வருசநாடு: கடமலைக்குண்டு பகுதியில் பட்டப்பகலிலேயே மரங்களை வெட்டி டிராக்டரில் கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் இதனை ஏனோ கண்டுகொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனையும் தெரிவித்துள்ளனர். கடமலைமயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வருசநாடு, மேகமலை, கண்டமனூர் ஆகிய மூன்று சரகங்களாக பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கடமலைக்குண்டு பகுதியில் மரம் கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த மரக்கடத்தில் தற்போது பகல் நேரங்களிலும் அதிக அளவில் நடைபெறுகிறது. வனத்துறை அதிகாரிகள் இதுபோன்ற மரக்கடத்தல்களை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் கடமலைக்குண்டு கிராமத்தில் வனத்துறை சோதனைசாவடி அமைந்துள்ளது. இரவு நேரங்களில் இந்த சோதனை சாவடி வழியாகவே மரங்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வருகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலைக்குண்டு பகுதியில் நடைபெறும் மரக்கடத்தல்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: Dinakaran