Aavani Madha Rasipalan | ஆவணி ராசிபலன்! 17.8.2016 முதல் 16.9.2016 வரை

0
193
Share on Facebook
Tweet on Twitter
astrology forecast | ராசிபலன்

ஆவணி ராசிபலன்! 17.8.2016  முதல் 16.9.2016 வரை

1ராசிநாதன் செவ்வாயின் 8ம் இடத்துச் சஞ்சாரம் தொடரும் நிலையில் இந்த மாதத்தினைத் துவக்கவுள்ள நீங்கள் எடுத்த காரியத்தை செய்து முடிக்க கூடுதல் அலைச்சலைக் காண்பீர்கள். ராசிநாதன் செவ்வாயோடு இணைவினைப் பெற்றுள்ள சனி பகவான் மேலும் ஒரு சில இடைஞ்சல்களைத் தோற்றுவிப்பார். ஆயினும் வரவு நிலையில் குறை இல்லாததால் கவலை கொள்ளத் தேவையில்லை. ஐந்தாம் பாவத்தில் வலிமையுடன் அமர்ந்திருக்கும் கிரஹங்களினால் எந்தச் சூழலிலும் மனம் தளராது செயல்படும் உத்வேகத்தினைப் பெற்றிருப்பீர்கள். தோல்வியையும் வெற்றியாக மாற்றிக் கொள்ளும் கலையை அறிந்திருக்கும் நீங்கள் எளிதில் துவண்டுவிடாமல் விடாமுயற்சியுடன் செயல்பட்டு எவ்வகையிலேனும் நினைத்த காரியத்தை செய்து முடித்து நற்பெயர் காண்பீர்கள்.

உடன்பிறந்தோரால் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்களால் செலவுகள் அதிகரிக்கும். முன்பின் தெரியாத நபர்களை நம்பி புதிய முயற்சியில் ஈடுபடுதல் கூடாது. வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கலாம். இந்த மாதத்தில் அநாவசியமான பயணங்களை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்கள் மனவருத்தத்தினைத் தரக்கூடும். கலைத்துறையினருக்கு ஆவணி மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் சாதகமான பலனைத் தரும். விடாமுயற்சியால் வெற்றி காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 8, 9.

பரிகாரம்:
சங்கடஹரசதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வணங்கி வாருங்கள்.

2இந்த மாதத்திய கிரக நிலையை ஆராயும்போது உங்கள் பணிகளை செய்து முடிக்க சுயமுயற்சி என்பது அவசியமாகிறது. அதிர்ஷ்டத்தினை நம்பியிராது தன்முயற்சியினால் மட்டுமே காரியத்தினை சாதிக்க வேண்டியிருக்கும். மனதில் புத்துணர்ச்சியான எண்ணங்கள் ஊற்றெடுக்கும். இதனால் முழுமுயற்சியை வெளிப்படுத்துவதுடன் முகமலர்ச்சியோடு செயல்பட்டு வருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். தனாதிபதியின் சாதகமான அமர்வு நிலை பொருளாதார நிலையை கணிசமாக உயர்த்தும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் பாக்கித்தொகை ஒன்று இந்த மாதத்தில் வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான மரத்தாலான ஃபர்னிச்சர் சாமான்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு. உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். மாணவர்களின் கல்வி நிலை உயர்வடைவதோடு விளையாட்டுக்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும்.

தகப்பனார் வழி உறவினர்களோடு இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலைவாய்ப்பு தேடி வரும் இளைஞர்கள் சாதகமான நேரத்தினைக் காண்பார்கள். பிள்ளைகளின் செயல்பாடுகளில் இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்போடு செயல்படுவதைக் கண்டு ஆனந்தம் கொள்வீர்கள். குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. மருத்துவச் செலவுகள் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டென்பதால் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நண்பர்களோடு அற்ப விஷயங்களுக்காக கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். பூர்வீகச் சொத்துகளில் பாகப் பிரிவினை சார்ந்த பேச்சுக்கள் எழலாம். தொழில் முறையில் போட்டியான சூழல் உருவாகக் காண்பீர்கள். கலைத்துறையினர் தங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கக் காண்பர். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:
செப்டம்பர் 10, 11.

பரிகாரம்:
இரண்டு பௌர்ணமியிலும் சத்யநாராயண விரதம் மேற்கொள்வது நல்லது.

3தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராசிநாதன் புத பகவானின் துணையுடன் இந்த மாதத்தில் செயற்கரிய செயல்களைச் செய்து சுற்றியுள்ளவர்களை பிரமிப்பிற்குள்ளாக்குவீர்கள். மற்றவர்கள் அசரும்படியான காரியங்களை திறம்படச் செய்து முடிப்பதன் மூலம் தனிப்பட்ட முறையில் உங்களது கௌரவம் உயர்வடையும். சுற்றி நடக்கும் பிரச்னைகளில் தலையிட்டு சுமுக தீர்வு காண முற்படுவீர்கள். தன காரகன் சுக்கிரனால் இந்த மாதத்தில் வரவு நிலை கூடினாலும், ஆடம்பர செலவுகள் அதிகரிக்கலாம். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. கேளிக்கை, கொண்டாட்டங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடும். ஆயினும் எதைப்பற்றியும் கவலைப்படாது சதா முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும்.

பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை நிறைந்த கருத்துகள் அதிகமாக வெளிப்படும். உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் இரவு நேரத்தில் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். மாணவர்கள் கல்விநிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றும் முயற்சிகள் மாதத்தின் பிற்பாதியில் வெற்றி பெறும்.  ஆகஸ்ட் 26ம் தேதிக்குப் பிறகு அனுகூலம் தரும் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் அமையும். சதா ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டு இருப்பதால் உடல்நிலையில் களைப்பான சூழலை உணர நேரிடலாம். தொழில் முறையில் அலைச்சல் அதிகரிக்கக் கூடும். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடலாம். கலைத்துறையினர் பாராட்டு பெறுவர். மனதில் மகிழ்ச்சி நிலவி வரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 17, செப்டம்பர் 12, 13, 14.

பரிகாரம்: திருவோண நட்சத்திர நாள் அன்று விரதம் இருந்து பெருமாளை சேவிக்கவும்.

4இந்த மாதத்தில் தனஸ்தானத்தில் இடம்பெற்றுள்ள வலிமையான கிரஹங்களின் இணைவு நிலை உங்கள் ராசிக்கு நற்பலன்களைத் தரத் துவங்கும். ஆவணி மாதத்தின் துவக்கம் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும். குரு பகவானின் பெயர்ச்சி சாதகமாக இல்லையென்றாலும் சுக்கிரனின் அருளால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். உண்மையாக உழைத்து வந்ததற்கான பலனை அனுபவிக்கத் துவங்குவீர்கள். பொதுக்காரியங்களில் முன் நின்று செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். அடுத்தவர்களின் பணிகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு செய்து முடிப்பீர்கள். முக்கியமான பிரச்னைகளில் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் சிறப்பான நற்பெயரை அடைவீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும்படியான கருத்துகள் அதிகமாக இடம்பிடிக்கும்.

உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பெரிதும் துணையாய் அமையும். மாணவர்களின் கல்வி நிலை குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காணும். பொறியியல் துறை மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ போன்றவற்றில் தேர்ச்சி காண்பார்கள். வாழ்க்கைத்துணை உங்கள் எண்ணத்தினை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வருவார். நண்பர்களால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கக் கூடும். பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். தொழில் முறையில் உண்மையான உழைப்பின் மூலம் உயர்வடைவீர்கள். சுயதொழில் செய்வோர் லாபத்தில் சற்று விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட கால நேரம் துணை நிற்கும். சிறப்பான நற்பலன்களை அனுபவிக்கத் துவங்கும் மாதமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்: 
ஆகஸ்ட் 18, 19, செப்டம்பர் 15, 16.

பரிகாரம்: வெள்ளியன்று கோபூஜை செய்து வழிபடவும்.

5சாதகமான கிரக நிலையோடு இந்த மாதத்தினைத் துவக்க உள்ளீர்கள். ராசிநாதனின் ஆட்சி பெற்ற நிலை இந்த மாதத்தில் உங்கள் செயல்திறனைக் கூட்டும். எந்த ஒரு விஷயத்தையும் செய்து முடிக்கும் வரை ஓய்வில்லாமல் செயல்பட்டு வருவீர்கள். வேகத்தோடு விவேகமும் இணைந்திருப்பதால் காரிய வெற்றி என்பது கட்டாயம் சாத்தியமாகி வரும். முற்பகலில் செய்யும் காரியங்களுக்கு பிற்பகலில் பலன்களை அனுபவிக்க உள்ளீர்கள். ஆகஸ்ட் 26ம் தேதி முதல் பொருள் வரவு கூடும். குரு சுக்கிரனின் தனஸ்தான சஞ்சாரம் பொருள் சேமிப்பிற்குத் துணை நிற்கும். ஏதோ ஒரு காரணத்தால் தடைபட்டிருந்த பாக்கி தொகைகள் விரைவில் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். லாவகமான பேச்சுகளில் கண்டிப்பும் வெளிப்படுவதால் உங்களின் வார்த்தைகளை அடுத்தவர்கள் கேட்டு நடக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள். உடன் பிறந்தோருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய வேண்டியிருக்கும்.

தகவல் தொடர்பில் ஒரு சில இடையூறுகளை சந்திக்க நேரலாம். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு கூடும். பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாகும் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் தங்கள் எழுத்துத்திறமையின் மூலம் வகுப்பினில் தனித்துவம் கண்டு வருவார்கள். உறவினர்களின் வாயிலாக ஒரு சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் சிந்தனைகளும், கருத்துகளும் சில நேரத்தில் விமர்சனத்திற்கு உள்ளானாலும் நல்லோர்தம் சபைதனில் சிறப்பான வரவேற்பினைப் பெறும். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். ஆன்மிகப் பெரியவர்களுடனான சந்திப்பு மனதிற்கு நிம்மதியைப் பெற்றுத் தரும். பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினர் நல்ல தனலாபம் கண்டுவருவர். தொழில் முறையில் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருந்தாலும் முழு மனதுடன் பணியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:
ஆகஸ்ட் 20, 21, 22.

பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுங்கள்.

6ராசிநாதன் புதன் பகவான் 12ம் இடத்தில் அமர்வினைப் பெற்றுள்ளதால் அநாவசியமான அலைச்சலை சந்திக்க நேரிடலாம். எந்த ஒரு காரியத்தினையும் செய்து முடிக்க சராசரிக்கும் சற்று கூடுதலாக சிரமப்பட வேண்டியிருக்கும். ஆகஸ்ட் 26ம் தேதி முதல் ஜென்ம ராசியில் குருவோடு சுக்கிரன் இணைவது  உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தினைத் தரும் வகையில் அமைந்துள்ளது. உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த இடைஞ்சல்கள் முற்றிலுமாக அகலும். பொருள் வரவு நிலை அதிகரித்தாலும் அதற்கேற்ற வகையில் செலவுகளும் வரிசையில் காத்து நிற்கும். குடும்பத்தில் கலகலப்பும் சலசலப்பும் கலந்திருக்கும். முக்கியமான பிரச்னைகளில் விவாதம் செய்வதால் தீர்வு கிடைக்காது என்பதை உணர்ந்துகொண்டு அதிகம் பேசாது அமைதி காத்து வருவீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள்.

தகவல் தொடர்பு சாதனங்கள் நன்மையைத் தரும் வகையில் அமையும். மாணவர்கள் தங்கள் நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள். ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் ஆதாயம் தரும் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு.  நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த சொத்துகள் சார்ந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். கடன் பிரச்னைகள் முற்றிலுமாகக் குறைந்திருக்கும். கடுமையான அலைச்சல் உடல்நிலையில் அசதியைத் தோற்றுவிக்கக் கூடும். வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். அதிகரித்து வரும் கௌரவச் செலவுகள் மனதில் வருத்தத்தினை உண்டாக்கும். ஆன்மிக ரீதியான ஈடுபாடுகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்பு வந்து சேரும். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். கனவுத் தொல்லைகளால் நிம்மதியான உறக்கம் கெடலாம். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:
ஆகஸ்ட் 23, 24.

பரிகாரம்:
ஆஞ்சநேயரை வழிபட்டு வர மனவலிமை கூடும்.

7ஜெய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரனின் அனுக்ரஹத்தால், மனதில் இருக்கும் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இந்த மாதத்தில் கால நேரம் உங்களுக்கு துணைபுரியும். ஜெய ஸ்தான சுக்கிரன் மன மகிழ்ச்சியைத் தருவதோடு, காரிய வெற்றியையும் பெற்றுத் தருவார். ஆடம்பரப் பொருட்களின் மேல் நாட்டம் செல்வதைத் தவிர்க்க இயலாது. தனாதிபதியின் ஆட்சி நிலை சிறப்பான பொருள் வரவினைப் பெற்றுத் தந்தாலும், செலவுகளும் அதற்கேற்ற வகையில் வரிசையாக காத்து நிற்கும். செப்டம்பர் 9ம் தேதிக்குப் பிறகு செலவுகள் குறைந்து சேமிப்பு கூடும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். விவேகமான பேச்சுகளினால் கௌரவம் அடைவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் நேரத்தில் செயலிழந்து இடைஞ்சலைத் தந்தாலும், மாலை நேரத்தில் சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமையும். உங்களின் எந்த ஒரு பணிக்கும் இடைத்தரகர்களை நம்பாது தனக்குத்தானே செயல்பட்டு வருவது நன்மையைத் தரும்.

மாதத்தின் பிற்பாதியில் தைரியமும், விவேகமும் நிறைந்த செயல்களால் மற்றவர்களை ஆச்சரியத்தில் திகைக்கச் செய்வீர்கள். ஆகஸ்ட் 26ம் தேதிக்குப் பிறகு செயல்களில் எச்சரிக்கை தேவை. எல்லாம் சரியாக இருந்தும் ஏதோ ஒரு காரணத்தினால் காரியம் தடைபடும் வாய்ப்பு உண்டு. மந்த கதியில் இருந்த காரியங்கள் செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் இருந்து விரைவாக நடைபெறத் துவங்கும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறிது சுணக்கத்தினைக் காண நேரிடலாம். உறவினர்களால் ஒரு சில கலகங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்தாலும், சாதகமான பலன்களைத் தரும். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்குத் துணை நின்று வருவீர்கள். கலைத்துறையினர் அதிக அலைச்சலுக்கு ஆளாவர். தொழில்முறையில் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் லாபம் காண்பார்கள். மொத்தத்தில் நன்மை தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள் : ஆகஸ்ட் 25, 26.

பரிகாரம்:
கிருத்திகை விரதமும் கந்தனின் வழிபாடும் கவலை தீர்க்கும்.

8ராசிநாதன் செவ்வாயின் சஞ்சார நிலை இந்த மாதத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. ஆயினும் உங்கள் பணிகளை செய்து முடிக்க மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். தனது திறமையைக் கொண்டு அடுத்தவர்களை வேலை வாங்கி காரியத்தினை சாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும். ராசிநாதன் செவ்வாய் தொடர்ந்து சனியின் இணைவினைப் பெறுவதால் வேகமாக நடைபெற்று வந்த காரியங்களில் சிறிது தாமதத்தினை சந்திக்க நேரிடும். ஆயினும் அவ்வகையில் உண்டாகும் தாமதமும் உங்களுக்கு சாதகமான பலனைத் தரும் வகையிலேயே அமையும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. தனாதிபதியின் துணையினால் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும்படியான கருத்துகள் அதிகமாக இடம்பிடிக்கும்.

உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. ஆகஸ்ட் 26ம் தேதியில் இருந்து கடன் பிரச்னைகள் தலையெடுக்கக் கூடும். முன்பின் தெரியாத மனிதர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்குவதைத் தவிர்க்கவும். மாணவர்களுக்கும், வேலைவாய்ப்பு தேடி அலைவோருக்கும் கால நேரம் சாதகமாக இருந்து வரும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்திற்குத் தேவையான புதிய ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக நாட்டம் செல்லும். பிள்ளைகளின் செயல்கள் பெருமை தரும் வகையில் அமையும். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் பிள்ளைகளின் உடல்நிலையில் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கூட்டுத்தொழிலில் லாபம் கண்டு வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் ஒருவித மந்தத்தன்மையை உணர்ந்து வருவார்கள். கலைத்துறையினர் செப்டம்பரில் திருப்புமுனை காண்பர். சாதகமான பலன்களைத் தரும் மாதமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள் :
ஆகஸ்ட் 27, 28.

பரிகாரம்: கோகுலாஷ்டமி நாளில் கற்கண்டு பால்சாதம் தானம் செய்யுங்கள்.

9

உண்மையாக உழைத்து வருவதன் மூலம் இந்த மாதத்தில் உங்களை மற்றவர்களுக்கு அடையாளம் காட்ட முற்படுவீர்கள். ராசிநாதன் குரு பகவானின் 10ம் இடத்து அமர்வு நிலை வாழ்வியல் தரத்தினில் முன்னேற்றத்தினைத் தரும். குரு பகவானின் பார்வை பலம் இல்லாத நிலையில் ஏழரைச் சனி தனது தாக்கத்தினை உங்கள் மீது செலுத்துவார். சனி, செவ்வாய் ஆகியோரின் இணைவு மனதினில் பலவிதமான எண்ணங்களைத் தோற்றுவித்தாலும், அவசரப்படாமல் நிதானித்து செயல்படுவதன் மூலம் மட்டுமே வெற்றியை சாத்தியமாக்கிக் கொள்ள இயலும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆவணி மாதத்தின் துவக்கத்தில் எண்ணிய காரியங்கள் எளிதில் நடந்தேறக் காணும் அதே நேரத்தில் பிற்பாதியில் காரியத்தடையினை சந்திக்க நேரிடலாம். மனதில் இருந்து வரும் கோபதாபங்கள் பேசும் வார்த்தைகளில் வெளிப்பட்டு உங்களுக்கு அவப்பெயரைத் தோற்றுவிக்கக் கூடும். குடும்பத்தில் சிறு சலசலப்புகள் தொடர்ந்து இருந்து வரும். பொருளாதார நிலை நல்ல முன்னேற்றத்தினைக் கண்டு வரும்.

பொருள்வரவினை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு சேமிப்பில் ஈடுபடுவது எதிர்காலத்திற்கு நன்மை தரும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு உண்டாகக் கூடும். தகவல் தொடர்பு சாதனங்களால் இழப்பினை சந்திக்க நேரலாம். பிள்ளைகளோடு கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. சிந்தனையில் சிறிது குழப்பம் இருந்து வருவதால் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு குணத்தினை வெளிப்படுத்தி அடுத்தவர்களால் உங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாத நிலையைத் தோற்றுவிப்பீர்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்குத் துணை நிற்பார். பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினை பற்றிய பேச்சுகள் எழலாம். தொழில் முறையில் உங்கள் உழைப்பின் அருமையை மற்றவர்களுக்குப் புரிய வைப்பீர்கள். கலைத்துறையினர் தொழில் முறையில் புதிய வாய்ப்பினைப் பெறுவர். உழைப்பால் உயர்வடையும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 29, 30.

பரிகாரம்:
வியாழன்தோறும் ஸ்கந்தகுரு கவசம் படித்து வாருங்கள்.

10ராசிநாதன் சனி பகவானின் பார்வை பலம் தொடர்வதால் இந்த மாதத்தில் அனுகூலமான பலன்களை எதிர்கொள்ள உள்ளீர்கள். ராசிநாதனின் சஞ்சாரமும், ஒன்பதாம் இடத்தில் குருபகவானின் அமர்வும் தர்ம சிந்தனைகளை மனதில் அதிகரிக்கச் செய்யும். பொதுக்காரியங்களில் முன் நின்று செயல்பட வேண்டிய சூழலை உருவாக்கும். பிடிவாதக்காரர்களாகிய நீங்கள் இந்த மாதத்தில் சற்று விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையைக் கொண்டிருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவெடுக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். பொருள் வரவு சீராக இருந்துவரும். பேசும் வார்த்தைகளில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும்படியான கருத்துகள் அதிகமாக இடம்பிடிக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் சற்று சிரமத்தினைத் தரும் வகையில் அவ்வப்போது பழுதாகி நிற்கும்.

வண்டி, வாகனங்களால் ஆதாயம் கிட்டும் நேரத்தில் அவற்றின் பராமரிப்பு செலவு அதிகரிக்கக் கூடும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருந்து வரும். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் உறவினர்களோடு மனஸ்தாபம் தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சற்று சிரமத்தினைக் காண்பார்கள். பிள்ளைகளால் ஒரு சில விவகாரங்களில் கூடுதல் செலவினை சந்திக்க நேரலாம். சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்டபிரச்னைகளால் உடல்நிலையில் சிரமம் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் உயரும். தொழில் முறையில் சிறப்பான செயல்பாடுகள் உங்களை தனித்துக் காட்டும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் மனஸ்தாபம் கொள்ள நேரிடும். கலைத்துறையினர் தங்கள் முயற்சியில் வெற்றி காண அதிக அலைச்சலைக் காண்பர். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:
ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1, 2.

பரிகாரம்: சனிதோறும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

11

ஜென்ம ராசியில் கேதுவின் இணைவினைப் பெற்றுள்ளது ஒருபுறம், அஷ்டம ஸ்தானத்தில் குருவின் அமர்வு ஒருபுறம் என சிரமமான சூழல் உண்டானாலும், பொறுமையாக செயல்பட்டு வந்தீர்களேயானால் பிரச்னை ஏதுமின்றி நிம்மதி காண இயலும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏழாம் பாவத்தில் வலிமையான கிரஹங்களின் சஞ்சாரம் ஓரளவிற்கு முன்னேற்றத்தினைத் தரும். இக்கட்டான சூழலில் எவர் மூலமேனும் உதவி கிடைக்கக் காண்பீர்கள். உடல்நிலை மற்றும் மன நிலை இரண்டையும் ஒரே சீராக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு சில விவகாரங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உருவாகக் கூடும். பொருளாதார நிலையில் சிறிது சுணக்கம் காண நேரிடும். அநாவசிய செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு கரையக்கூடும். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவியாகத் துணை நிற்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு சாதனங்களாக பயன்படும்.

உறவினர்கள் வழியில் ஒரு சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை. மாணவர்கள் தேர்வு நேரத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும். பிள்ளைகளின் செயல்கள் மனமகிழ்ச்சி தரும் வகையில் அமையும். உடல்நிலையில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடன் கொடுக்கல், வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பயனற்ற செலவுகளால் சற்று திக்குமுக்காடிப் போவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் புதிய பிரச்னைகள் முளைக்கலாம். தொழில் முறையில் மந்தமான சூழல் அகன்று பரபரப்பாக செயல்படுவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் கூடுதல் சுமையினை காண நேரிடும். கலைத்துறையினர் நண்பர்களின் துணையுடன் முன்னேற்றம் காண்பர். மன உறுதியுடன் செயல்பட்டு சமாளிக்க வேண்டிய மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 3, 4.

பரிகாரம்: சனி தோறும் நரசிம்மரை வணங்கி வாருங்கள்.

12குரு பகவானை ராசிநாதனாகக் கொண்டிருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் சற்று சாதகமான கிரக சூழல் நிலவுகிறது. பிரச்சினையைத் தரும் ஆறாம் பாவத்தில் வலிமையான கோள்கள் அமர்ந்திருந்தாலும் கூட குரு பகவானின் பார்வை பலத்தினால் நன்மை கண்டு வருவீர்கள். ஏதோ ஒரு காரணத்தினால் தடைபட்டிருந்த பொருள் வரவு தடை நீங்கி மீண்டும் வரத்துவங்கும். பொருளாதார நிலை உயர்வடைவதோடு சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் உருவாகும். புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். அதிகம் பேசுவதை விட அர்த்தத்தோடு பேசுவதன் அவசியத்தை உணர்வது நல்லது. முன்பின் தெரியாத நபர்களிடம் அதிகம் பேசாது அமைதி காக்க வேண்டியது அவசியம். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில் முறையில் மிகுந்த பயனைத் தரும். புதிய நண்பர்களின் சேர்க்கை மனதிற்கு நிம்மதியைத் தரும்.

மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் சிறப்பான வெற்றியினைக் கண்டு வருவார்கள். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் வெளியூர் பயணத்திற்கான வாய்ப்பு உண்டு. வீட்டிற்குத் தேவையான ஃபர்னிச்சர் சாமான்கள் வாங்குவதில் செலவுகள் அதிகரிக்கும். சிறிது நாட்களாக மனதில் இருந்து வந்த குழப்பமான நிலை மாறி தெளிவான சிந்தனையோடு செயல்பட்டு வருவீர்கள். வாழ்க்கைத்துணையின் நெடுநாளைய விருப்பத்தினை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் துணை தக்க சமயத்தில் கைகொடுக்கும். பூர்வீகச் சொத்துகள் ஆதாயம் தரும் வகையில் அமையும். பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். தொழில் முறையில் வளைந்து கொடுக்க வேண்டிய நேரத்தில் வளைந்தும், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரத்தில் நிமிர்ந்தும் செயல்பட்டு வெற்றி கண்டு வருவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை உங்கள் கௌரவத்தினை உயர்த்தும். நற்பலன்களைக் காணும் நேரம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:
செப்டம்பர் 5, 6, 7.

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து வாருங்கள்.

  • TAGS
  • Tamil Month Rasipalan
SHARE
Facebook
Twitter
Previous articleTamil General Knowledge Questions And Answers 131
Next articleஇந்த வார ராசிபலன் 18-08-2016 முதல் 24-08-2016 வரை | Weekly astrology forecast

Leave a Reply