
திருப்பூர் : அருந்ததியர்களுக்கு உள்இடஒதுக்கீடு அதிகரித்து வழங்ககோரி ஆதி தமிழர் பேரவை மாவட்ட துணைத்தலைவர் திருப்பூரில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். திருப்பூர் மாவட்டம் வாவிபாளையத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மகன் மகேஷ்வரன் (35). பனியன் தொழிலாளி. ஆதி தமிழர் பேரவையின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடு கேட்டு மகேஷ்வரன் பல போராட்டம் நடத்தி சிறை சென்றவர். சமீபத்தில் உள்இடஒதுக்கீடு 3 சதவீதமாக இருப்பதை 6 சதவீதமாக உயர்த்த கோாி ேபாராடி வந்தார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு திருப்பூர் பார்க் ரோடு மின்கம்பம் அருகே கெரசின் கேனுடன் வந்த மகேஷ்வரன், திடீரென உடலில் ஊற்றி தீவைத்தார். அருந்ததியர் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என கோஷம் போட்டுள்ளார். நள்ளிரவு என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. மகேஷ்வரன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் இதுபற்றி போலீசுக்கு தெரிவித்தனர். வடக்கு போலீசார் வந்து மகேஷ்வரன் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தீக்குளித்த இடத்தில் இருந்து அடையாள அட்டை மற்றும் இடஒதுக்கீடு வலியுறுத்தி அவர் எழுதிய கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. அதில், அருந்ததியருக்கான உள்இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்து என்றும், இறப்புகள் தொடரலாம் என பல பக்கங்களில் எழுதியுள்ளார். இதுகுறித்து, திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Source: Dinakaran