 
                    
செம்பட்டி: கடும் வறட்சி காரணமாக செம்பட்டி பகுதியில் தார் விடும் முன்பே வாழை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆத்தூர் ஒன்றியம், செம்பட்டி பகுதியில் தென்னை, வாழை விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். ஆனால் இந்தாண்டு கடும் வறட்சி நிலவியதால் நீராதாரங்கள் எல்லாம் வறண்ட முகத்துடன் காட்சியளிக்கின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்தில் சென்று விட்டதால் தண்ணீர் பாய்ச்சுவதும் தடைபட்டுள்ளது. இதனால் வாழை, தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட ஆதிலெட்சுமிபுரம், வேலகவுண்டன்பட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழைகள் பயிரிட்டிருந்தனர். தற்போது அவை தார் விடும் முன்பே கருகி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘இந்தாண்டு வரலாறு காணாத வெப்பம், மழை சரிவர இல்லாதது போன்ற காரணங்கள் வாழைகள் தார் விடும் முன்பே கருகி வருகின்றன. அரசு எங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
Source: Dinakaran
 
            
 
                     
                    
