சிவகங்கை: காளையார்கோவில் அருகே நாட்டாற்றில் நடக்கும் மணல் திருட்டை வருவாய்த்துறையினர் கண்டும் காணாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.காளையார்கோவில் பகுதியில் நாட்டாறு உள்ளது. இதன் உட்பிரிவாக பல்வேறு கால்வாய்கள் உள்ளன. இதில் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வரும். மற்ற காலங்களில் தண்ணீர் இல்லாததால் நாட்டாறு மற்றும் கால்வாய்களில் மணல் திருட்டு நடந்து வருகிறது. அதப்படக்கி குரூப், ஆல்பட்ட விடுதி குரூப்பில் உள்ள நென்மேனி, கண்ணகிபுரம், பனங்குடி, கடியாவயல், கலசாங்குடி, கள்ளிக்குடி பகுதி, பெரியகண்ணனூர் குரூப் பகையஞ்சான், கடம்பங்குடி, கண்ணமுத்தான்கரை, சேம்பார் குரூப் மற்றும் ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் மணல் திருட்டு நடந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் டிராக்டர்களில் அள்ளப்படும் மணல் ஒரு லோடு ரூ.10ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இரவு நேரங்களில் டிராக்டரில் லைட் போடாமல் அதிக அளவிலான மணலை அள்ளி செல்கின்றனர். இதில் பல டிராக்டர்களில் நம்பர் பிளேட்டும் இருப்பதில்லை. ஆற்றை ஒட்டியுள்ள கால்வாய்களையும் இவர்கள் விடுவதில்லை. தினந்தோறும் அள்ளப்படும் மணலால் ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள அதப்படக்கி, நென்மேனி உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் நாட்டாற்றில் ஊற்று தோண்டி அதில் ஊறும் நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றில் மணலை அள்ளி வருவதால் கிராமத்தினருக்கு குடிநீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில அடி தூரத்திலேயே கிடைக்கும் நீர் தற்போது மிக ஆழமாக பள்ளம் தோண்டினாலும் கிடைப்பதில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஆற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது: ‘‘அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வருபவர்கள் மீது சிவகங்கை தாசில்தார், ஆர்டிஓ, கலெக்டர் வரை பல்வேறு புகார் மனு அளித்தோம். விவசாயிகள் குறைதீர் கூட்டங்களிலும் பலமுறை பேசியுள்ளோம். ஆனால் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அலுவலர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். ஒரு நாளைக்கு பல லோடு மண் அள்ளப்படுகிறது. சனி, ஞாயிறு கூடுதலாக அள்ளப்படுகிறது. வருவாயத்துறையினரின் துணையோடு இந்த மணல் திருட்டு நடக்கிறது. அதனால் மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்க்கிறது’’ என்றனர்.
Source: Dinakaran