
கோவை: கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி 4 பேர் பலியாகி இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தயுள்ளது. மேற்கு தொடர்ச்சியில் இருந்து அதிகாலையில் இறங்கி வந்த ஒற்றை காட்டு யானையானது, போத்தனூர் பகுதியில் வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த காயத்ரி என்ற 12 வயது சிறுமியை மிதித்து கொன்றது. அவரது தந்தையும் படுகாயமுற்றார். பின்பு அங்கிருந்து கிளம்பி காட்டு யானை, அருகில் இருக்கக்கூடிய வெள்ளளூர் பகுதியில் புகுந்திருக்கிறது. இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.00 மணிக்குள் இந்த பகுதிக்குள் தனியாக வெளியே வந்த ஜோதி மற்றும் நாகரத்தினம் என்ற பெண்களை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் பலியானார்கள். பின்பு பழனிசாமி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை, பழனிசாமியையும் தாக்கியது. இதில் பழனிசாமி உயிரிழந்துள்ளார். இந்த காட்டு யானை இதுவரை 4 பேரை கொன்றுள்ளது. மேலும் இந்த காட்டு யானை நேற்று வனப்பகுதி அதிகாரிகள் 2 பேரை தாக்கியது, இதில் 2 அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். காட்டு யானையை விரட்டும் பணியில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டால், அது பொதுமக்களுக்கு மிகவும் ஆபத்தாக முடியும். எனவே இந்த காட்டு யானையை பிடிப்பதற்காக வெவ்வேறு பகுதியில் இருந்து 4 கும்கு யானைகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பகுதிக்கு வந்த வனத்துறையினர், மயக்க மருந்து செலுத்தி யானைகளை பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் இந்த பகுதிக்குள் வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் இந்த பகுதிக்குள் வரவிடாமல் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த காட்டு யானையை கட்டுப்படுத்த கும்கி யானையால் மட்டுமே முடியும். எனவே கும்கி யானை வந்தால் மட்டுமே நிலமை சீராகும் என்று தெரிவித்துள்ளனர்.
Source: Dinakaran