Margali Madha Rasipalan | மார்கழி மாத ராசிபலன்கள் 17-12-2015 முதல் 14-01-2016 வரை
மேஷம்
செயல்பாடுகளில் வேகம் கூடும். திட்டமிட்டு நிலுவையில் இருந்த காரியங்களை முடிக்க நேரம் சாதகமாக அமையும். எடுத்த செயல்களில், நினைத்த காரியங்களில் வெற்றி உறுதியாகும். திட்டங்களை நிறைவேற்றும் வரை ஓய்வில்லாமல் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். வரவு சிறக்கும். சேமிப்பும் உயரும். பேச்சால் மதிப்பு உயரும். அதே நேரம் மற்றவர்கள் மனம் புண்படாமல் பேசுவது அவசியம். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவர். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையை குறைக்கும். அடுத்த வீட்டாரோடு இருந்த மனஸ்தாபம் நீங்கும். வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை. மாணவர்கள் செய்முறைப் பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். அவர்களது செயல்களில் முன்னோர்களின் சாயல் தெரியும். உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவதோடு அவரது பணிகளுக்கும் பக்கபலமாய்த் துணையிருப்பீர்கள். தொழிலில் நெடுநாளைய திட்டம் ஒன்றினை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். சுயதொழிலில் அதிகாரம் நிறைந்த பேச்சுகள் உங்கள் வெற்றிக்கு வலிமை சேர்க்கும். முன்னேற்றம் காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 6, 7
பரிகாரம்: பழனி ஆண்டவனை வணங்கி வாருங்கள்
ரிஷபம்
நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் இழுபறி தரும். முக்கியமான பணிகளை உடனடியாக முடிப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை சீராக உயர்வடையும். பேச்சில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும் கருத்துகள் நிறைந்திருக்கும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயலில் இறங்குவது அவசியம். வாகனங்களால் ஆதாயம் கிட்டும். மாணவர்கள் பாடங்களைப் புரிந்து கொண்டு படிப்பதில் முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளின் மனநிலையை புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கும். கூடுதல் அலைச்சலால் உடல்நல பாதிப்பை தடுக்க வேளைக்கு உணவருந்துவது அவசியம். வாழ்க்கைத்துணையோடு கலந்தாலோசிக்கும் நேரம் குறையும். குடும்பப் பெரியோர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். சுயதொழில் செய்வோர் அதிக அலைச்சலைக் காண்பர். உத்யோகஸ்தர்கள் அலுவலக பணியை முடிக்க இயலாமல் தடுமாற நேரிடும். சரிசம பலன்களைத் தரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 8, 9
பரிகாரம்: வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் தரிசனம் மன நிம்மதி தரும்.
மிதுனம்
மனமகிழ்ச்சி கூடும். நற்பலன்கள் ஏற்படும். நினைத்த காரியங்களை நடத்தி முடிப்பீர்கள். முக்கியமான பணிகளை உடனடியாக செய்துமுடிப்பது அவசியம். உறவினர்கள் வழியில் இடைஞ்சல்கள் வரும். சொத்து விவகாரங்கள் முடிவிற்கு வரும். பெற்றோர் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. கவுரவ செலவுகள் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். உடன்பிறந்தோருக்கு உதவப் போய் தர்மசங்கடமான சூழல் ஏற்படும். செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்து பாதிப்பு ஏற்படுத்தும். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயலில் இறங்குவது உத்தமம். உறவினர்களிடம் இருந்து சற்று விலகியிருப்பது நன்மை தரும். பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனம் அவசியம். மாணவர்கள் நண்பர்களோடு இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. வாகன பராமரிப்பு செலவு உயரும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் மனவருத்தம் தரும். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். தொழில்முறையில் அலைச்சல் கூடும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில போராட்டமான சூழல் நிலவும். எதிர்நீச்சல் போட்டு வெற்றி காண வேண்டிய மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 10, 11, 12
பரிகாரம்: காளிகாம்பாள் வழிபாடு கவலையைத் தீர்க்கும்.
கடகம்
எளிதில் முடிய வேண்டிய பணிகளுக்கும் கூடுதல் அலைச்சல் இருக்கும். எதிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. நிலுவையில் உள்ள பணிகளும் விரைவாக நடந்தேறும். வெளிநாட்டில் ேவலை கிடைக்குமா என்று ஏங்கி தவித்தவர்களுக்கு எதிர்பார்த்த பதில் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவுகள் கூடினாலும் அதற்கேற்ற வகையில் பணவரவும் தொடரும். பேச்சில் அன்போடு அதிகாரத்தையும் கலந்து வெளிப்படுத்துவீர்கள். உறவினர்கள் உங்கள் உதவி நாடி வரக்கூடும். உறவினர் வழியில் வரும் பிரச்னைகளை நிதானத்தோடு அணுகுவது அவசியம். மாணவர்கள் பாடங்களைப் புரிந்து படிப்பதில் முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்குப் பெருமை தேடித் தரும். வாழ்க்கைத்துணையின் மனநிலையைப் புரிந்துகொண்டு அனுசரணையான அணுகுமுறையை வெளிப்படுத்துவீர்கள். முன்னோர் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதிற்குள் வந்து போகும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் விலகும். தொழில்முறையில் அயராத உழைப்பால் சிறப்பான தனலாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்புயரும். காரியவெற்றி தரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 17, 18, ஜனவரி 13, 14
பரிகாரம்: மார்கழி அமாவாசை நாளன்று அருகிலுள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.
சிம்மம்
திட்டமிட்ட பணிகள் எளிதாகும். உங்கள் செயல்களில் வேகத்தோடு விவேகமும் வெளிப்படும். இக்கட்டான சூழலில் உங்களது விவேகமான செயல்பாடுகள் பிரச்னையின் தீவிரத்தை குறைக்கும். திறமையான பேச்சால் நற்பெயர் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அதே நேரத்தில் முன்பின் தெரியாத பெண்களால் பிரச்னைகள் உருவாகலாம். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் இழுபறி இருக்கும். அந்நிய மனிதர்களின் தலையீடு குடும்ப பிரச்னைகளைப் பெரிதாக்கும். யாரையும் எதிர்கொள்ளும் வலிமை கூடும். ஆயினும் வீண் வம்பு விவகாரங்கள் வரும் நேரம் இது என்பதால் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையை வெகுவாகக் குறைக்கும். மாணவர்கள் செய்முறைப் பயிற்சிகளில் அலட்சியம் காட்டாது அதிக கவனம் செலுத்துவது அவசியம். உஷ்ண உபாதையால் உடல்நிலையில் சிரமம் தோன்றலாம். வீண்வாதத்தால் வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான நேரம். சுயதொழில் செய்வோருக்கு தனலாபம் கிட்டும். எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 19, 20
பரிகாரம்: பிரதி செவ்வாய், சனிகிழமைகளில் யோகநரசிம்மரை வணங்கி வாருங்கள்.
கன்னி
அற்புதமான பலன்களை அனுபவிக்க உள்ளீர்கள். எதிர்காலம் உங்களை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்லும் என்பதில் ஐயமில்லை. மன உறுதி அதிகரிக்கும். வாழ்க்கை தரம் உயர்வடையும். குடும்பத்தில் அமைதி நிலவும். பேச்சில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும் கருத்துகள் இருக்கும். எதிலும் உங்களுக்கு சரியென்று பட்டதை உடனடியாக செய்து முடிப்பீர்கள். வரவு திருப்தி அளித்தாலும் சுபவிரயமும் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். உடன்பிறந்தோருடன் கொண்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சமாக பயன்படும். மாணவர்களின் எழுத்து வேகம் முன்னேற்றம் காணும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் மன நிலையை புரிந்துகொண்டு உங்கள் பணிகளுக்கு துணை நிற்பார். பொருளிழப்பை தடுக்க பண விவகாரங்களை கையாளும்போது அதிக கவனம் தேவை. அதிகம் பேசாது உங்கள் கருத்துகளை எழுத்து வடிவில் வெளிப்படுத்துவது நல்லது. சுயதொழில் செய்வோர் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவர். நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 21, 22
பரிகாரம்: புதுவருடப்பிறப்பு நாளன்று அருகிலுள்ள பெருமாள் கோயிலில் அன்னதானம் செய்யவும்.
துலாம்
மனோதைரியம் கூடும். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியத்தினையும் அசாத்தியமான மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெற துவங்கும். கன்னிப்பெண்களுக்கு திருமண யோகம் கூடிவரும். நல்ல காரியங்களில் அடுத்தவர்கள் பேச்சை பொருட்படுத்தாது மனதிற்கு சரியென்று பட்டதைத் தயங்காமல் செய்யுங்கள். காரிய வெற்றி சாத்தியமாகும். வேகத்தை விடுத்து விவேகத்துடன் செயல்படுவது அவசியம். வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தோருடன் மனஸ்தாபம் உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் உரிய நேரத்தில் செயலிழந்து சங்கடம் தரும். அண்டை வீட்டுக்காரர்கள் உங்கள் உதவி நாடி வருவர். குடியிருக்கும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். எதிர்பாராத திடீர் பிரயாணம் இருக்கும். வாகனங்களால் ஆதாயம் கிட்டும். பிள்ளைகளின் விவேகம் நிறைந்த செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் மனநிலையைப் புரிந்து கொள்வதில் சற்றே சிரமப்பட நேரிடும். தான, தரும காரியங்களில் அளவோடு செலவிடுவது நல்லது. உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பொறுப்பான பணிகளால் முக்கியத்துவம் பெறுவர். சுயதொழில் செய்வோர் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்வதற்கான நேரம் இது. தன்னம்பிக்கையால் வெற்றி காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 23, 24
பரிகாரம்: மஹிஷாசுரமர்த்தினியை வணங்கி வர மனோதைரியம் கூடும்.
விருச்சிகம்
சுகமான சூழல் உருவாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர் பிரயாணம் இருக்கும். சிந்தனை திறன் கூடும். செயல்களில் விவேகம் வெளிப்படும். உங்களை அறிந்தவர்களும், நண்பர்களும் தங்கள் பிரச்னைக்கு ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதில் வெற்றி கிட்டும். பணவரவு சிறப்பாகி சேமிப்பு உயர்வடையும். பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். இருப்பினும் எச்சரிக்கை தேவை. உடன்பிறந்தோருக்கு உதவி செய்வதில் திருப்தி கிடைக்கும். அண்டை, அயலாரின் துணையோடு பொதுப்பிரச்னைகளில் முன்நின்று செயல்படுவீர்கள். மாணவர்கள் வகுப்பில் முதலிடம் பிடிப்பர். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் சிறப்பான முன்னேற்றம் காணும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்கள் முன்னேற்றத்திற்குப் பெரிதும் துணைபுரியும். ஆன்மிகத்தின் பெயரால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால் கூடுதல் எச்சரிக்கை அவசியம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிட்டும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரியோடு நல்லுறவு நீடிக்கும். நற்பலன்களை அனுபவிக்கும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 25, 26
பரிகாரம்: தினசரி ஆண்டாள் பாசுரங்களை படித்து வரலாம். சனிக்கிழமைகளில் பெருமாள் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வரலாம்.
தனுசு
திட்டமிட்டு, விவேகத்துடன் செயல்பட்டால் வெற்றி எளிதாகும். நிலுவையில் இருந்த காரியங்கள், கனவுத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள கால நேரம் சாதகமாக உள்ளது. தங்க, வெள்ளி பொருட்கள் சேரும். கடன் சுமைகள் குறைந்து சேமிப்புகள் உயர்வடையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். சொல்ல நினைப்பதை நகைச்சுவை கலந்து கறாராகச் சொல்லிவிடுவீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் பணிச்சுமையை வெகுவாகக் குறைக்கும். இருந்த இடத்தில் இருந்தே சரியான நபர்களை இயக்கி காரியத்தினை சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் கலகங்கள் உண்டாகலாம். திருமணக்கனவில் உள்ளவர்களுக்கு யோகம் கூடிவரும். வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் தேவை. வாழ்க்கைத்துணை உங்களின் வேகமான செயல்களுக்கு பக்கபலமாய்த் துணைநிற்பார். அவரது வார்த்தைகள் உங்கள் வெற்றிக்கு சிறந்த ஆலோசனையாக அமையும். பூர்வீக சொத்துகளினால் ஆதாயம் கிட்டும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. சுயதொழில் செய்வோருக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு காண்பர். வெற்றி தரும் மாதமிது.
சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 27, 28
பரிகாரம்: ஆருத்ரா தரிசன நாளில்(டிச.26) அருகிலுள்ள சிவாலயத்தில் அன்னதானம் செய்யவும்.
மகரம்
சங்கடத்துடன் துவங்கினாலும் சிறப்பான நற்பலன்களைத் தரும். ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது உங்களை பொறுத்த வரை உண்மையாக இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்கத் தடுமாறினாலும் உரிய பாதையைத் தேர்ந்தெடுத்து பயணிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் இணைந்திருக்கும். சேமிப்பு முயற்சிகள் சிரமம் தரும். பேச்சில் வெளிப்படும் கறாரான கருத்துகள் மற்றவர் மனதைப் புண்படுத்தலாம். உடன்பிறந்தோர் பண உதவி கேட்டு உங்களை நாடி வரலாம். அண்டை, அயலாருக்கு உதவபோய் நேரமிழப்போடு தர்மசங்கடத்திற்கும் ஆளாவீர்கள். வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் தேவை. பிள்ளைகளின் ஆலோசனைகள் பயன்தரும். மாணவர்கள் கடும் உழைப்பினால் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அதிக அலைச்சலால் உடல்நிலையில் சிரமம் உண்டாகலாம். உங்கள் மனநிலையைப் புரிந்துகொண்டு வாழ்க்கைத்துணை தக்க ஆலோசனைகளை அவ்வப்போது வழங்குவார். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் மனநிம்மதி காண்பீர்கள். ஆன்மிகப் பெரியோர்களுடனான சந்திப்பு நற்சிந்தனை தரும். எதிர்பாராத தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழிலில் அலைச்சல் கூடும். சரிசம பலன்களைத் தரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 29, 30, 31
பரிகாரம்: வியாழன்தோறும் நவக்கிரக குரு பகவானுக்கு நெய்விளக்கேற்றி வழிபடுங்கள்.
கும்பம்
மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். இருப்பினும் நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக அமைந்து மனவருத்தம் இருக்கும். எனினும் சுற்றியுள்ளோரை மனமகிழ்ச்சியோடு வைத்திருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார சிக்கல் இருக்கும். உங்கள் பணிகளுக்கு உடன்பிறந்தோர் உதவுவர். செல்போன், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வீண் அலைச்சலை தவிர்த்து உதவிகரமாக இருக்கும். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பு கூடிவரும். திருமணம், சந்தான பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். கழிவறை, குளியலறை போன்ற தண்ணீர் புழங்கும் இடங்களில் நடக்கும்போது அதிக கவனம் தேவை. குதிகால் வலி, பாதத்தில் பித்த வெடிப்புகள் போன்ற பிரச்னைகளால் நடக்க சிரமப்படுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளில் பங்கெடுத்துக்கொண்டு துணைநிற்பார். கவுரவ செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவு இருக்கும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். சுயதொழில் செய்வோருக்கு அதிக அலைச்சல் இருந்தாலும் அதற்குரிய தனலாபம் உடனுக்குடன் கிட்டும். தடைகளைத் தாண்டி வெற்றி காணவேண்டிய மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 1, 2
பரிகாரம்: ஐஸ்வர்யேஸ்வரருக்கு பூஜை செய்து வாருங்கள்.
மீனம்
சிறப்பான செயல்பாடு வெற்றி தேடித்தரும். அவ்வப்போது குழப்பம், மன சஞ்சலம் இருந்தாலும் காரியவெற்றி சஞ்சலத்தை போக்கும். நண்பர்களின் ஆதரவும், விடாமுயற்சியும் உங்கள் வெற்றிக்குத் துணைநிற்கும். நிதி நிலை உயரத் துவங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சில் அறிவுரை நிறைந்த கருத்துக்களை நகைச்சுவையோடு வெளிப்படுத்தி நற்பெயர் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தலையெடுக்கும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் அவசியம். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழிலில் மிகுந்த பயன் தரும். புதிய நண்பர்களின் இணைவு உங்கள் செயல்திட்டங்களுக்கு உதவியாய் அமையும். பிள்ளைகளின் செயல்களில் முன்னோர்களின் சாயலை கண்டு பெருமிதம் கொள்வீர்கள். முன்னோர் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதிற்குள் வந்து போகும். வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. அடிக்கடி எதிர்பாராத பயணம் செய்ய நேரிடும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சுயதொழில் செய்வோர் சாதகமான நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நேரம் சாதகமாக இருக்கும். திடீர் பணவரவு உண்டு. விடாமுயற்சியாலும், உண்மையான உழைப்பாலும் வெற்றி காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 3, 4, 5
பரிகாரம்: நாகாபரண சிவபெருமானை வணங்கி வாருங்கள்.