மேட்டுப்பாளையம் அருகே குடிமராமத்துப்பணி வண்டல் மண் எடுத்து விற்பனை : தடுக்க விவசாயிகள் கோரிக்கை

0
35
Share on Facebook
Tweet on Twitter

மேட்டுப்பாளையம்:  பவானிசாகர் அணை நீர்தேக்கப்பகுதியில், அள்ளப்படும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்காமல் ரூ. 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுத்துநிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அணை, ஏரி, குளங்களை தூர்வாரும் வகையில் அதில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி அனைத்து குளம், ஏரி, அணை மற்றும் நீர்த்தேக்கப்பகுதிகளில் வண்டல் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி தூர்வாரப்படுகிறது. சிறுமுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்தொழில் முக்கிய பங்கு வசிப்பதால், தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் நீர்த்தேக்கப்பகுதியில் இருந்து வண்டல் மண்ணை எடுத்துச்செல்கின்றனர். இதற்காக சிறுமுகை அருகே  புதுக்காடு, சித்தன் குட்டை ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து அங்கு விவசாயிகளுக்கு டோக்கன் கொடுத்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. பவானிசாகர் நீக்க பகுதி பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு, வண்டல் மண் டிப்பர் லாரிகளில் அனுப்படுகிறது. இதற்கு பொதுப்பணித்துறையினர் ஏற்றுக் கூலியாக ஒரு யூனிட்டுக்கு ரூ. 106 வசூல் செய்கின்றனர். இது போக வண்டல் மண் ஒரு லோடு ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய வண்டல் மண்ணை யாரோ இடைத்தரகர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனை பொதுப்பணித்துறையினர்கள் கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. சிறுமுகை பகுதியை சேர்ந்த விவசாயி துரைசாமி கூறியதாவது:  “பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், வண்டல் மண்ணை டிப்பர் லாரியில் ஏற்றுவதற்கு ஏற்றுக் கூலி தான் வாங்குகிறோம். இதுதவிர எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுகின்றனர். அரசு இலவசமாக வழங்க வேண்டிய  வண்டல் மண்ணை இடைத்தரகர்கள் விற்பனை செய்து பகல் கொள்ளை அடிக்கின்றனர். கடும் வறட்சியில் சிக்கி தவிக்கும் ஏழை, எளிய விவசாயிகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய வண்டல் மண் ஒரு லோடு ரூ.800 க்கு விற்பனை செய்கின்றனர். இதில் அரசு உடனடியாகத் தலையிட்டு, வண்டல் மண் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்”. இவ்வாறு விசாயி துரைசாமி கூறினார்.

Source: Dinakaran

Leave a Reply