
மதுரை : கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பி.அன்புநாதன். அதிமுக முக்கிய பிரமுகர். இவருக்கு சொந்தமான குடோன் மற்றும் வீட்டில் கடந்த ஆண்டு, ஏப்.22ல் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், ரூ.4 கோடியே 87 லட்சத்து 33 ஆயிரத்து 820 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டு செல்ல ஆம்புலன்சில் அரசு முத்திரையை பயன்படுத்தியதாக பறக்கும் படையினர் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இதேபோல், வருமான வரி சட்டப்படி மண்மங்கலம் தாசில்தாரும் புகார் அளித்தார். இந்த இரு புகார்களின் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் போலீசார், அன்புநாதன் மீது தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளிலும் அன்புநாதன் ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.இதனிடையே தன் மீதான இருவழக்குகளையும் ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ெசய்திருந்தார். அதில், ஒரே குற்றச்சாட்டிற்காக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானவரி சட்டத்தின் கீழ் தாசில்தார் புகார் தர முடியாது என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ‘‘ஆம்புலன்சில் இந்திய அரசு முத்திரையை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழான வழக்கின் விசாரணையை அன்புநாதன் சந்திக்க வேண்டும். எனவே, அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. போலீசார் 6 மாதத்திற்குள் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார். மேலும், வருமான வரி சட்டத்தின் கீழான வழக்கில் வருமான வரித்துறையினர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 19க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
Source: Dinakaran