு சாதனங்கள் ஆதாயம் தரும் வகையில் இருந்து வரும். பிரயாணத்தின்போது உங்கள் உடமைகளில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.

வண்டி, வாகனங்கள் சார்ந்த செலவினங்கள் கூடும். உறவினர்களுக்கு மத்தியில் இருந்து வரும் மனக்கசப்பினை போக்க முயன்று வருவீர்கள். குடும்ப  விவகாரங்களில் பிள்ளைகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க  வேண்டியிருக்கும். ஆடம்பர செலவுகள் சற்று அதிகரிக்கக் கூடும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை  சந்திக்க நேரிடும். சுயதொழில் செய்வோர் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைய சிறிது காலம்  காத்திருக்க நேரலாம். நெடுநாளைய விருப்பம் ஒன்று நிறைவேறும் நேரம் இது. சரிசம பலன்களைத் தரும் மாதமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள் :
ஆகஸ்டு 4, 5 பௌர்ணமி நாளில் அம்பிகையை சிறப்பு ஆராதனை செய்து வழிபடுவது நல்லது.

11ராசிநாதன் சனி பகவானோடு செவ்வாயின் இணைவு மனோ தைரியத்தை அதிகரிக்கச் செய்யும். கேதுவின் இணைவினால் மனதின் மூலையில் ஒருவித குழப்பம்  இடம் பிடித்திருந்தாலும் செயலில் இறங்கும்போது மன உறுதியுடன் செயல்பட்டு வருவீர்கள். பிரச்னைகள் பல இருந்தாலும், தற்காலிகமாக சற்று விடுபட்டு  இருப்பதைப் போன்று உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்குப் பக்கபலமாகத் துணை நின்று வருவார்கள். உடன்பிறந்தோரோடு இணைந்து செயல்படும்  விவகாரங்களில் நல்ல வெற்றியினைக் காண்பீர்கள். பொருள் வரவு நிலை சீராக இருந்து வரும். நிலுவையில் இருந்து வரும் வரவேண்டிய பாக்கித்தொகைகள்  வசூலாகும். பேச்சினில் வெளிப்படும் வார்த்தைகள் அடுத்தவர்களால் தவறாகப் பொருள் காணப்படலாம். தகவல் தொடர்பு சாதனங்கள் பயன் தரும் வகையில்  அமையும். முக்கியமான பணிகளுக்கு அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும்.

வீட்டு உபயோகம் சார்ந்த ஆடம்பரப் பொருட்களை வாங்க கால நேரம் சாதகமாக அமையும். சிரமமமான சூழலிலும் வாழ்வியல் சுகத்திற்குக் குறைவிருக்காது.  மாதத்தின் முற்பாதியில் உறவினர்களுடன் இணைந்து குலதெய்வ வழிபாடு செய்வதற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்களின் கல்வித்தரம் சிறப்பாக இருந்து வரும்.  வண்டி, வாகனங்களை புதிதாக வாங்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஆடி மாதத்தின் பிற்பாதியில் வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக  எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்திருப்பது போல் தோன்றினாலும் அவர்களால்  உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். ஆகஸ்டு மாதத்தின் இரண்டாம் வாரத்தில் உடல்நிலையில் சிறிது சிரமத்தினைக் காண நேரிடலாம். கலைத்துறையினர்  தொழில்முறையில் போட்டியான சூழலைக் காண்பர். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமையை எதிர்கொள்வர். சரிசம பலன்களைக் காணும்  மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள் : ஆகஸ்டு 6, 7, 8 வியாழன்தோறும் சாயிபாபா ஆலயத்தில் அன்னதானம் செய்யுங்கள்.

12ராசிநாதன் குரு பகவானின் நிலை பல்வேறு சோதனைகளை தந்து கொண்டிருக்கும். ஆயினும் ஆகஸ்டு 2ம் தேதி அன்று நிகழ உள்ள குருப்பெயர்ச்சி சாதகமாக  உள்ளதால் அதுவரை சற்று நிதானமாக செயல்பட்டு வாருங்கள். சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றிக் கொள்வீர்கள். ஒவ்வொரு செயலில் இருந்தும்  அனுபவப் பாடம் ஒன்றினை கற்றுக் கொண்டிருப்பதால் உங்கள் வெற்றிக்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது. மனதின் ஓரத்தில் ஒரு வித விரக்தியான  எண்ணம் குடி கொண்டிருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது கடமையைச் செய்து வருவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவி வரும். பொருள் வரவு  சீராக இருந்து வரும். அவசரப்பட்டு வாக்குறுதி அளித்து பின்பு சிரமப்படுவதைத் தவிர்க்க நிதானித்துப் பேசுவது நல்லது. உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு  வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணி நேரத்தினை மிச்சப்படுத்தும் வகையில் பயன் தரும்.

ஒரு சில விவகாரங்களில் இடைத்தரகர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறக்கூடும். மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண சிரமப்பட்டு உழைக்க  வேண்டியிருக்கும். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். அதே நேரத்தில் வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை.  வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கௌரவம் கருதி செய்ய வேண்டிய ஆடம்பரச் செலவுகள் அதிகரித்திருப்பதாக எண்ணி மனம்  வருந்துவீர்கள். குடும்பப் பெரியவர் ஒருவருடனான சந்திப்பு மனதிற்கு நிம்மதியைத் தரும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கண்டு வருவீர்கள்.  உத்யோகஸ்தர்கள் கீழ்நிலைப் பணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். கலைத்துறையினர் போட்டியான சூழலை சமாளிக்க  வேண்டியிருக்கும். துவக்கத்தில் சற்று சிரமத்தினைக் கண்டாலும் இறுதியில் நன்மை தரும் மாதமே.

சந்திராஷ்டம நாட்கள் : ஆகஸ்டு 9, 10 குருப்பெயர்ச்சி நாளன்று அருகிலுள்ள ஆலயத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY